நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில், பா.ஜ.க உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற்றது. பஞ்சாப்பில் மட்டும் ஆம் ஆத்மி வெற்றிபெற்றுள்ளது. மேலும் காங்கிரஸ் ஐந்து மாநிலங்களில் ஒன்றில்கூட வெற்றி பெறாமல் தோல்வியடைந்துள்ளது. காங்கிரஸின் இத்தகைய தோல்வி பலராலும் விமர்சிக்கப்பட்டுவருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், ``பிரதமர் நரேந்திர மோடி அளப்பரிய ஆற்றலும், சுறுசுறுப்பும்கொண்டவர்" என மோடிக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.
நேற்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவின்போது செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், ``பிரதமர் நரேந்திர மோடி அளப்பரிய ஆற்றலும், சுறுசுறுப்பும்கொண்டவர். குறிப்பாக அரசியல்ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய சில விஷயங்களைச் செய்திருக்கிறார்.

அவர் இவ்வளவு பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஆனால் அதை அவர் செய்துகாட்டியிருக்கிறார். உத்தரப்பிரதேச மக்கள் இன்று அவர்களுக்கு விரும்பியதை வழங்கியுள்ளனர். அதேசமயம், நம் நாட்டை வகுப்புவாதத்தாலும், மத அடிப்படையிலும் பிளவுபடுத்தும் சக்திகளை மோடி சமூகத்தில் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறார். அது என்னைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது" என்றார்.