தேனி-அல்லிநகரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இவற்றில் திமுக 19, அதிமுக 7, காங்கிரஸ் 2, அமமுக 2, பாஜக 1, சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளன. தேனி - அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
தேனி நகராட்சி ஆண்களுக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்த்து வேலை பார்த்துவந்த நகரப் பொறுப்பாளர் சூர்யா பாலமுருகன், வடபுதுபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக இருந்த தனது மனைவி ரேணுப்ரியாவை ராஜினாமா செய்யவைத்து, உள்ளாட்சித் தேர்தலில் அல்லிநகரம் நகராட்சி 10-வது வார்டில் போட்டியிடவைத்தார். அவர் 20-வது வார்டில் போட்டியிட்டார். இருவரும் வெற்றிபெற்றனர்.
இந்நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு தேனி - அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அக்கட்சி சார்பாக 22-வது வார்டு கவுன்சிலர் சற்குணம் நிறுத்தப்பட்டார்.

இதனால் அதிருப்தியடைந்த சூர்யா பாலமுருகன் தரப்பினர், சற்குணம் தரப்பினரிடம் நகராட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்கும்படி பேச்சுவார்த்தை நடத்தினர். 69 வயது நிரம்பிய காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் பாரம்பர்யமான காங்கிரஸ் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், சூர்யா பாலமுருகன் தரப்புக்கு உடன்படவில்லை.
மேலும், இவருடைய கணவர் ராஜகுமாரன் 2006-ம் ஆண்டு தேனி சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்டவர். மாமனார் என்.ஆர்.தியாகராஜன் சுதந்திரப் போராட்ட தியாகி. அவர் தேனி எம்.எல்.ஏ., தமிழக சட்டமேலவை எதிர்க்கட்சி தலைவர், மதுரை ஜில்லா போர்டு தலைவர் போன்ற பதவிகளை வகித்துள்ளார். தற்போது இந்திய மருத்துவக் கழகத்தின் மாநிலச் செயலாளராக உள்ள இவர்களுடைய மகன் டாக்டர் தியாகராஜன் செல்வாக்கைப் பயன்படுத்தி, தலைவர் பதவிக்குப் போட்டியிடத் தயாராகினர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்நிலையில் தனது ஆதரவாளர்களுடன் நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். நகராட்சித் தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலில் காங்கிரஸ் கவுன்சிலர் சற்குணம் வேட்புமனு தாக்கல் செய்யவிருந்த நிலையில், 10-வது வார்டு திமுக கவுன்சிலர் ரேணுப்பிரியா பாலமுருகன் என்பவர் அவரை எதிர்த்து மனுத்தாக்கல் செய்தார். அதனால் மறைமுகத் தேர்தலைப் புறக்கணித்த காங்கிரஸ் கவுன்சிலர்கள் கூட்டரங்கிலிருந்து வெளியே வந்தனர்.
கூட்டணி தர்தமத்தை மீறி, நகர் மன்றத் தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர் வேட்புமனு தாக்கல் செய்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் நகராட்சி அலுவலகம் முன்பாக பெரியகுளம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதற்கிடையே மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டு திமுக கவுன்சிலர் ரேணுப்ரியா நகராட்சித் தலைவராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சற்குணத்தின் மகன் டாக்டர் தியாகராஜன், ''திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவைத் தொடர்ந்துதான் போட்டியிடத் தயாரானோம். ஆனால், எங்களை வேட்புமனு தாக்கல் செய்யவிடாமல் சூர்யா பாலமுருகன் தரப்பினர் தடுத்தனர். முன்னதாக ரேணுப்ரியா தரப்பில் மனுத்தாக்கலும் செய்துவிட்டனர். இது குறித்து எங்கள் கட்சித் தலைமையிடம் தெரிவித்துள்ளோம். உரிய நடவடிக்கை இருக்கும் என நம்புகிறோம்'' என்றார்.