அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது இயற்கை மரணம்தான்! - நம்புகிறார் கார்த்தி சிதம்பரம்

கார்த்தி சிதம்பரம்
பிரீமியம் ஸ்டோரி
News
கார்த்தி சிதம்பரம்

சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் ஆக்கபூர்வமான அரசியல் விவாதம் ஏதும் நடக்கிறதா என்ன... ராஜ ராஜ சோழனின் மதம் என்ன... சினிமா சார்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது... என்றுதானே சூழல் இருக்கிறது.

அகில இந்திய காங்கிரஸுக்கான தலைவர் தேர்தலில், ‘சசி தரூர்தான் வெற்றிபெறுவார்’ என்ற காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆரூடம் பொய்த்து, மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றிருக்கிறார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தேன்...

“ ‘இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று சசி தரூருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவுசெய்து வந்தீர்கள். சசி தரூரின் தோல்வியில் உங்களுக்கு வருத்தம் உண்டா?”

“இதில் எனக்கு என்ன வருத்தம்... நான் எதிர்பார்த்ததுபோலத்தான் தேர்தல் முடிவு வெளியாகியிருக்கிறது. ஆனாலும், சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றதே மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கிறது.”

“காங்கிரஸில் நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த ஜி-23 தலைவர்களில் ஒருவர் சசி தரூர். அவரை நீங்கள் ஆதரிப்பதற்கு ஏதும் உள்ளார்ந்த காரணங்கள் இருக்கின்றனவா?”

“கட்சியை மறுசீரமைக்க சில சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றால் நேரு, காந்தி குடும்பத்தை எதிர்க்கிறார்கள் என்று அர்த்தமா... இது எங்கள் கட்சியின் அதிகார மையங்களில் காலங்காலமாகக் கால் ஊன்றியவர்களின் பொய்ப் பிரசாரம். ஜி-23, ‘கட்சித் தலைமைக்குத் தேர்தல் நடத்துங்கள், நிர்வாகிகளை நியமிக்க வேண்டும்’ என்றுதான் சொன்னார்களே தவிர, இவர்கள் வேண்டாம், அவர்கள் வேண்டாம் என்று சொல்லவில்லையே?”

“அப்படியென்றால் கார்கேவின் வெற்றியை ஜி-23 தலைவர்களின் வெற்றியாக எடுத்துக்கொள்ளலாமா?”

“இது ஜி-23-க்கு மட்டும் வெற்றி கிடையாது, பல பேர் பல நேரங்களில் மாற்றங்கள் வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதற்கான வெற்றிதான் இது. ஜி-23-ன் பெரும்பாலான கருத்துகளை நான் வெளிப்படையாகவே ஆதரிக்கிறேன். ஆனால், அந்தக் கருத்துகளை ஆதரிப்பதற்கு ஜி-23-க்கே இப்போது தைரியம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.”

“ ‘யார் தலைவராக வந்தாலும் நேரு குடும்பமே மானசிகத் தலைமையாக இருக்கும்’ என்று பேசியிருக்கிறீர்களே... அப்படியென்றால், புதிய தலைவர் ‘பொம்மை’ என்கிறீர்களா?”

‘‘பொம்மை என்று எப்படிச் சொல்ல முடியும்... காங்கிரஸ் கட்சிக்கும், நேரு குடும்பத்துக்கும் உணர்வுபூர்வமான ரத்த உறவு என்றும் இருக்கிறது. அந்தக் குடும்பத்திலிருந்து இரண்டு பிரதமர்கள் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். எனவே, அவர்களின் ஆலோசனை, வழிகாட்டுதல் இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?”

“தமிழ்நாட்டு அரசியலை ‘உணர்ச்சி; கவர்ச்சி; வளர்ச்சி’ என்று விமர்சனம் செய்திருந்தீர்களே?”

“ஆம்... சமீபகாலமாகத் தமிழ்நாட்டில் ஆக்கபூர்வமான அரசியல் விவாதம் ஏதும் நடக்கிறதா என்ன... ராஜ ராஜ சோழனின் மதம் என்ன... சினிமா சார்ந்தவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடக்கிறது... என்றுதானே சூழல் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் இப்போது மின்சாரத்துறை, உயர் கல்வி இரண்டையும் முக்கிய பிரச்னைகளாகப் பார்க்கிறேன். மின்துறையில் இருக்கும் கடன், அதை எப்படிக் குறைப்பது; உயர்கல்வியில் வருடத்துக்கு நான்கரை லட்ச ரூபாய் கட்டணம் ஏற்புடையதா... என்பதைப் பற்றியெல்லாம் விவாதிக்க இங்கு யாரும் தயாராகவே இல்லையே.”

“ஆளும் அரசின் கூட்டணியிலிருக்கும் நீங்கள் அரசுக்கு எடுத்துச் சொல்லலாமே?”

“சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், அவை ஆக்கபூர்வமான விவாதங்களாக மாறவில்லை. மின்துறை சார்ந்து ஆறு பக்கங்களுக்கு எழுதியிருக்கிறேன். அதையெல்லாம் கேள்வி கேட்கவோ அல்லது விவாதிக்கவோ யாரும் முன்வருவதில்லையே... மாறாக, நான் பிரியாணி சாப்பிடுவது, நெட் ஃபிளிக்ஸில் படம் பார்ப்பது பற்றிச் சமூக வலைதளங்களில் பதிவிட்டால் உடனே கமென்ட் போடுகிறார்கள்.”

“ஒருபக்கம் ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரை... மறுபக்கம் ராஜஸ்தான், காஷ்மீர் மாநில காங்கிரஸில் சரிவுகள்... இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“யாத்திரைக்கும், கட்சியின் சரிவுக்கும் சம்பந்தம் கிடையாது. மக்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்கிற நோக்கில்தான் ராகுல் காந்தியின் யாத்திரை நடக்கிறதே தவிர, தேர்தலை மையமாகவைத்து அல்ல. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்னை உண்டு. அதையெல்லாம் அந்தந்த மாநிலத் தலைமையிடம் உட்கார்ந்து பேச வேண்டும்.”

“ `இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடையவில்லை, டாலர் மதிப்புதான் உயர்ந்திருக்கிறது’ என்கிறாரே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்?”

“நானும் ஜோ பைடனும் டென்னிஸ் விளையாடினோம். அவர் வெற்றி பெற்றுவிட்டார். ஆனால், நான் தோற்கவில்லை, என்பதுபோல் இருக்கிறது அவரது கருத்து.”

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றிய உங்கள் மதிப்பீடு?”

“ஜெயலலிதா மரணத்தில் ஒரு சந்தேகமும் எனக்குக் கிடையாது. அவர் சர்க்கரை நோயாளி. எந்த உடற்பயிற்சியும் செய்யவில்லை. ஒழுங்கான டயட்டும் கிடையாது. அதோடு அவர் குடும்பத்தில் நிறைய பேருக்கு இதயக் கோளாறு உண்டு. அதனால் ஜெயலலிதாவுக்கு நிகழ்ந்தது இயற்கை மரணம்தான் என்று நான் நம்புகிறேன்.”