Published:Updated:

என் ட்வீட்டை கலைஞர் பார்த்திருந்தால் ரசித்திருப்பார்!

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம் நையாண்டி...

என் ட்வீட்டை கலைஞர் பார்த்திருந்தால் ரசித்திருப்பார்!

கார்த்தி சிதம்பரம் நையாண்டி...

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள், காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறதென்றால், தேர்தல் முடிவுகளை முன்வைத்து காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் பதிவிட்ட ‘இப்போது நெட்ஃபிளிக்ஸில் என்ன படம் பார்க்கலாம்..?’ ட்வீட் கதர்ச் சட்டைக்காரர்களைக் கதறவைத்திருக்கிறது! ‘ஏன் இப்படி?’ என்ற கேள்வியோடு கார்த்தி சிதம்பரத்தை நேரில் சந்தித்தோம்...

“காங்கிரஸ் கட்சி, ஐந்து மாநிலங்களிலும் படுதோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்த்தீர்களா?’’

“இல்லை... நிச்சயமாகவே இந்த முடிவுகள் எங்களுக்கு ஏமாற்றம்தான். ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி அரசியல் இலக்கணம் இருக்கிறது. அந்தவகையில், நான்கு மாநிலங்களில் ஒவ்வொரு வகைப்பாட்டில் காங்கிரஸ் கட்சியின் வெற்றியை எதிர்பார்த்தோம். உத்தரப்பிரதேசத்தில் மட்டும் எங்களுக்குப் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இல்லை. வாக்குவங்கி கொஞ்சம் உயரும் என்று மட்டுமே எதிர்பார்த்தோம். அதேசமயம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் அரசியல் குறித்து எனக்குப் பெரிதாக எதுவும் தெரியாது.’’

“பிரியங்கா காந்தி தலைமை எடுபடவில்லை என்பதைத்தானே உ.பி தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன?’’

“எடுபடவில்லை என்பதைவிட, அதற்கான கட்டமைப்புகள் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது, தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கிவருகிற ஆர்.எஸ்.எஸ்., பஜ்ரங்தள், வி.ஹெச்.பி உள்ளிட்ட துணை அமைப்புகளின் ஆதரவு பா.ஜ.க-வுக்கு இருக்கிறது. இந்தத் துணை அமைப்புகள் தேர்தலில் போட்டியிடுவதில்லை. ஆனால், ‘இந்துத்துவா’ கொள்கை வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில், பா.ஜ.க-வை வெற்றிபெறவைப்பதற்காக வேலை செய்கின்றன. அதனாலேயே, பா.ஜ.க-வுக்கு இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியப்படுகிறது. ஆனால், இது போன்ற துணை அமைப்புகள் காங்கிரஸிடம் இல்லை. இது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்!’’

“எல்லாம் சரி... நெட்ஃபிளிக்ஸில் என்னென்ன படங்கள் பார்த்தீர்கள்?’’

“என் ட்வீட்டை சிலர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். அன்றைய தினம் தொடர்ச்சியாக காங்கிரஸ் ஐந்து மாநிலங்களிலும் பின்தங்கியிருந்த சூழலில், தேர்தல் முடிவுகள் எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை. அதனால், அதற்குமேல் என்னால் தொடர்ந்து செய்திகளைப் பார்க்கவும் முடியவில்லை. எனவேதான், என்னை நானே சுய பகடி செய்துகொள்ளும் வகையில், அப்படியொரு ட்வீட்டைப் பதிவு செய்தேன். என்னுடைய நகைச்சுவையை நிறைய பேர் புரிந்துகொண்டார்கள். புரிந்துகொள்ள முடியாதவர்கள்தான் விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள்!’’

“தேர்தல் தோல்வி ஏற்படுத்தியிருக்கும் வலி புரியாமல், சொந்தக் கட்சியையே கலாய்த்தது நியாயம்தானா?’’

“நானும் தேர்தல் தோல்விகளைச் சந்தித்தவன்தான்... அந்த வலி எனக்குத் தெரியாதா? எனது அரசியல் அனுபவத்தைப் பற்றித் தெரியாதவர்கள்தான் ‘எனக்கு வலி தெரியாது’ என்று சொல்வார்கள். காங்கிரஸ் கட்சி நன்றாக இருந்தால்தான், நானும் நன்றாக இருக்க முடியும். எனவே, காங்கிரஸின் வெற்றி எனக்கு எப்படி மகிழ்ச்சியைத் தருகிறதோ, அதேபோல் கட்சியின் தோல்வியும் எனக்கு வருத்தத்தைத் தருகிறதுதான். கலைஞரைப்போல, நகைச்சுவை உணர்வும், அரசியல் புரிதலும் உள்ளவர்கள்தான் என்னுடைய ‘Self Deprecating Humour’-ஐ ரசிக்க முடியும்.’’

“தி.மு.க-வினர் பலரும், ‘காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு உங்களைப் போன்றவர்கள்தான் காரணம்’ என்று கமென்ட் செய்துள்ளனர், கவனித்தீர்களா?’’

“உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் என்று அனைத்து இடங்களிலும் காங்கிரஸ் தோற்றதற்கு நான்தான் காரணமா... எனக்கென்ன அந்த அளவுக்குக் கட்சியில் சர்வ வல்லமையைக் கொடுத்திருக்கிறார்களா? இப்படியெல்லாம் கமென்ட் செய்பவர்கள் சோஷியல் மீடியாவிலேயே இருக்கவேண்டியதுதான். அதைத் தாண்டி அவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. என்னுடைய அரசியல் நையாண்டியைப் புரிந்துகொள்ள முடியாதவர்கள், கலைஞர் வழியில் வந்தவர்களாகவே இருக்க முடியாது. ஏனெனில், தமிழ்நாட்டு அரசியலில் கலைஞரைப்போல் நக்கல், நையாண்டி செய்த அரசியல்வாதியை நான் பார்த்ததே இல்லை. எனது இந்த ட்வீட்டை மட்டும் கலைஞர் பார்த்திருந்தால், நிச்சயம் ரசித்துச் சிரித்திருப்பார்!’’

என் ட்வீட்டை கலைஞர் பார்த்திருந்தால் ரசித்திருப்பார்!

“அதேநாளில், ‘தலைமைப் பண்பு’ குறித்த புத்தகத்தின் அட்டைப்படத்தையும் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறீர்களே... ராகுல் காந்திக்குப் பரிந்துரைக்கிறீர்களா?’’

“அப்படியெல்லாம் நான் யாருக்கும் பரிந்துரைக்கவில்லை. கரூரிலிருந்து என் தாய்வழி உறவினரான வித்யா என்பவர் ஒரு வாரத்துக்கு முன்பே, ‘தலைமை என்பது ஒரு மாயைக்குள் இருக்கக் கூடாது’ என்று விவரிக்கும் அந்த நூலை எனக்கு அனுப்பிவைத்துப் படிக்கச் சொல்லியிருந்தார். இதற்கெல்லாம்கூட உள்ளர்த்தம் கற்பித்துக் கேள்வி கேட்டால் எப்படி?’’

“ஐந்து மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்குத் தலைமையே காரணம் என்ற விமர்சனம் எழுந்துள்ள சூழலில், ‘தலைமைப் பண்பு’ குறித்த நூலைப் பதிவிட்டால் சந்தேகம் எழுவது இயல்புதானே?”

“தினமும் நான் பல ட்வீட்களைப் பதிவிடுகிறேன். ஆனால், தேர்தல் முடிவு வெளியான தினத்தன்று மொத்தமே இரண்டு ட்வீட்கள்தான் பதிவிட்டேன். அந்த இரண்டு ட்வீட்களையும்வைத்து இப்படியெல்லாம் விமர்சித்துக்கொண்டிருந்தால், நான் என்னதான் சொல்ல முடியும்? தினமும் சாப்பிடுவதையும், செல்ஃபி எடுப்பதையும்கூடப் பலரும் பதிவிடுகிறார்கள். நான் இப்போது படித்துக்கொண்டிருக்கும் புத்தக அட்டையைப் பதிவிட்டிருக்கிறேன்... அவ்வளவுதான்!’’

“தலைமைத்துவம் பற்றிய புத்தகத்தைப் படிக்கிறீர்கள்... விரைவில் நீங்கள் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராகப் போகிறீர்கள் என்று எடுத்துக்கொள்ளலாமா?’’

“அந்தப் பதவியை எனக்குக் கொடுத்தால், அதைச் சிறப்பாக செய்யத் துடிக்கும் ஆர்வமும் திறமையும் எனக்கு உண்டு. ஆனால், என்னைப்போல் வெளிப்படையாகப் பேசுபவனுக்கு, இந்த அரசியலே தேவையா என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. இந்த நிலையில், எனக்கு எப்படிக் கட்சித் தலைவர் பதவி கொடுப்பார்கள்?’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism