அரசியல்
அலசல்
Published:Updated:

சங் பரிவார் தூண்டுதலால்தான் சீமான் இப்படிப் பேசுகிறார்! - ‘சுளீர்’ கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி சிதம்பரம்

அ.தி.மு.க-வினர் ஒற்றைத் தலைமைக்கு அடிபணிந்தே பழக்கப்பட்டதால்தான், தற்போது கட்சிக்குள் சலசலப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது

‘‘விரைவில் சசிகலாவின் கைகளுக்கு அ.தி.மு.க செல்லும்’’ என்று ஆரூடம் சொல்லியிருக்கிறார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம். ‘அ.தி.மு.க-வினரே கண்டுகொள்ளாத சசிகலாமீது, இவர் இவ்வளவு நம்பிக்கை வைத்திருப்பதற்கான காரணம் என்ன?’ என்பதில் தொடங்கி, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சிகளுக்கு இடையேயான மோதல்கள், தி.மு.க மீதான எதிர்க்கட்சிகளின் விமர்சனம், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவி மீதான விருப்பம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் உரையாடினோம்...

‘‘விரைவில் சசிகலாவின் கைகளுக்கு அ.தி.மு.க செல்லுமென்று எதைவைத்துச் சொல்கிறீர்கள்?’’

‘‘பல காலமாக இதை நான் சொல்லிவருகிறேன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படாமல், ஓ.பி.எஸ்-ஐ ஜெயலலிதாவும், இ.பி.எஸ்-ஐ சசிகலாவும் முன்னிறுத்தியதால் தலைமைக்கு வந்தவர்கள். அது ஒரு சரித்திர விபத்து. அ.தி.மு.க-வினர் ஒற்றைத் தலைமைக்கு அடிபணிந்தே பழக்கப்பட்டதால்தான், தற்போது கட்சிக்குள் சலசலப்பு தொடர்ந்துகொண்டே இருக்கிறது. சசிகலா இதைப் பயன்படுத்தி, வெளியே வந்து எல்லோரையும் சந்திக்கத் தொடங்கினால், அ.தி.மு.க-வினர் அவர் பக்கம் சென்றுவிடுவார்கள் என்பதாலேயே நான் அப்படிச் சொல்கிறேன்.”

‘‘கடந்த எட்டு மாதங்களாக நிர்வாகிகளோடு பேசிக்கொண்டும், கடிதம் எழுதிக்கொண்டும்தானே சசிகலா இருக்கிறார்... ஆனால், தலைமைப் பொறுப்பு அவர் வசம் போகவில்லையே?’’

‘‘கண்டிப்பாக நடக்கும். ஆனால், சற்று மெதுவாக நடக்கும்... இது என்னுடைய கணிப்புதானே தவிர, விருப்பமில்லை!’’

‘‘அதிருக்கட்டும்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக வேண்டும் என்ற விருப்பம் உங்களுக்கு இப்போதும் இருக்கிறதா?”

‘‘காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆவதற்கான வயதும் அனுபவமும் எனக்கு இருக்கின்றன. வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நான் திறம்படச் செயல்படுவேன். ஆனால், முடிவை தேசியத் தலைமைதானே எடுக்க வேண்டும்!’’

‘‘தற்போது இருக்கும் தலைமையின் கீழ், தேர்தல்களில் காங்கிரஸ் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுவருகிறதுதானே?”

‘‘வெற்றிக்கும் தலைமைக்கும் தொடர்பு இல்லை. தி.மு.க கூட்டணியின் பலத்தால்தான் இந்த வெற்றி சாத்தியப்பட்டது. அதுதான் யதார்த்தம். கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் வெற்றிபெறுவது சாத்தியமில்லை என்பதற்கு, 2014 நாடாளுமன்றத் தேர்தலே சாட்சி. காங்கிரஸ் கட்சியும் கூட்டணிக்கு வலுசேர்க்கிறது என்பதும் உண்மை. ஆனால், அந்த வலு தனித்து நிற்கும்போது இருப்பதைவிட, கூட்டணியுடன் போட்டியிடும்போது கூடுதலாக இருக்கும் என்கிறேன்.’’

‘‘இந்த பதில் கூட்டணியில் காங்கிரஸுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தாதா?’’

‘‘இன்றைக்குக் கட்சி இருக்கும் நிலையில், நமக்கு என்ன பலம் இருக்கிறது என்று எடைபோட்டுத்தானே தொகுதிகள் ஒதுக்குவார்கள். கூட்டணிக் கட்சிகளுக்கு அதிக பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும், மதிக்க வேண்டும் என்றால், அதற்கு ஏற்றாற்போலக் கட்சியின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கு நிகராக காங்கிரஸ் கட்சியின் கட்டமைப்பு இல்லை என்பதுதான் யதார்த்தம். ஒரு காலத்தில் தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருந்த கட்சி, கடந்த ஐம்பதாண்டுகளாக ஆட்சியைப் பிடிக்க முடியாததற்குக் காரணமும் இதுதான்.’’

‘‘காங்கிரஸ், பா.ம.க., நாம் தமிழர் கட்சி... இவற்றில் தமிழ்நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி எது என்று நினைக்கிறீர்கள்?”

‘‘குறிப்பிட்ட பகுதிக்கான, சமூகத்துக்கான கட்சி, பா.ம.க. எனது சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் பா.ம.க-வுக்கு ஓர் உறுப்பினர்கூட இல்லை. நாம் தமிழர் கட்சி, அரசியல் ஆட்டத்திலேயே இல்லாத ஒன்று. கன்னியாகுமரியிலிருந்து ஓசூர் வரை மக்களிடம் பரவலாகியிருப்பது காங்கிரஸ் கட்சிதான். அந்த வகையிலும் வாக்குவங்கியின் அடிப்படையிலும் தி.மு.க., அ.தி.மு.க-வுக்கு அடுத்து காங்கிரஸ்தான் மூன்றாவது பெரிய கட்சி.”

சங் பரிவார் தூண்டுதலால்தான் சீமான் இப்படிப் பேசுகிறார்! - ‘சுளீர்’ கார்த்தி சிதம்பரம்

‘‘அப்படியிருக்கும்போது, அரசியல் ஆட்டத்திலேயே இல்லாத நாம் தமிழர் கட்சியுடன் காங்கிரஸ் மோதிக்கொண்டிருப்பது ஏன்?”

‘‘நாம் தமிழர் ‘க்ரிஞ்ச்’ அரசியல் செய்யும் கட்சி. அவர்களுக்கு விழும் வாக்குகளும் நிலையானவை இல்லை. குறிப்பிட்ட வயதுடையவர்களின் உணர்வுகளைத் தூண்டி, அப்போதைக்கு வாக்குகளைப் பெற்றுவிடுகிறார்கள். தமிழ்த் தேசியம் குறித்தும் தவறான கருத்துகளைப் பரப்பிவருகிறார்கள். அதுவரை எங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ராஜீவ் காந்தி படுகொலை குறித்துத் தொடர்ந்து தவறான தகவல்களைப் பரப்புவதோடு, காங்கிரஸ் தலைவர்கள் குறித்தும் அவதூறாகப் பேசுவதால்தான் அவர்கள் குறித்துப் பேச வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், நூறு நாள் வேலைத் திட்டம், தாய் மதம் திரும்புவது போன்ற விஷயங்கள் பற்றியெல்லாம் சீமான் சுயமாகப் பேசவில்லை. சங் பரிவார் இயக்கங்களின் தூண்டுதலால்தான் பேசுகிறார்.”

‘‘ஆனால், ‘தி.மு.க-தான் நாம் தமிழருக்கு எதிராகக் காங்கிரஸ் கட்சியைத் தூண்டுகிறது’ என்று சீமான் குற்றம்சாட்டுகிறாரே?’’

‘‘அரசியல் ஆட்டத்திலேயே இல்லாத நாம் தமிழருக்கு எதிராக தி.மு.க ஏன் எங்களைத் தூண்டிவிட வேண்டும்... அவர்களுக்கு வேறு வேலைகள் இல்லையா என்ன?”

“ ‘தி.மு.க ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது’ எனவும், ‘தி.மு.க பழிவாங்கும் அரசியல் செய்கிறது’ எனவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்களே?”

‘‘சாதியை அடிப்படையாக வைத்துத்தான் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏற்படுகிறது. சாதி, ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்னை. குறிப்பாகத் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில், சாதியால் மிகப்பெரிய அளவில் சட்டம், ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. அதைக் கட்டுப்படுத்த தி.மு.க கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் என்மீது கிட்டத்தட்ட ஐந்து முறை வருமானவரிச் சோதனை நடத்தினார்களே... அப்போது அவர்களுக்கு ஏன் இந்த ஞானோதயம் வரவில்லை. கடந்த ஆண்டுகளில் அவர்களின் சொத்து மதிப்பு எந்த அளவு வளர்ந்திருக்கிறது என்பதை வைத்துத்தான் சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது பொதுமக்களுக்கும் தெரியும்!”