Published:Updated:

`சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வதற்காகத்தான் வாக்களித்தோம்!’- மன்மோகன் சிங் ஓப்பன் டாக்

கடந்த 5 ஆண்டுகள் நீங்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளீர்கள். அப்படியிருக்கும்போது, காங்கிரஸ் அரசை குறைகூறுவது சரியானதல்ல.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங் ( ANI )

மகாராஷ்டிராவில் வரும் 21ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, காங்கிரசுக்கு ஆதரவாகப் பிரசாரம் செய்ய மும்பை வந்திருந்தார், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த மன்மோகன் சிங், ``நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிக்கையைத் தற்போதுதான் பார்த்தேன். அது குறித்து கருத்து தெரிவிக்க நான் விரும்பவில்லை. பொருளாதாரத்தைச் சரிசெய்வதற்கு முன், அதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் மற்றும் அதற்கான கூறுகளைச் சரிசெய்யவேண்டும். இந்த அரசாங்கம் எதிர்க்கட்சிகள் மீது வீரியத்துடன் குற்றம்சுமத்தி வருகிறது. இந்த நடைமுறையால் பொருளாதாரப் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வு காணமுடியாது. நான் பதவியில் இருக்கும்போதும், சிறு பலவீனங்கள் இருந்தன.

மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்
ANI

அதனால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு மீது பொய் பழியை நீங்கள் எப்போதும் சுமத்த முடியாது. கடந்த 5 ஆண்டுகள் நீங்கள்தான் ஆட்சியில் இருந்துள்ளீர்கள். அப்படியிருக்கும்போது, காங்கிரஸ் அரசை குறைகூறுவது சரியானதல்ல. பிஎம்சி வங்கியில் நிகழ்ந்துள்ள மோசடி மிகவும் துரதிர்ஷ்டவசமானது. என்ன நடந்து இருந்தாலும் அந்த வங்கியின் 16 லட்சம் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மகாராஷ்டிரா முதல்வர், பிரதமர் மோடி, மத்திய நிதியமைச்சர் நி்ர்மலா சீதாராமன் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

`பொதுத்துறை வங்கிகளின் நிலை மோசமாக இருந்தது!' - மன்மோகன், ரகுராம் ராஜனைச் சாடிய நிர்மலா சீதாராமன்

அதுபோலவே ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு ஆகியவை இணைந்து பிஎம்சி வங்கி பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். மத்திய அரசின் இறக்குமதி-ஏற்றுமதி கொள்கைகளாலும், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பிரச்னைகளை சீக்கிரம் சரி செய்யாவிட்டால், நாட்டு மக்கள் பெரும் பிரச்னைகளை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். துரதிர்ஷ்டவசமாக மத்திய மற்றும் மகாராஷ்டிரா மாநில பா.ஜ.க அரசுகள் மக்கள் நலத் திட்டங்களை கையில் எடுக்கவில்லை.

ஜம்மு - காஷ்மீர்
ஜம்மு - காஷ்மீர்

ஒரு காலத்தில் அதிகப்படியான முதலீடுகளை ஈர்ப்பதில் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் இருந்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4-வது ஆண்டாக வீழ்ச்சியடைந்து வருகிறது. காஷ்மீருக்கு வழங்கப்படும் சிறப்பந்தஸ்தை உறுதி செய்யும் 370வது சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கு ஆதரவாகத்தான் காங்கிரஸ் வாக்களித்தது; எதிர்த்து அல்ல. இது ஒரு தற்காலிகமான நடைமுறை என்று நாங்கள் நம்புகிறோம். ஆனால், ஜம்மு - காஷ்மீர் மக்களின் விருப்பத்துடன்தான் மாற்றம் நிகழவேண்டும். 370-வது ரத்து செய்யப்பட்ட விதத்தைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம்” என்றார்.