Published:Updated:

புதுச்சேரி: ’அரசு நிறுவனங்களைப்போல ராமரையும் பா.ஜ.க விற்கிறது!’- கொதிக்கும் காங்கிரஸ் எம்.பி!

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்
புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

”இரண்டு கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை ஒரு சில நிமிடங்களிலேயே 18 கோடிக்கு அறக்கட்டளைக்கு விற்றிருக்கின்றனர். இந்த விவகாரத்தில் முழுமையான ஊழல் நடந்துள்ளது” - புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்.

புதுச்சேரி பா.ஜ.க தலைவராக இருக்கும் சாமிநாதன், லாஸ்பேட்டை தொகுதியில் தடுப்பூசி முகாம்களை நடத்திவருவது குறித்து அந்தத் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன் புகார் எழுப்பியிருக்கிறார். இந்த விவகாரம் தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம், “புதுச்சேரி பா.ஜ.க தலைவராக இருக்கும் சாமிநாதன் சட்டப்பேரவைத் தேர்தலில் லாஸ்பேட்டை தொகுதியில் மூன்று முறை போட்டியிட்டு, தோல்வியடைந்தவர். அதில் இரண்டு முறை டெபாசிட்டை இழந்தவர்.

அயோத்தி ராமர் கோயில் மாதிரிப் படம்
அயோத்தி ராமர் கோயில் மாதிரிப் படம்

இப்படிப்பட்ட நிலையில் அவர் ஏன் அரசு நிகழ்ச்சியை எடுத்துச் செய்ய வேண்டும்? கட்சியை வளர்க்க வேண்டுமென்றால், தனிப்பட்ட முறையில் செலவு செய்து முகாம்களை நடத்துவதில் தவறில்லை. ஆனால் அரசின் இடம் மற்றும் பணத்தில் முகாம்களை நடத்துவது சரியானது அல்ல. இப்படிப்பட்ட செயல்களால் வன்முறைகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. அவரது கட்சியே அவருக்கு நியமன எம்.எல்.ஏ பதவியைக் கொடுக்காமல், அதே தொகுதியைச் சேர்ந்த வேறொருவருக்குக் கொடுத்திருக்கிறது.

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்தவர் ஏன் இதுபோல் நடந்துகொள்ள வேண்டும்? அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக ஜனாதிபதி உள்ளிட்டவர்கள் நன்கொடை அளித்துள்ளனர். அதேபோல காங்கிரஸ் கட்சியினர் மட்டுமல்லாமல், உலக நாடுகளிலிருந்தும் நன்கொடைகள் ராமர் கோயில் கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளன. ஆனால் நன்கொடை சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. 2 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலத்தை ஒரு சில நிமிடங்களிலேயே 18 கோடிக்கு அறக்கட்டளைக்கு கொடுத்திருக்கின்றனர்.

`அயோத்தி ராமர் கோயில்!’ -  நன்கொடை அளிக்கும் ஷியா மத்திய வக்ஃப் வாரியத் தலைவர்

இந்த விவகாரத்தில் முழுமையான ஊழல் நடந்துள்ளது. பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்களை விற்றுவரும் பா.ஜ.க., தற்போது ராமரையும் விற்கிறது. ராமரின் புனிதத்தன்மையை வியாபாரம் செய்யுமளவுக்கு வந்துவிட்டார்கள். இது ராமர் பக்தர்கள் அனைவரிடமும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்த ஜனாதிபதிக்குக் கடிதம் எழுதவிருக்கிறேன். ராமர் பக்திக்காக திரட்டப்பட்ட நிதியை சுயநலத்துக்காகக் கொள்ளையடிக்கின்றனர்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு