Published:Updated:

`பியூஷ் கோயல், எடியூரப்பா, எடப்பாடி பழனிசாமி...' - பீட்டர் அல்போன்ஸின் சந்தேக வரிசை!

பீட்டர் அல்போன்ஸ்
News
பீட்டர் அல்போன்ஸ்

காங்கிரஸ் கட்சி அளித்த 1 கோடி ரூபாய் நிவாரண நிதியை தமிழக அரசு பெற மறுத்துவிட்டது. இதுகுறித்து கேள்வி எழுப்பும் பீட்டர் அல்போன்ஸ், ''பியூஸ்கோயல், எடியூரப்பா, எடப்பாடி பழனிசாமி என இம்மூவரும் ஒரே மாதிரியாக மறுத்திருக்கிறார்கள்'' என்று சந்தேகம் கிளப்பியுள்ளார்.

'கொரோனாவைத் தடுக்க அரசிடம் போதுமான நிதி ஆதாரம் இருப்பதால், காங்கிரஸ் கட்சி தந்துள்ள 1 கோடி ரூபாய் தேவையில்லை' என்று சொல்லி, தமிழக அரசு அதை திருப்பியனுப்பியுள்ளதும், பிரதமர் மோடியிடம் 'கொரோனா தடுப்புப் பணிகளுக்காக நிதி வேண்டி' பட்டியலிட்டிருப்பதும் இன்றைய தினசரிகளின் அடுத்தடுத்த பக்கங்களில் செய்திகளாகியிருக்கின்றன!

இதற்கிடையில், சிலதினங்களுக்கு முன்பு மூடப்பட்டுவிட்ட டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கும் தமிழக அரசு, 'டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அரசின் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதாக...' காரணம் தெரிவித்துள்ளது. இப்படி எதிரும் புதிருமாகத் தமிழக அரசு தெரிவித்துவரும் கருத்துகள் குறித்துப் பேசும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ்,

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

''கொரோனா ஊரடங்கால், வருமானம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் இப்போதுதான் தங்களது சொந்த ஊர்களுக்குப் பயணமாகி வருகிறார்கள். ஆனால், இந்நேரத்திலும்கூட இந்த எளிய மக்களிடம் மத்திய மாநில அரசுகள் பயணக் கட்டணம் வசூலிப்பதென்பது 'இழவு வீட்டில் கடன் வசூலித்த கதை'யாகத்தான் இருக்கிறது.

இந்தக் கொடுமையைத் தடுக்கும்விதமாகத்தான் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி, 'இந்தியா முழுக்க உள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயணக் கட்டணத்தை காங்கிரஸ் கட்சியே ஏற்கும்' என்று அறிவித்தார். இதையடுத்து, நாட்டிலேயே முதல் மாநிலமாகத் தமிழகக் காங்கிரஸ் கட்சி 1 கோடி ரூபாயைத் தமிழக அரசுக்குத் தர முன்வந்து கடிதம் எழுதியது. இந்தக் கடிதத்துக்கு நேற்றைய தினம்தான் தமிழக அரசு பதிலளித்திருக்கிறது. அதில், 'ஏற்கெனவே எங்களிடம் பண வசதி இருப்பதால், இந்தப் பணம் தேவையில்லை' என்று பதில் தெரிவித்திருக்கிறார்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்தப் பதில் கடிதம் அனுப்பியுள்ள அதே தினத்தில்தான், பிரதமரிடம் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நிதி உதவி கேட்டிருக்கிற செய்தியும் வெளியாகியிருக்கிறது. அதாவது, 'எந்தெந்த நிதிகள் மத்திய அரசிடமிருந்து இன்னும் வர வேண்டி உள்ளது என்பது குறித்தும் நிதிப் பற்றாக்குறையால் தமிழகத்தில் எந்தெந்தப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது' என்பது குறித்தும் மிக விரிவாக பிரதமரிடம் தெளிவுபடுத்தியிருக்கிறார். ஆக, இப்படியொரு நெருக்கடியான காலகட்டத்தில், அங்கீகரிக்கப்பட்ட ஓர் எதிர்க்கட்சி, தனது அறக்கட்டளையின் மூலமாக வருகிற வருமானத்திலிருந்து 1 கோடி ரூபாயை எடுத்துக்கொடுத்தால், அதை 'வேண்டாம்' என்று முதல்வர் மறுத்திருப்பது விபரீதமான பதிலாகவே தெரிகிறது.

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில், மக்களின் துயர் துடைக்கும் பணிகளில் மத்திய மாநில அரசுகள் மட்டுமே ஈடுபட வேண்டும் என்ற ஏகாதிபத்திய நினைப்பை பிரதமரும் நமது முதல்வரும் முதலில் கைவிட வேண்டும். இந்த மாதிரியான நேரங்களில் 'ஊர் கூடி தேர் இழுப்பது' போன்று அனைவரது பங்களிப்பும் இருக்க வேண்டும். அதற்கான முயற்சியாக அனைவரையும் ஒரே தளத்தில் ஒருங்கிணைத்து செயல்பட வைப்பதுதான் அரசியல் அதிகாரத்தில் இருப்போரின் பணியாகவும் இருக்க வேண்டும்.

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

'காங்கிரஸ் கட்சியின் நிதி தேவையில்லை' என்று நமது முதல்வர் சுய விருப்பத்துடனே தெரிவித்தாரா அல்லது நிர்பந்தத்தின் அடிப்படையில் இப்படிக் கூறினாரா என்பதில் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. ஏனெனில், இதேபோன்ற பதிலைத்தான் கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பாவும் அந்த மாநில காங்கிரஸ் கட்சியிடம் தெரிவித்திருக்கிறார். மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் இதே பதிலைத்தான் சொல்கிறார்.

எங்கள் கடிதத்துக்கு இத்தனை நாள் தாமதமாகப் பதிலளித்திருப்பதை வைத்துப் பார்க்கும்போது, மத்திய அரசுடன் கலந்தாலோசித்துதான் இவர்கள் இந்தப் பதிலைச் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. அதாவது, காங்கிரஸ் கட்சியின் நிதி உதவியைப் பெற்று மக்களுக்கு அளித்தால், தங்களுக்குக் கிடைக்கும் அரசியல் ஆதாயம் போய்விடும் என்று பயப்படுகிறார்கள்.

சீனப் போரின்போது, தமிழ்நாட்டில் காமராஜர் தலைமையிலிருந்த காங்கிரஸ் கட்சி, அனைத்து எதிர்க்கட்சிகளின் உதவிகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தியது. இதேபோல், கருணாநிதி, எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலங்களிலும்கூட எதிர்க்கட்சிகளின் உதவிகளைப் பெற்று பேரிடர்களை வெற்றிகரமாக எதிர்கொண்ட வரலாறு நமக்கு உண்டு. இதுபோன்ற முன்னுதாரண அணுகுமுறையை எடப்பாடி அரசு, ஏன் பின்பற்றவில்லை...'' என்றார் ஆதங்கமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'வருமான இழப்பை' காரணமாகச் சொல்லி டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்ச நீதிமன்றத்தை நாடுகிறது தமிழக அரசு. மேலும், கொரோனா தடுப்புப் பணிகளுக்கான நிவாரண நிதிக்காகப் பொதுமக்கள், தங்களால் இயன்ற தொகையை அரசுக்குத் தந்து உதவ வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கிறது. இந்தச் சூழலில், தேசிய அளவில் அதிகாரபூர்வ எதிர்க்கட்சியாக விளங்கிவரும் காங்கிரஸ் கட்சி தானே முன்வந்து அளிக்கும் நிதி உதவியைப் பெற மறுத்து திருப்பி அனுப்பியிருப்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

ஏற்கெனவே, அம்மா உணவகங்கள் மூலமாக மக்களுக்கு இலவச உணவு வழங்கி வந்தது தமிழக அரசு. இதில் கூடுதலாக மாவட்ட அ.தி.மு.க சார்பில் நிதி உதவி பெற்றும் ஆங்காங்கே இலவச உணவு வழங்கப்பட்டு வந்தது. 'அரசு நிறுவனமான அம்மா உணவகங்களில் அ.தி.மு.க சார்பில் இலவச உணவு வழங்குவது மரபை மீறிய செயல். தனிப்பட்ட கட்சி நலனுக்காகவும் வளர்ச்சிக்காகவும் இப்படி அரசு நிறுவனத்தைப் பயன்படுத்துவது தவறு' என அப்போது கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது தமிழக எதிர்க்கட்சியான தி.மு.க. மேலும், 'அ.தி.மு.க சார்பில், இலவச உணவு வழங்க அனுமதிக்கும்போது, தி.மு.க சார்பில் வழங்கப்படும் நிதியையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு இலவச உணவு வழங்க வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்தது. ஆனாலும் தி.மு.க சார்பில் அளிக்கப்பட்ட நிதி, ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

இந்நிலையில், தற்போது கொரோனா தடுப்புப் பணிக்காக காங்கிரஸ் கட்சி அளிக்கும் நிதி உதவியும் தமிழக அரசால் மறுக்கப்பட்டுள்ளது. 'அரசியல் ரீதியாகத் தங்கள் கட்சியை மக்களிடையே பிரபலப்படுத்தும் குறுகிய நோக்கத்தில்தான் அ.தி.மு.க அரசு இதுபோல் நடந்துகொள்கிறதா...' என்ற கேள்வியை 'வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை' அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரிடம் கேட்டோம்...

''அ.தி.மு.க-வினர் நிதியளிப்பால் அம்மா உணவகத்தில் இலவச உணவு வழங்கப்பட்டு, மக்களிடையே அதற்கு நல்ல பெயரும் கிடைத்தது. இதையெல்லாம் பார்த்தபிறகுதான் 'நாங்களும் நிதி தருகிறோம்' என்று தி.மு.க-வினர் வருகிறார்கள்.

அடுத்து, வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஊர் திரும்புவதற்கான பயணச் சீட்டுக் கட்டணம் என்பதே மிகக்குறைவான தொகையாகத்தான் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்தக் குறைந்தத் தொகையையும்கூட தொழிலாளர்களின் சொந்த மாநில அரசுகளே ஏற்றுக்கொள்ளும் எனவும் அப்படி ஏற்றுக்கொள்ளாத மாநிலங்களுக்குப் பதிலாகத் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் எனவும் ஏற்கெனவே அறிவித்துவிட்டோம். இதற்குப் பிறகு வந்து, 'புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான பயணச்சீட்டு கட்டணத்தை நாங்கள் செலுத்துகிறோம்' என்று காங்கிரஸ் கட்சி சொன்னால், என்ன அர்த்தம்?

உண்மையிலேயே அரசியல் கலப்பின்றி, நல்ல எண்ணத்துடன்தான் உதவி செய்வதாக எதிர்க்கட்சிகள் நினைத்தால், முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு எத்தனை கோடி ரூபாயையும் தரலாமே! வாங்கிக்கொள்ளத் தயாராகத்தானே இருக்கிறோம். மருத்துவம், போக்குவரத்து, உணவு என்று மக்களின் அனைத்துத் தேவைகளுக்கும் இது பயன்படுமே. ஆக இப்படி ஆக்கபூர்வமாக உதவ முன்வராமல், 'புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் பயணக் கட்டணத்துக்காக மட்டுமே நிதி தருகிறோம்' என்று சொன்னால், அது சரியான நடைமுறைதானா? நீங்கள் சொல்கிற அந்தப் பயணச்சீட்டு வசதியைத்தான் நாங்கள் ஏற்கெனவே செய்துமுடித்துவிட்டோமே... திரும்பவும் அதையே நீங்கள் செய்ய வேண்டும் என்று சொன்னால் எப்படி? ஆக, இதையெல்லாம் மறைத்துவிட்டு, 'மத்திய அரசுக்கு பயந்துதான் நாங்கள் நிதியை ஏற்க மறுப்பதாக' காங்கிரஸ் கட்சியினர் சொல்வதுதான் உண்மையிலேயே அரசியல்!

சிறப்பு ரயில்
சிறப்பு ரயில்

'சவாலான இந்த நேரத்தில், அரசுக்கு நிதி உதவி அளித்து பொதுமக்கள் உதவ வேண்டும்' என்று வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை அளித்தே முதல்வர் இப்போதும் கேட்டிருக்கிறார். எனவே, மக்களுக்கு உதவ வேண்டும் என்ற உங்களுடைய பற்றுதலையும் நேசத்தையும் காட்டும் விதமாக, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாகத் தந்து உதவுங்களேன்!'' என்றார் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.