இந்திய ராணுவத்தில் புதிய முறையில் ஆள் சேர்க்கும் விதமாக, `அக்னிபத்' எனும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்தத் திட்டத்தில், நான்காண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் இளைஞர்களில், 25 சதவிகிதம் பேர் மட்டுமே நேரடியாக இந்திய ராணுவத்தில் பணியமர்த்தப்படுவார்கள் என்று அரசு தெரிவித்திருக்கிறது. இந்த முக்கியக் காரணத்தை முன்வைத்து, நாடு முழுவதும் இளைஞர்கள் அக்னிபத் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்திவருகின்றனர்.
இந்த நிலையில், அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்த, குடியரசுத் தலைவரைச் சந்திக்கவிருப்பதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் அஜய் மக்கன் தகவல் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து ஊடகங்களிடம் பேசிய அஜய் மக்கன், ``இன்று ஜந்தர் மந்தரில் நாங்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்துகொண்டு, மாலை 5 மணியளவில் குடியரசுத் தலைவரைச் சந்தித்து அக்னிபத் திட்டத்தை திரும்பப் பெறக் கோருவோம். அது மட்டுமல்லாமல், இந்தத் திட்டம் குறித்து முதலில் இளைஞர்களிடமும், நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட வேண்டும். ஆனால், அதற்கு முன்னதாக `அக்னிபத்' திட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும். எங்கள் எம்.பி (ராகுல்) எப்படி துன்புறுத்தப்பட்டார், அமலாக்கத்துறை எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் நாங்கள் குடியரசுத் தலைவரிடம் தெரிவிப்போம்" என்று தெரிவித்தார்.
