Published:Updated:

“நோ மேன்’ஸ் லேண்ட்-டாக இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்!”

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

- கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

“நோ மேன்’ஸ் லேண்ட்-டாக இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்!”

- கார்த்தி சிதம்பரம் விமர்சனம்

Published:Updated:
கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
கார்த்தி சிதம்பரம்

அண்ணாமலையுடனான செல்ஃபி எடுத்த சூட்டோடு சூட்டாக ட்ராவல் மோடில் இருந்த காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்தை அவரது காரைக்குடி பயணத்தின் போது தொடர்பு கொண்டோம். ராகுல் காந்தியின் பாத யாத்திரை, தமிழக காங்கிரஸ் நிலை போன்ற நம் பல்வேறு கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் இங்கே...

“ ‘தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியோடு கூட்டணி வைத்திருப்பதால், காங்கிரஸ் கட்சிக்கு முழுமையான சுதந்திரம் இல்லை’ என்று சொல்லியிருக்கிறீர்களே?”

“தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஒரு ‘நோ மேன்ஸ் லேண்ட்’-டாக இருக்கிறது. காரணம் அரசாங்க அதிகாரம் எங்களிடம் இல்லை. எங்களைச் சார்ந்தவர்கள் அமைச்சராகவும் இல்லை. எனவே, அரசாங்கத்தில் எங்களுக்குக் கூட்டுப் பொறுப்பும் கிடையாது. அதேநேரத்தில், கூட்டணி வைத்திருப்பதால் முழுமையான எதிர்க்கட்சியும் கிடையாது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன்தான் கட்சி செயல்பட வேண்டியிருக்கிறது. இதற்கு, இன்னொருவர் கட்டுப்பாட்டில் இருக்கிறோம் என்று பொருள் இல்லை... ஆனால், கூட்டணியை மதிக்க வேண்டியிருக்கிறது.”

“காங்கிரஸ் பலமாக இருக்கும் மாநிலங்களிலெல்லாம் போட்டியிட்டு, காங்கிரஸ் வெற்றியை பாதிக்கிற ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவாலை, தமிழகம் அழைத்துவருகிறாரே முதல்வர்?”

“அது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், ஒரு கட்சியின் பலம், பலவீனத்துக்கு முழுப் பொறுப்பு அந்தக் கட்சியைச் சார்ந்தவர்கள்தான். பிறரைக் குறைகூறக் கூடாது. தேசிய அளவில் இந்தி, இந்துத்துவா கொள்கைக்கு மாறாக எங்களால் ஒரு மாற்றுக் கொள்கை கொடுத்து, எங்கள் பின்னால் மக்களை அணிதிரட்ட முடியவில்லை என்பதை முதலில் நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். லோக்கல் லீடர்ஷிப்பும் பலமாக இல்லாமல்... அமைப்பும் பலமாக இல்லாமல் இருந்தால் கட்சி வீக்காகத்தான் இருக்கும்.”

“நோ மேன்’ஸ் லேண்ட்-டாக இருக்கிறது தமிழ்நாடு காங்கிரஸ்!”

“அப்படியென்றால் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் பலவீனமாகத்தான் இருக்கிறதா?”

“ஆம்... தமிழ்நாட்டில் 1967-ல் ஆட்சியை விட்டோம். அதன் பிறகு கூட்டணியை நம்பித்தானே தேர்தலில் நிற்கிறோம்... 1989-ல் திரு.மூப்பனாரை முதல்வர் வேட்பாளராக நிறுத்தி தனித்துப் போட்டியிட்டதிலும் பலன் இல்லை. அதன் பிறகு, இவர்தான் முதலமைச்சர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு ஒரு தலைவரும் எங்களுடைய இயக்கத்திலிருந்து உருவாகவில்லை. இதுவே எங்கள் வளர்ச்சிக்கு ஒரு பின்னடைவாக இருக்கிறது.”

“ ‘ராகுல் காந்தி வெற்றிபெற வாய்ப்புள்ள இடத்தில் நிற்கிறாரே தவிர, வெற்றிக்காக உழைக்கத் தயாராக இல்லை’ என்கிற காட்டமான விமர்சனம் முன்வைக்கப்படுகிறதே?”

“வெற்றி தோல்விக்கு ஒரே நபர் பொறுப்பாக இருக்க முடியாது. வெற்றிக்கோ, தோல்விக்கோ கூட்டு முயற்சிதான் காரணம். அமைப்பு பலவீனமாக இருப்பதற்கு ஒருவரை மட்டும் குறை சொல்வதற்கோ அல்லது ஒருவருக்கே எல்லாப் புகழும் கொடுப்பதற்கோ என்றைக்கும் நான் உடன்படுவது கிடையாது.”

“காங்கிரஸிலேயே நிறைய கோஷ்டிப்பூசல் இருக்கும்போது, அ.தி.மு.க-வை சசிகலா கைப்பற்றுவார் என்பது போன்ற கருத்துகளெல்லாம் தேவைதானா?”

“கட்சி என்றிருந்தால், அதில் பல கருத்துகள், வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். அப்படி இருந்தால்தான் ஜனநாயகரீதியாக கட்சி உயிரோட்டமாக இருக்கிறது என்று அர்த்தம். ஓர் அரசியல் விமர்சகனாகத்தான் என் கருத்தை முன்வைத்தேன். ஆனால், சசிகலா குறித்த என் கணிப்பு தவறு என்பதை இப்போது ஏற்றுக் கொள்கிறேன். சசிகலாவுக்கு அந்தத் துணிச்சல் இல்லை.”

“ட்விட்டரில் அதிகம் புழங்கும் நீங்கள் அமைச்சர் பி.டி.ஆர்., அண்ணாமலையின் ட்வீட் போரை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“கொள்கைரீதியாக, கட்சிரீதியாக கருத்து வேறுபாடு இருந்தால் அதை விமர்சிக்கலாம். தனிப்பட்ட முறையில், கொச்சையான வார்த்தைகளைப் பயன்படுத்துவது அரசியல் நாகரிகம் கிடையாது. இருவரையும் தனிப்பட்ட முறையில் எனக்குத் தெரியும். அவர்கள் அதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்பதே என் கருத்து.”

“அண்ணாமலையுடனான சந்திப்பின்போது, சீனியர் என்ற முறையில் அவருக்கு அரசியல் டிப்ஸ் ஏதாவது கொடுத்தீர்களா?”

“அவருக்கு டிப்ஸ் கொடுக்க நான் என்ன கோச்சா... இருவரும் ஒரே ஃப்ளைட்டில் இருந்தோம். யதார்த்தமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது ஒரு போட்டோ எடுத்தது குற்றமா?”

“உங்கள் தந்தைபோலின்றி, நீங்கள் ‘நான் ஓர் இந்து’ என்று அடிக்கடி வெளிக்காட்டிக் கொள்கிறீர்களே... இதை உங்கள் திராவிட இயக்க நண்பர்கள் ஏற்றுக்கொள்வார்களா?”

“கடவுள் நம்பிக்கை இருக்கிறவர்களிடம் முற்போக்கு சிந்தனை கிடையாதா... கோயில், வழிபாடு என இருந்தாலும் சமுதாயரீதியாக, விஞ்ஞானரீதியாக முற்போக்கு சிந்தனை உள்ளவன் நான். இன்றைக்குக்கூட நான் கோயிலுக்குப் போனேன். என்னுடன் திராவிட முன்னேற்றக் கழக நண்பர்களும் வந்தனர். தி.மு.க-காரர்கள் கோயிலுக்குப் போவதில்லை, கடவுள் நம்பிக்கை இல்லை என்பதெல்லாம் பழைய தியரி.”

“ `பிரதமர் மோடிக்கு இணையான தலைவர் நாட்டில் இல்லை’ என்கிற பா.ஜ.க-வினரின் வாதத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“மோடி அளவுக்கு, மோடிக்கு இணையாகச் சொல்லும் அளவுக்கு வேறு எந்தத் தலைவரும் இல்லை என்கிற அவர்களது வாதம் எனக்குப் பிடிக்கவில்லை என்றாலும், ஏற்றுக்கொள்கிறேன்.”

“அப்படியான தலைவர் ஏன் இல்லை என்பதை காங்கிரஸார் ஆய்வு செய்ததுண்டா?”

“அப்படி ஒரு தலைவர் காங்கிரஸில் இல்லை என்பது பின்னடைவுதான். கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் பெரும்பாலானோர் ‘ராகுல் காந்திதான் தலைவராக வர வேண்டும்’ என்று விரும்புகிறார்கள். ஆனால், அவர் தலைமை ஏற்பாரா, ஏற்க மாட்டாரா என்பதையெல்லாம் அவரிடம்தான் கேட்க வேண்டும்!”