Published:Updated:

``நளினி கருத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்!" - ஊடக சந்திப்புக்கு தடை கோரி காங்கிரஸ் புகார்

நளினி

”நளினி உள்ளிட்ட 7 பேரையும் உச்ச நீதிமன்றம் கருணை அடிப்படையில்தான் விடுதலை செய்திருக்கிறதே தவிர, குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யவில்லை.” - காங்கிரஸ்

``நளினி கருத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும்!" - ஊடக சந்திப்புக்கு தடை கோரி காங்கிரஸ் புகார்

”நளினி உள்ளிட்ட 7 பேரையும் உச்ச நீதிமன்றம் கருணை அடிப்படையில்தான் விடுதலை செய்திருக்கிறதே தவிர, குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யவில்லை.” - காங்கிரஸ்

Published:Updated:
நளினி

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் வகையிலான கருத்துகளைக் கூறி வரும், ராஜீவ் காந்தி கொலைவழக்கு குற்றவாளி நளினியின் ஊடக சந்திப்புக்கு தடை விதிக்க வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா, சிதம்பரம் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான ஆர்.மக்கின், பொதுக்குழு உறுப்பினர் ஏ.நூரலி உள்ளிட்டவர்கள் கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் அளித்தனர்.

அந்த புகாரில், “முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தபோது படுகொலைசெய்யப்பட்டார். இந்த படுகொலை சம்பந்தமான வழக்கில் நளினி,  பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயாஸ், முருகன், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய ஏழு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அது உச்ச நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, 31 ஆண்டுகளுக்கும் மேலாக பேரறிவாளன், நளினி உள்ளிட்ட குற்றவாளிகள் சிறைவாசம் அனுபவித்தார்கள்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கு நளினி மீது காங்கிரஸ் புகார்
ராஜீவ் காந்தி கொலை வழக்கு நளினி மீது காங்கிரஸ் புகார்

குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கும் சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் இவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். உச்ச நீதிமன்றம் நளினி உள்ளிட்ட 7 பேரையும் கருணை அடிப்படையில்தான் விடுதலை செய்திருக்கிறதே தவிர, குற்றவாளிகள் இல்லை என்று கூறி விடுதலை செய்யவில்லை.  இந்நிலையில் முதன்மை குற்றவாளியான நளினி ஊடகங்களுக்கு அளித்துவரும் பேட்டிகளில் பல பொய்யான தகவல்களை அளித்து வருகிறார். தன் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய் என்று சொல்வதுடன், இந்த வழக்கில் சாட்சி கூறிய ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயாவை பற்றி பொய்யான தகவலை கூறுவது வேதனைக்கும் கண்டனத்துக்கும் உரியது.

ராஜீவ் காந்தி படுகொலை குற்றத்தில் உண்மை குற்றவாளிகள் குறித்து சொல்ல விரும்புகிறீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ’நமக்கு அது தெரியாது. அப்படி காட்டிக் கொடுக்கும் பழக்கமும் கிடையாது. அப்படி காட்டிக் கொடுத்திருந்தால் 32 வருடங்கள் சிறையில் இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை’ என்று கூறுகிறார். இதன்மூலம் உண்மை குற்றவாளிகளை மறைக்கின்ற நோக்கத்தில் அவர் பேசி வருகிறார். எனவே காவல்துறை மீண்டும் அவர் மீது வழக்கு தொடுத்து விசாரிக்க வேண்டும். 1,444 சாட்சிகளை விசாரணை செய்து, ஆவணங்களின் அடிப்படையில் தீர்ப்பளித்த நீதிமன்றத்தை நளினி குற்றம்சாட்டுகிறாரா? அப்படி என்றால் நீதிபதிகளெல்லாம் பொய்யானவர்களா? நீதிமன்ற தீர்ப்பெல்லாம் பொய்யானதா?

நளினி தாம் குற்றமற்றவர் என்று கூறுவது பொய். நளினி விடுதலைப் புலிகளுக்கு உறுதுணையாக இல்லாமல் இருந்திருந்தால், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும், 9 போலீஸ் அதிகாரிகளும், 6 பொதுமக்களும் இறந்திருக்க மாட்டார்கள். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் கருணையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருப்பவரும், விடுதலைப்புலிகள் அமைப்பைச் சார்ந்த முருகனை திருமணம் செய்து கொண்டிருப்பவருமான நளினி, ஊடகங்களுக்கு அளித்துவரும் உண்மைக்குப் புறம்பான கருத்துகளால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. எனவே நளினி மீது வழக்கு தொடர்ந்து ஊடக சந்திப்பிற்கு தடைவிதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.