Published:Updated:

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிமீது எனக்கு ஆசைதான்!

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிமீது எனக்கு ஆசைதான்!

கார்த்தி சிதம்பரம் ஓப்பன் டாக்

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கட்சியில் இருந்துகொண்டே, ‘காமராஜர் பெயரைச் சொல்லி தேர்தலில் ஜெயிக்க முடியாது’, ‘பூரண மதுவிலக்கு சாத்தியமில்லை’, ‘நடிகர்கள் வரிவிலக்கு கேட்கக் கூடாதா...’ என்பது போன்ற தடாலடி கருத்துகளால் சரவெடி கொளுத்துபவர் சிவகங்கை தொகுதி எம்.பி கார்த்தி சிதம்பரம். அண்மைக்கால அரசியல் நிலவரங்களை அவருடன் பேசினோம்...

‘‘கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டி எச்சரிக்கிற ராகுல் காந்தியே, இன்னமும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லையே... ஏன்?’’

‘‘தனிப்பட்ட ஒரு மனிதர், ஊசி போட்டுக்கொண்டாரா, மருந்து சாப்பிட்டாரா என்ற விவரத்தையெல்லாம் நீங்கள் அந்த தனிப்பட்ட மனிதரிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு எப்படித் தெரியும்? நான் தடுப்பூசி போட்டுக்கொண்டேன். அதற்கான சான்றிதழும் என்னிடம் இருக்கிறது. அவ்வளவுதான்!’’

‘‘நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய எதிர்க்கட்சித் தலைவரே, தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது கேள்விக்குள்ளாக்கப்படும்தானே?’’

‘‘என்னைப் பொறுத்தவரையில், இந்தியாவின் முதல் தடுப்பூசியை ஜனாதிபதிக்கும், இரண்டாவது தடுப்பூசியை பிரதமருக்கும்தான் செலுத்தியிருக்க வேண்டும். ஏனெனில், அவர்கள்தான் நாட்டு மக்களுக்கு முதல் முன்னுதாரணமாக இருந்திருக்க வேண்டும். ‘ஊசி போட்டுக்கொள்ள வேண்டுமா... வேண்டாமா?’ என்ற சர்ச்சையெல்லாம் இப்போது இல்லை. ‘ஊசி வேண்டும்’ என்று கேட்டுத்தான் ஒட்டுமொத்த மக்களும் வரிசையில் நின்றுகொண்டிருக்கிறார்கள். ராகுல் காந்தி என்ற தனிப்பட்ட மனிதர் ஊசி போட்டுக்கொண்டாரா, இல்லையா என்ற விவரங்கள் என்னிடம் இல்லை. இந்த விஷயத்தைச் சிலர் எதிர்மறையாக விளம்பரப்படுத்த நினைக்கிறார்கள். அதற்கு நான் விளக்கம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது.’’

‘‘சிவகங்கை தொகுதியில், உங்கள் மனைவி நிதியும் மக்களைச் சந்தித்துக் குறைகளைக் கேட்டறிகிறாரே... அவரும் அரசியலில் இறங்குகிறாரா?’’

‘‘இல்லையில்லை... என்னுடைய சிவகங்கை தொகுதி ரொம்பவும் பெரியது. எனவே, தொகுதியின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று மக்களைச் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்து மனு வாங்குவதற்கும், கட்சியினரின் நல்லது கெட்டதுகளில் கலந்துகொள்வதற்கும் என்னால் தினமும் சென்றுவர முடியவில்லை. இது போன்ற தருணங்களில் எனக்கு பதிலாக என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் செல்லும்போது, மக்களிடையேயும் பெரிய வரவேற்பு இருக்கிறது. எனவே, எனக்கு உதவியாகச் சென்று மக்களைச் சந்திக்கிறார். மற்றபடி அரசியலுக்குள் வருவதற்கோ அல்லது கட்சியில் சேருவதற்கோ அவரிடம் எந்த எண்ணமும் இல்லை.’’

‘‘ `விரைவில், சசிகலா தலைமையின்கீழ் அ.தி.மு.க வரும்’ என்றெல்லாம் கருத்து சொல்கிறீர்கள். ராகுல் காந்தி தலைமையின்கீழ் காங்கிரஸ் கட்சி எப்போது வரப்போகிறது என்பதையும் சொல்லிவிடுங்களேன்?’’

‘‘சசிகலா தலைமையின்கீழ் அ.தி.மு.க வந்துவிடும் என்று நான் என் விருப்பத்தைச் சொல்லவில்லை. என் அரசியல் அனுபவத்தில் தெரியவருவதைத்தான் சொல்கிறேன். ‘அமெரிக்கத் தேர்தலில் யார் ஜெயிப்பார்கள்?’ என்று நீங்கள் கேட்டால்கூட, என்னுடைய தனிப்பட்ட ஆய்வை முன்வைத்து கருத்து சொல்வேன்தான். அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் அதிகாரபூர்வமாக இப்போது ராகுல் காந்தி இல்லையென்றாலும்கூட, கட்சித் தொண்டர்கள் அனைவரும் அவரைத்தான் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகிறோம். கட்சியும் அவருக்கான முன்னுரிமையைக் கொடுத்துக்கொண்டுதான் வருகிறது.’’

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவிமீது எனக்கு ஆசைதான்!

‘‘ஏற்கெனவே தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளால் குடும்பங்கள் சீரழிந்துகொண்டிருக்கும்போது, ‘அரசே லாட்டரி விற்றால் கோடி கோடியாகக் கொட்டும்’ என்றெல்லாம் ஆலோசனை சொல்கிறீர்களே... நியாயமா?’’

‘‘லாட்டரியைக் கொண்டுவருவதில் தப்பே கிடையாது. வாரம் ஒரு கோடீஸ்வரன் வந்துவிட்டுப் போகட்டுமே! மக்கள் அனைவருக்கும் இலவசக் கல்வி, சுகாதார வசதியை வழங்க வேண்டுமென்றால், அரசுக்கு வருமானம் வேண்டும். அதற்கு லாட்டரி விற்பனையை அரசே நேரடியாகச் செய்ய வேண்டும். இப்போதும் இங்கே திருட்டு லாட்டரிகள் விற்பனையாகிக்கொண்டுதான் இருக்கின்றன. அப்படியிருக்கும்போது, லாட்டரி விற்பனையை வெளிநாடுகளில் இருப்பது போன்று முறைப்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொல்லிவருகிறேன். ஆதார் கார்டு இருப்பவர் மட்டுமே லாட்டரிச் சீட்டை வாங்க முடியும்; ஒருவர் இத்தனை டிக்கெட்டுகள் மட்டும்தான் வாங்க முடியும் என்றெல்லாம் விதிமுறைகளைக் கொண்டுவந்தால், அது நல்ல பலனளிக்கும் திட்டமாக இருக்கும்.’’

‘‘பெகாசஸ் உளவு மென்பொருள் குறித்து மத்திய பா.ஜ.க அரசைக் கேள்வி கேட்கிறது காங்கிரஸ் கட்சி. ஆனால், கடந்தகால காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலும்கூட அரசை நோக்கி தொலைபேசி ஒட்டுக்கேட்பு புகார்கள் எழுந்தனதானே?’’

‘‘சும்மா சாக்கு சொல்லக் கூடாது. இந்தியாவில் இந்த பெகாசஸ் சாஃப்ட்வேர் மூலமாக 1,400 பேரை உளவு பார்த்திருப்பதாகச் சொல்கிறார்கள். இதில், ஒவ்வொரு நபரின் செல்போனிலும் இந்த சாஃப்ட்வேரைப் பொருத்துவதற்கே தலா ஒரு கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அப்படியென்றால், 1,400 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதெல்லாம் யாருடைய பணம்? எதிர்க்கட்சிகளை இவர்கள் இப்படி ஒட்டுக் கேட்பதற்கா, மக்கள் வரிப்பணம் செலுத்துகிறார்கள்? உலகின் எந்த ஜனநாயக நாட்டில் இப்படியொரு விஷயம் நடந்திருந்தாலும், இந்நேரம் அந்த ஆட்சி கவிழ்க்கப்பட்டு, பிரதமர் அவரது வீட்டுக்கே போயிருப்பார்.’’

‘‘தமிழ்நாடு முழுக்க சூறாவளி சுற்றுப்பயணம் செய்துவருகிறீர்களே... தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் பொறுப்புக்கு வர ஆசைப்படுகிறீர்களா?’’

‘‘கடந்த 25 வருடங்களாகவே நான் கட்சிக்காகச் சுற்றுப்பயணம் செய்துவருகிறேன். அப்படிப் பார்த்தால், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பதவிக்காகத்தான் 25 வருடங்களாக நான் அச்சாரம் போட்டுவருவதாகச் சொல்வீர்களா? அப்படியெல்லாம் இல்லை. அதேசமயம், தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பணி செய்யும் ஆசையும் எதிர்பார்ப்பும் எனக்குள் இருக்கிறதுதான். மற்றவர்களைப்போல், ‘எனக்கு அப்படியெல்லாம் ஆசை இல்லை’ என்று நான் சொல்ல மாட்டேன். அப்படியொரு வாய்ப்பை அகில இந்தியத் தலைமை கொடுத்தால், அந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்கான தகுதியும் திறமையும் எனக்கு இருக்கிறது!’’