Published:Updated:

``நாட்டைப் பிளவுபடுத்துகிறீர்கள்!” - நாடாளுமன்றத்தில் கர்ஜித்த விப்லவ் தாக்கூர் யார்?

விப்லவ் தாக்கூர்
விப்லவ் தாக்கூர்

மாநிலங்களவையில் இமாசலைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூர் பேசியவை இணையத்தில் வைரலானது.

நாடாளுமன்றம் என்பது அதிரடிகளுக்குப் பஞ்சமில்லாதது. இன்றைய தேதிக்கு நாடாளுமன்றம் ஆளும் கட்சியின் நோட்டிஸ் போர்டாக மட்டுமே செயல்பட்டு வருகிறது என்கிற கருத்து பரவலாக உள்ளது. விவாதங்களுக்கு இடமில்லாமல் சட்டங்கள் அனைத்தும் அரசாலே தீர்மானிக்கப்பட்டு வெறும் வாக்கெடுப்புக்கான இடமாக மட்டுமே நாடாளுமன்றம் மாறி வருகிறது. இத்தகைய சூழ்நிலைகளில் நாடாளுமன்ற விவாதங்களின் போது உறுப்பினர்கள் ஆற்றுகின்ற உரைகளில் சில வரலாற்றுச் சிறப்பு மிக்கதாக அமைந்துவிடுகின்றன.

நாடாளுமன்றம்
நாடாளுமன்றம்

கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் மகுவா மொய்த்ரா பாசிசத்தின் அறிகுறிகள் பற்றி ஆற்றிய முதல் உரை வைரலானது. அண்ணா நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரை இன்று வரையிலும் பேசப்படுகிறது. அவ்வாறு கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இமாசலப் பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி விப்லவ் தாக்கூரின் பேச்சு இணையத்தில் வைரலானது. தமிழகத்தில் அந்தக் குறிப்பிட்ட தினங்களில் அதிகம் இணையத்தில் தேடப்பட்ட பெயர்களில் அதுவும் ஒன்றாக இருந்தது.

யார் இந்த விப்லவ் தாக்கூர்?

சுதந்திரப் போராட்ட வீரர்கள் பரஸ் ராம் மற்றும் சர்லா சர்மா ஆகியோரின் மகளான விப்லவ் தாக்கூர் 1943-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இமாசலப் பிரதேசம் தரம்சாலாவில் பிறந்தார். நீண்ட அரசியல் பாரம்பர்யம் கொண்டது விப்லவ் தாக்கூரின் குடும்பம். அவரின் தாய் சர்லா சர்மா பிரபலமான காங்கிரஸ் தலைவராகத் திகழ்ந்தார். பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அரசியல் முதுகலை பயின்ற விப்லவ் சர்மா 1985-ம் ஆண்டு இமாசல சட்டமன்றத்துக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விப்லவ் தாக்கூர்
விப்லவ் தாக்கூர்

இமாசலப் பிரதேச அமைச்சரவையில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அம்மாநிலப் பெண்கள் ஆணையத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். 2006-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாதுகாப்பு தொடங்கி தொழில்நுட்பம் வரை பல்வேறு அரசு குழுக்களிலும் பதவி வகித்துள்ளார். நாடாளுமன்றத்தரவுகளின்படி இவரின் வருகைப்பதிவு 92 சதவிகிதமாக உள்ளது. இது தேசிய சராசரியைக் காட்டிலும் 14% அதிகம். அதோடு விவாதங்களில் கலந்து கொள்வதிலும், கேள்வி கேட்பதிலும் இவரின் பங்களிப்பு அதிகமாகவே உள்ளது.

பிரசாந்த் கிஷோரின் வழிகாட்டல்... சித்தாந்தச் சிக்கலில் தி.மு.க!

இணையத்தில் வைரலான வீடியோவில் அவர் பேசிவை:

``இன்று நீங்கள் இங்கு அமர்ந்திருக்கிறீர்கள். விமானங்களில் பயணிக்கிறீர்கள். இவையெல்லாம் யார் கொடுத்தது? இந்த ஐ.ஐ.டி, ஐ.ஐ.எம், கல்லூரி, பல்கலைக்கழகங்கள் இவையெல்லாம் யார் உருவாக்கினார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் நீங்கள் என்ன செய்தீர்கள்? இந்தியாவை உடைப்பதையும், பிரிப்பதையும் தவிர நீங்கள் எதையும் செய்யவில்லை.

துரோகி என்கிற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று கேட்க விரும்புகிறேன். யார் துரோகி என்று அழைக்கப்படுகிறார்கள். இந்தியச் சுதந்திரத்தைக் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்றுக்கொள்ளாத போது, அந்தக் கட்சி நான்கு ஆண்டுகள் தடை செய்யப்பட்டது. ஆனால் நேருவோ, அரசாங்கமோ அவர்களை துரோகிகள் என்று அழைக்கவில்லை.

விப்லவ் தாக்கூர்
விப்லவ் தாக்கூர்
rstv

நேருவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பேசியிருக்கிறார் வாஜ்பாய். அவர் துரோகி என்று அழைக்கப்படவில்லை. இன்று பிரதமரையோ, உள்துறை அமைச்சரையோ அவர்களுடைய கொள்கைகளை யார் எதிர்த்துப் பேசினாலும் அவர்களை துரோகி என முத்திரை குத்தி சிறையில் அடைக்கிறார்கள். இந்த அரசு ஆறு வயதுச் சிறுவர்களைக்கூட விட்டுவைக்கவில்லை.

கடந்த 70 ஆண்டுகளில் கூட பாகிஸ்தான் பெயர் இத்தனை முறை உச்சரிக்கப்படவில்லை. கடந்த ஆறு ஆண்டுகளில் எதற்கெடுத்தாலும் பாகிஸ்தானின் பெயரை இழுக்கிறீர்கள். அழைப்பே இல்லாமல் பாகிஸ்தான் சென்று வந்தது யார்?

காஷ்மீர் விவகாரத்தை ஐரோப்பிய ஒன்றியம் பேச அனுமதியில்லை என்கிறீர்கள். ஆனால், அவர்களை காஷ்மீருக்கு அழைத்துச்சென்று காஷ்மீர் விவகாரத்தை சர்வதேசமயப்படுத்தியதே நீங்கள்தான். நீங்கள்தான் தலையிட அழைத்தீர்கள். நாங்கள் ஆட்சியிலிருந்த போது, நம் நாடு குறித்து தவறாகப் பேச யாருக்கும் தைரியம் வரவில்லை. ஆனால், இப்போது... இதற்கு நீங்கள்தான் காரணம்.

இந்த நாட்டைப் பிரித்துவிடாதீர்கள்.. ஒற்றுமையாகவே வைத்திருங்கள். பாகிஸ்தான், வங்கதேசம் இஸ்லாமிய நாடுகள்.. நாம் மதச்சார்பற்ற நாடு. நாம் தர்மத்தில் நம்பிக்கை உள்ளவர்கள். அந்த தர்மத்தைக் காப்பாற்றுங்கள்” என்று கர்ஜித்து அமர்ந்தார்.

விப்லவ் தாக்கூர்
விப்லவ் தாக்கூர்

அதற்குப் பிறகு அவர் அளித்த பேட்டியில், ``ஆளும்கட்சியைச் சேர்ந்த பலருமே என்னிடம் வந்து பிரமிக்க வைத்துவிட்டீர்கள் என்றனர். ஒவ்வொரு முறையும் பா.ஜ.க தலைமை நேருவை மட்டம் தட்டுவது எனக்கு கோபத்தை அளிக்கிறது. என்னுடையை 13-வது வயதில் நான் நேருவைச் சந்தித்திருக்கிறேன். நேருவுடன் ஒரு இரவு உணவுக்கு என்னை அழைத்துச் சென்றிருந்தார்கள்” என்றுள்ளார். இந்த ஆண்டோடு இவருடைய மாநிலங்களவை எம்.பி பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு