Published:Updated:

நான்காம் தர அரசியல்வாதி அண்ணாமலை... வக்கிரமானவர் சீமான்!

 ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி

- பொரிந்து தள்ளும் ஜோதிமணி

நான்காம் தர அரசியல்வாதி அண்ணாமலை... வக்கிரமானவர் சீமான்!

- பொரிந்து தள்ளும் ஜோதிமணி

Published:Updated:
 ஜோதிமணி
பிரீமியம் ஸ்டோரி
ஜோதிமணி
பா.ஜ.க அலுவலகம் முற்றுகை, சர்ச்சைக்குரிய வீடியோவுக்கான சீமானின் கருத்துக்கு எதிர்ப்பு எனத் தமிழக அரசியல் களத்தில் கொஞ்ச நாளாக காத்திரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் செ.ஜோதிமணி. அவரைச் சந்தித்து, சில கேள்விகளை முன்வைத்தோம்...

“மத்திய அரசு, தமிழ்நாடு அரசு இரண்டையும் கவனிக்கும் வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது. தமிழ்நாட்டின் அரசியல் சூழல் இப்போது எப்படி இருக்கிறது?”

“அ.தி.மு.க அரசு மோடிக்கு அடிமையாக இருந்ததால், கடந்த பத்து ஆண்டுகளில் மிகவும் பின்தங்கிவிட்டோம். வேலைவாய்ப்பின்மை, பொருளாதாரச் சிக்கல் எனப் பல நெருக்கடிக்குள் தமிழ்நாடும் சிக்கியிருக்கிறது. தமிழ்நாடு தற்போது கடந்தகால அரசுகளின் கூட்டுக் கொள்ளையிலிருந்து தப்பி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் விடியலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதற்கான சமிக்ஞைகள் உருவாகியிருக்கின்றன.”

“அரசியலில் ஈடுபடும் பெண்களைத் தவறாகச் சித்திரிக்கும் போக்கு தொடர்ந்துகொண்டுதானே இருக்கிறது?”

“உண்மைதான். எந்தச் சித்தாந்தத்தைக் கொண்ட அரசியல் கட்சியின் ஆட்சியாக இருந்தாலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இப்போது சில கட்சிகள் அவற்றை ஆதரிக்கும் மனப்போக்குடன் நடந்துகொள்வதுதான் ஆபத்தானது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் பா.ஜ.க தலைவர்களே முதன்மையாக இருப்பதைக் காண முடிகிறது. அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கி சட்டத்தின் முன் நிறுத்தாமல், குற்றங்களிலிருந்து காப்பாற்றுவதோடு கட்சியில், ஆட்சி அதிகாரத்தில் முக்கிய இடமளிப்பது அதனினும் வேதனை!”

“விசாரணை கமிஷன் அமைத்து, அதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என பா.ஜ.க உத்தரவிட்ட பின்னும் போராடும் உங்கள் செயல், பா.ஜ.க தலைவர்கள் மட்டும்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிகம் ஈடுபடுவதாகக் கட்டமைக்க முனைவதாக இருக்கிறதே?

“விசாரணை நடக்கட்டும். ஆனால், இனி பா.ஜ.க-வில் இருக்கும் தலைவர்களை அந்தக் கட்சியின் தொண்டர்கள் எந்த நம்பிக்கையில் வீட்டுக்குக் கூட்டிச் செல்வார்கள்? கே.டி.ராகவன் மீது எழுந்த புகார்தான் தமிழக பா.ஜ.க-வில் எழுந்த முதல் பாலியல் குற்றச்சாட்டா? இல்லையே... இதே மாதிரி பாலியல் புகார்களில் பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து ஈடுபடுகிறார்கள் என்பதோடு பா.ஜ.க-வில்தான் அதிக அளவில் பாலியல் குற்றச்சாட்டுகள் நடக்கின்றன என்பதும் அண்ணாமலை பேசும் ஆடியோவில் இருக்கிறது. ‘சாதாரணப் பெண்கள் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்கள் கை கால்களில் விழுந்தாவது பெயர்கள் வெளிவராமல் காப்பாற்றியிருப்பேன்’ என ஒரு நான்காம் தர அரசியல்வாதிபோல அண்ணாமலை பேசுகிறார். எனவே, பா.ஜ.க மீது நானாக எதையுமே கட்டமைக்கவில்லை. உண்மை அது தான். அதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்.”

நான்காம் தர அரசியல்வாதி அண்ணாமலை... வக்கிரமானவர் சீமான்!

“சீமானையும் கடுமையாக விமர்சித்திருந்தீர்களே... ‘அது அரசியல் குப்பை. அதைப் பற்றி விவாதிப்பதை விடுத்து முக்கியப் பிரச்னைகளில் கவனம் செலுத்துங்கள்’ என்றும் சீமான் சொல்லியிருக்கிறாரே?”

“சீமான் பொறுப்புடனும் கண்ணியத்துடனும் நடந்துகொள்ள வேண்டிய ஓர் அரசியல் கட்சியின் தலைவர். ஆனால், கே.டி.ராகவனை ஆதரித்துப் பேசியது அவர் எவ்வளவு வக்கிரமானவர் என்பதைக் காட்டிவிட்டது. அதனால்தான் சீமானைப் புறக்கணிக்க வேண்டும் என்று நான் கடுமையாகப் பேசிவருகிறேன்.”

“பொள்ளாச்சி விவகாரம், கவிஞர் தாமரை, பாடகி சின்மயி, நடிகை சாந்தினி விவகாரங்களிலெல்லாம் நீங்கள் இவ்வளவு கோபப்பட்டதாகத் தெரியவில்லையே?”

“மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர் உட்பட, கிட்டத்தட்ட 15 பேரின் வீடியோக்கள் இருப்பதாகச் சொல்கிறார்கள். இவையெல்லாம் தனிநபரால் செய்யப்பட்டதாக இல்லாமல், குழுவாக நிகழ்த்தப்பட்ட வன்கொடுமையாகத்தான் என்னால் பார்க்க முடிகிறது. அந்த அச்சத்தில்தான் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறேன்.”

“பா.ஜ.க-வில் இருக்கும் பெண் தலைவர்கள் மட்டுமல்ல, தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட இது தொடர்பாக எந்த எதிர்வினையும் செய்யவில்லையே?”

“ஊடகங்களையே மிரட்டும் அண்ணாமலை, அந்தக் கட்சியிலிருக்கும் பாதிக்கப்பட்ட பெண்களை எந்த அளவுக்கு மிரட்டி வைத்திருப்பார்... பா.ஜ.க-வைப் பொறுத்தவரை பெண்கள் பேசுவதற்கான சூழலே இல்லை என்பதைத்தான் வானதி, குஷ்புவின் நிலைமை உணர்த்துகிறது. தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் கட்சியினர் ஏன் இது குறித்துப் பெரிய அளவில் பேசவில்லை எனத் தெரியவில்லை. எந்தக் காலத்திலும் பெண்களுக்கு எதிரான பிரச்னைகளைப் பெண்கள்தான் பேச வேண்டும் என்றில்லாமல், கட்சி பேதமின்றி அரசியலின் மைய நீரோட்டத்தில் வைத்து அனைவரும் பேச வேண்டும், போராட வேண்டும் என்பதை அனைவரிடத்திலும் வேண்டுகோளாகவே வைக்கிறேன்.”

“தேசிய அளவில் பலம்வாய்ந்த கட்சியாக இருக்கும் பா.ஜ.க-வை, எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸால் வீழ்த்த முடியும் என நினைக்கிறீர்களா?”

“மிக நிச்சயமாக முடியும். ஹிட்லர், முசோலினி போல ஒருகாலத்தில் அசுர பலத்துடன் இருந்தவர்களேகூட இப்போது புதைக்கப்பட்ட இடம் தெரியாமல் போய்விட்டனர். எங்கள் கூட்டணியால் தமிழ்நாட்டில் அ.தி.மு.க தோற்கடிக்கப்பட்டதைப்போல, பா.ஜ.க-வும் தோற்கடிக்கப்பட்டு ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நிச்சயம் மத்தியில் அமையும்!”

“ ‘கட்சிக்கான தலைவரையே தேர்ந்தெடுக்க முடியாத காங்கிரஸ், ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் பேராசை’ என்கிற விமர்சனம் இருக்கிறதே?”

“தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் குழுவில் நானும் இருக்கிறேன். இன்னும் ஒருசில மாதங்களில், காங்கிரஸ் கட்சியின் தலைவருக்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. 100% மக்கள் ஆதரவுடன் ராகுல் காந்தி மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார். பா.ஜ.க-வைப்போல ஆர்.எஸ்.எஸ் கை காட்டுபவர்களை, குற்றவாளிகளைத் தலைவராகத் தேர்ந்தெடுக்காது காங்கிரஸ். தேசத்துக்காக உயிர்த் தியாகம் செய்த கண்ணியமான பரம்பரையிலிருந்து வந்தவர்களை, ஜனநாயகரீதியில் தேர்வுசெய்வோம்!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism