ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தொடர்ந்து பெட்ரோல் விலை உயர்ந்து வருகிறது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-ஐ தாண்டி விட்டது. இந்த பெட்ரோல் விலையேற்றம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பத்தாண்டுகளுக்கும் மேலாக எண்ணெய் நிறுவனங்களுக்கு பாண்டுகளை வழங்கியதுதான் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்குக் காரணம்" எனக் குற்றம்சாட்டினார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், ``மோடி அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருள் வரியாக 26,51,919 கோடி ரூபாய் வசூலித்துள்ளது" எனப் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மக்கள் நிதி திட்டம் (Pradhan Mantri Jan Dhan Yojana) என்பதை `பிரதமர் மக்கள் நிதி கொல்லை திட்டம் (Pradhan Mantri Jan Dhan LOOT Yojana)' எனப் பதிவிட்டு 2014 -ல் பா.ஜ.க ஆட்சிக்கு வருவதற்கு முன்பும், தற்போதைய பெட்ரோல் விலை தொடர்பான புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் வாகனத்தில் முழுமையாக (full tank) பெட்ரோல் நிரப்ப ஆகும் செலவு ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதில்...
பைக் - 2014-ல் ரூ.714 தற்போது ரூ.1,038 = ரூ.324 உயர்த்தப்பட்டுள்ளது.
கார் - 2014 -ல் ரூ.2,856 தற்போது ரூ.4,152 = ரூ.1,296 உயர்த்தப்பட்டுள்ளது.
டிராக்டர் - 2014-ல் ரூ.2,749 தற்போது ரூ.4,563 = ரூ.1,814 உயர்த்தப்பட்டுள்ளது.
லாரி - 2014-ல் ரூ.11,456 தற்போது ரூ.19,014 = ரூ.7,558 உயர்த்தப்பட்டுள்ளது.
எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
