Published:Updated:

ஓடி ஒளிகிறார்கள் பிரதமரும் அமைச்சர்களும்! - ‘சஸ்பெண்ட் எம்.பி’ மாணிக்கம் தாகூர் விளாசல்

மாணிக்கம் தாகூர்
பிரீமியம் ஸ்டோரி
மாணிக்கம் தாகூர்

காவல்துறை, புலனாய்வு அமைப்புகள், ஊடகம் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு, எதிர்க்குரல்களை பா.ஜ.க அரசு நசுக்கப்பார்க்கிறது.

ஓடி ஒளிகிறார்கள் பிரதமரும் அமைச்சர்களும்! - ‘சஸ்பெண்ட் எம்.பி’ மாணிக்கம் தாகூர் விளாசல்

காவல்துறை, புலனாய்வு அமைப்புகள், ஊடகம் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு, எதிர்க்குரல்களை பா.ஜ.க அரசு நசுக்கப்பார்க்கிறது.

Published:Updated:
மாணிக்கம் தாகூர்
பிரீமியம் ஸ்டோரி
மாணிக்கம் தாகூர்

விலைவாசி உயர்வு பிரச்னையை விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளாததால், நாடாளுமன்ற இரு அவைகளும் அமளி துமளியாகியிருக்கின்றன. அவை நடவடிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததாக மக்களவையில் நால்வர், மாநிலங்களவையில் 23 பேர் என 27 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படி ‘சஸ்பெண்ட்’ ஆனவர்களில் ஒருவரான மாணிக்கம் தாகூர் எம்.பி-யைத் தொடர்புகொண்டோம். சோனியா காந்தியிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்துவதற்கு எதிராகப் போராடியதற்காக, ராகுல் காந்தியுடன் கைது செய்யப்பட்டு டெல்லி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தார் அவர். அங்கிருந்தபடியே அவர் நமக்களித்த பேட்டி இது.

“விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், போராட்டம் நடத்துவது சரியா?”

“விசாரணைக்கு சோனியா காந்தியும், ராகுல் காந்தியும் முழு ஒத்துழைப்பை வழங்கி வருகிறார்கள். முதல் தகவல் அறிக்கைகூட பதிவு செய்யாமல் அவர்களை விசாரணை என்ற பெயரில் அமலாக்கத்துறை அலைக்கழிக்கிறது. எதிர்க்கட்சிக்கான கடமையைச் செய்யவிடாமல் முடக்கப் பார்க்கிறது. இப்படி, அரசியல் பழிவாங்கல் நோக்கத்துடன் அரசு செயல்படுவதைக் கண்டித்துத்தான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம்.”

“நாடாளுமன்றச் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் நடந்துகொண்டதாகவும் உங்கள்மீது ஆளும் தரப்பு குற்றம்சாட்டுகிறதே?”

“விலைவாசி உயர்வு, அத்தியாவசியப் பொருள்கள்மீது ஜி.எஸ்.டி வரி விதிப்பு, சமையல் எரிவாயு விலை உயர்வு, அக்னிபாத் திட்டம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கோரிக்கை வைத்தோம். அதில் என்ன தவறு... மக்களை பாதிக்கும் பிரச்னைகள் குறித்து அரசிடம் கேள்வி கேட்பது எதிர்க்கட்சிகளின் கடமை. ஆனால், அது பற்றி விவாதிக்க பா.ஜ.க அரசு அஞ்சுகிறது.”

ஓடி ஒளிகிறார்கள் பிரதமரும் அமைச்சர்களும்! - ‘சஸ்பெண்ட் எம்.பி’ மாணிக்கம் தாகூர் விளாசல்

“விவாதத்துக்குத் தயாராக இருப்பதாகவும், கொரோனா தொற்றிலிருந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குணமடைந்து வந்த பிறகு இது பற்றி விவாதிக்கலாம் என்றும் ஆளும் தரப்பு கூறுவதை ஏன் ஏற்க மறுக்கிறீர்கள்?”

“ஆளும் தரப்பில் பதில் சொல்ல வேறு அமைச்சர்களே இல்லையா... ஏன், பிரதமரே பதில் சொல்லலாமே... எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் பிரதமரும் மத்திய அமைச்சர்களும் ஓடி ஒளி கிறார்கள். நாங்கள் பேசும் கருத்துகள் வெளியே போய்விடக் கூடாது என்பதற்காக நாடாளுமன்றத் தில், நாடாளுமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் ‘சன்சாத் டி.வி’-யின் கேமராக் களைத் திருப்பிவைத்துவிட்டார்கள். கேமரா கோணங்களை பிரதமர் மோடி கற்றுக்கொண்டதைப்போல, நாங்களும் கற்றுக் கொண்டோம். கேமராக்களைத் தேடிப்போய் கோரிக்கை பதாகைகளைக் காண்பிக்கிறோம். அது ஆளும் தரப்புக்கு கோபத்தை ஏற்படுத்துகிறது.”

“மத்தியில் வலிமையாக இருக்கும் பா.ஜ.க-விடம் அரசியல் செய்ய முடியாமல், காங்கிரஸ் திணறுவதுபோலத் தெரிகிறதே?”

“நிச்சயமாக இல்லை. காவல்துறை, புலனாய்வு அமைப்புகள், ஊடகம் ஆகியவற்றைக் கையில் வைத்துக்கொண்டு, எதிர்க்குரல்களை பா.ஜ.க அரசு நசுக்கப்பார்க்கிறது. இந்தச் சூழலில், பா.ஜ.க-வை எதிர்த்து நிற்கும் தைரியம் காங்கிரஸ் கட்சிக்குத்தான் இருக்கிறது. ஆகவேதான், இன்றைக்கு ராகுல் காந்தியுடன் 65 எம்.பி-க்கள் போராடி கைதாகியிருக்கிறோம். பா.ஜ.க அரசின் மக்கள் விரோதச் செயல்பாடுகளுக்கு எதிராக தேசம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறோம். காங்கிரஸால் மட்டும்தான் பா.ஜ.க-வை வீழ்த்த முடியும்.”

“இன்றைக்கும் செல்வாக்கு மிகுந்த கட்சியாகவே பா.ஜ.க இருக்கிறது. ‘2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க-தான் வெற்றிபெறும்... மூன்றாவது முறையாக மோடி பிரதமர் நாற்காலியில் அமருவார்’ என்று சொல்கிறார்களே?”

“இந்தக் கருத்துருவாக்கத்தை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களின் ஊடகங்கள் திட்டமிட்டு தோற்றுவிக்கின்றன. தேசிய அளவில், மக்கள் மத்தியில் செல்வாக்கு மிகுந்த தலைவராக ராகுல் காந்தி விளங்குகிறார்.”

“பிறகு ஏன், ‘தலைவர் பதவி வேண்டாம்’ என்று ராகுல் காந்தி ஒதுங்குகிறார்?”

“கட்சி நிர்வாகம், களச் செயல்பாடு என இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ‘கட்சி நிர்வாகத்தை நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்... மக்களுக்காகக் களத்தில் போராடும் பணியை நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்ற நிலைப்பாட்டில் ராகுல் காந்தி உறுதியாக இருக்கிறார்.’’

“காங்கிரஸ் தலைவர் பதவியை ஒருபோதும் அவர் ஏற்க மாட்டாரா?”

“அவர் தலைவராக வர வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். அவரைப் பொறுத்தவரை அவரது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறார் என்றே தோன்றுகிறது.”


“அகில இந்திய அளவில் ‘சிந்தனை மாநாடு’ நடத்தி, பல திட்டங்களை வகுத்தீர்கள். அதன் அடுத்தகட்ட செயல்பாடு எந்த அளவுக்கு இருக்கிறது?”

“அமைப்புரீதியாக காங்கிரஸை பலப்படுத்த வேண்டும், தேர்தலில் நவீன உத்திகளைக் கையாள வேண்டும் என்பதற்காகப் பல திட்டங்களை வகுத்திருக்கிறோம். ப.சிதம்பரம், வேணுகோபால், சுனில் கனுகோலு தலைமையில் ‘டாஸ்க் ஃபோர்ஸ்’ அமைக்கப்பட்டு பல பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன.”

“தேர்தல் நெருங்குகிறது. தமிழ்நாட்டில் வலுவான கூட்டணியை ஏற்படுத்தியதுபோல, மற்ற மாநிலங்களில் இன்னும் வெற்றிகரமான கூட்டணியை காங்கிரஸால் அமைக்க முடியவில்லையே?”

“அமலாக்கத்துறையும், வருமான வரித்துறையும் `ஆக்டிவ்’-ஆக இருக்கும்வரை, எந்தக் கட்சி எந்தக் கூட்டணியில் இருக்கும் என்பதை இப்போதைக்குச் சொல்ல முடியாது. தேர்தலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் எல்லோரும் தைரியமாக முடிவெடுப்பார்கள். காங்கிரஸால் மட்டுமே பா.ஜ.க-வைத் தோற்கடிக்க முடியும். இதைப் புரிந்துகொள்ளும் கட்சிகள் நிச்சயமாக காங்கிரஸ் பக்கம் வரும். மாற்றம் நிகழும்.”