கர்நாடகாவில், இன்னும் சில மாதங்களுக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதால், ஆட்சிக்கட்டிலை தக்கவைத்துக்கொள்ள, பா.ஜ.க-வினர், ‘ஜன் சங்கல்ப யாத்திரை’ நடத்தி, மாவட்டம் வாரியாக களமிறங்கி வாக்குவங்கியை தக்கவைக்கப் போராடிவருகின்றனர். இதுவரை, பிரதமர் நரேந்திர மோடி இருமுறையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ.க தேசியத்தலைவர் ஜே.பி.நட்டா ஒருமுறை வந்துசென்றிருக்கின்றனர். இன்னும் ‘ஷெட்யூல்’ போட்டு ஒவ்வொரு தலைவராக வரவிருக்கின்றனர்.

இந்த நிலையில், இரண்டாவது முறையாக நேற்று, பெலகாவி மாவட்டத்துக்கு வருகைதந்த அமித் ஷா, பா.ஜ.க-வுக்கு வாக்கு சேகரிக்க ‘ஜன் சங்கல்ப யாத்திரை’யில் பங்கேற்று, ‘ரோடு ஷோ’ சென்றதுடன், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கூட்டத்தில் பங்கேற்றார். முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட பலர் உடனிருந்தனர்.
நிகழ்ச்சியில் அமித் ஷா, ‘‘காங்கிரஸ் கட்சியினர் காந்தி குடும்பத்துக்கு ஆரத்தி மட்டுமே எடுக்கின்றனர். மறுபுறம் மதச்சார்பற்ற ஜனதா தளம் (JDS) கட்சியில், தாத்தா, மகன், மனைவிகள், பேரன், கொள்ளுப்பேரன் என அனைவருமே தேர்தலில் போட்டியிடுகின்றனர்; இளைஞர்களே நீங்க சொல்லுங்கள், இந்தக் கட்சியில் (JDS) உங்களுக்கு இடமுள்ளதா... ஆனால், பா.ஜ.க கர்நாடகத்தில் வளர்ச்சியை உருவாக்கி வருகிறது. மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு, நாட்டை தீவிரவாதிகள் இல்லாத, பாதுகாப்பான இந்தியாவாக உருவாக்கியிருக்கிறது; நாட்டை உலகத்தரத்தில் முன்னேற்றி வருகிறது.

கர்நாடகத்தைப் பொறுத்தவரையில், காங்கிரஸும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் ஒரு நாணயத்தின் இருபக்கங்கள். ஜனதா தளத்துக்குப் போடப்படும் ஒவ்வொரு ஓட்டும் காங்கிரஸுக்குப் பயன்தரும். இரு கட்சியினரும் மக்களை ஏமாற்ற தற்போதே பல வெற்று வாக்குறுதிகளைக் கூறிவருகின்றனர். பா.ஜ.க மட்டுமே கர்நாடகத்தில் வளர்ச்சியைத் தரும், இங்கு மீண்டும் ‘டபுள் இன்ஜின்’ ஆட்சி அமைக்க மக்கள் முடிவெடுக்க வேண்டும்’’ என காட்டமாகப் பேசினார்.
கர்நாடகத்தில் தேர்தல் நெருங்குவதால், தலைவர்களின் வார்த்தைப்போர் வலுப்பெற்று, அனுதினமும் அரசியல் களத்தில் அனல் பறக்கிறது.