Published:Updated:

“மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்குறதே என் வேலை!”

விஜய் வசந்த்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் வசந்த்

- விஜய் வசந்த் நறுக் பேட்டி

“மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்குறதே என் வேலை!”

- விஜய் வசந்த் நறுக் பேட்டி

Published:Updated:
விஜய் வசந்த்
பிரீமியம் ஸ்டோரி
விஜய் வசந்த்
கன்னியாகுமரி நாடாளுமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்று முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பங்கேற்றிருக்கிறார் விஜய் வசந்த். அவருடன் ஒரு மினி பேட்டி...

‘‘சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்திருக்கிறீர்கள். இந்த மாற்றம் எப்படி இருக்கிறது?’’

‘‘வியாபாரம், நடிப்பு, அரசியல்னு என் வாழ்க்கையை மூணா பிரிக்கலாம். வியாபாரத்துல அதன் நுணுக்கம் தெரியும். சினிமாவுல அவங்க சொல்லுவாங்க... அதைப் பண்ணிட்டு போய்க் கிட்டே இருக்கலாம். ஆனா, அரசியல் அப்படி இல்லை. மக்களோட மனநிலையைப் புரிஞ்சு, அவங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யணும். அரசியல் ஒரு சேலஞ்சான டாஸ்க்!’’

‘‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறீர்கள்?’’

‘‘காணாமல்போன மீனவர்களைத் தேட ஹெலிகாப்டர் தளம் அமைக்கணும்கிற கோரிக்கை நீண்டநாளா பெண்டிங்கில் இருக்குது. விரைவில் அதைக் கொண்டுவர நடவடிக்கை எடுப்பேன். சாமித்தோப்புல விமான நிலையம் அமைக்க, அதிகாரிகளைச் சந்திச்சுப் பேசியிருக்கேன். கன்னியாகுமரி சுற்றுலா தலத்தை உலக அளவுல மேம்படுத்தணும்னு புரொபோசல் கொடுத்திருக்கேன். என்னென்ன பெண்டிங் வொர்க்குகள் இருக்குதோ, அதையெல்லாம் நிறைவேத்த அமைச்சர்களைப் பார்த்து கோரிக்கை வெச்சுக்கிட்டு வர்றேன்.’’

‘‘ஆனால், நாடாளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதி இல்லாமல் எப்படி வளர்ச்சிப் பணிகளைச் செய்வீர்கள்?’’

‘‘ஆமாம், எங்களோட கையைக் கட்டிப்போட்டதுபோலத்தான் இருக்கு. எங்களுக்கு ஏதாவது ஃபண்ட் கொடுத்தாத்தானே ஊர்ல ஏதாவது பண்ண முடியும்? முடிஞ்சவரைக்கும் சொந்தப் பணத்துல செஞ்சுக்கிட்டிருக்கேன். எம்.பி நிதியை மத்திய அரசு கொடுத்தாத்தான் நல்ல நல்ல திட்டங்களை வேகமாகக் கொண்டுவர முடியும்.’’

“மக்கள் விரோத திட்டங்களை எதிர்க்குறதே என் வேலை!”

‘‘கன்னியாகுமரியில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றிபெற்றதால், மத்திய அரசுத் திட்டப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டிருப்பதாகக் குற்றச்சாட்டு இருக்கிறதே..?’’

‘‘அப்பா காங்கிரஸ் எம்.பி-யா வந்தவுடனே நான்குவழிச் சாலைப் பணியின் வேகத்தைக் குறைச்சாங்க. காலதாமதத்தால பட்ஜெட்டும் அதிகமாகிடுச்சு. இப்படிப் பல பிரச்னைகள் இருந்துச்சு. அதிகாரிகளைச் சந்திச்சு பணிகளை முடுக்கிவிட்டிருக்கேன். காவல்கிணறு டு நாகர்கோவில் பணி முடியுற ஸ்டேஜ்ல இருக்கு. கன்னியாகுமரி டு களியக்காவிளை நான்குவழிச் சாலையில சுமார் எழுபது பாலங்கள் அமைக்க வேண்டியிருக்கு. இரண்டு ஆண்டுகள்ல முடிப்பதாகச் சொல்றாங்க. அதை வேகப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துக்கிட்டு இருக்கோம். அதுபோல இரட்டை ரயில் பாதைப் பணியையும் வேகப்படுத்தச் சொல்லியிருக்கேன்.’’

‘‘வர்த்தகத் துறைமுகத் திட்டத்தால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று மக்கள் எதிர்க்கும் நிலையில், ‘இலங்கையில் சீனா துறைமுகம் அமைப்பதால்தான் இந்தியப் பாதுகாப்புக்காக கன்னியாகுமரியில் வர்த்தகத் துறைமுகம் கொண்டுவரவிருப்பதாக’ச் சொல்கிறார்களே?’’

‘‘இதைக் காரணம் காட்டித்தான் முன்னாடியே அந்தத் திட்டத்தைக் கொண்டு வந்தாங்க. அதுக்குத் தீர்வு இது மட்டும்தான்னு சொல்ல முடியாது. அது சம்பந்தமா கமிட்டிவெச்சு டிஸ்கஸ் பண்ணும்போது, வர்த்தகத் துறைமுகம் வேண்டாம் என்ற கருத்தை வலியுறுத்துவோம். மக்கள் விரோத திட்டம் எது வந்தாலும் அதைப் போராட்டங்கள் மூலம் எதிர்ப்பதுதான் மக்கள் பிரதிநிதியான என் வேலை.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism