Published:Updated:

கொடுங்கையூர்: மேடை அருகே ஸ்ட்ரெச்சர்! - குப்பைக் கிடங்கை அகற்ற காங்கிரஸின் கையெழுத்து பிரசாரம்

காங்கிரஸ்
காங்கிரஸ்

`ஆங்காங்கே உள்ள மண்டலங்களில்வைத்து குப்பைகளைப் பிரித்து சுத்திகரியுங்கள். ஏற்கெனவே கொடுங்கையூரில் குவிந்துகிடக்கும் குப்பைகளைப் படிப்படியாக அகற்றுங்கள்’ - கே.எஸ்.அழகிரி

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது கொடுங்கையூர் குப்பைக் கிடங்கு. அதை அங்கிருந்து முழுவதுமாக அகற்றக் கோரி பல்வேறு கட்சிகளும் போராட்டம் நடத்திவந்த சூழ்நிலையில், பிப்ரவரி 7-ம் தேதியன்று மாலை தமிழக காங்கிரஸ் சார்பில் அதன் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் வித்தியாசமான முறையில் போராட்டம் நடத்தினார்கள்.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

சுற்றுச்சூழல் மாசுபட்டு அதனால் மக்கள் அனுபவிக்கும் கொடுமைகளை விளக்கும் வகையில் எழில் நகரைச் சேர்ந்த சுந்தர் என்பவரை நிகழ்ச்சி நடந்த மேடை அருகே ஸ்ட்ரெச்சரில் படுக்கவைத்திருந்தனர். நிகழ்ச்சி முடிந்ததும், சுந்தரிடம் கே.எஸ்.அழகிரி பேசினார்.. ``எனக்கு குப்பை பிரச்னையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு கஷ்டப்பட்டுவருகிறேன். எனது குடும்பத்தினரும் அவதிப்பட்டுவருகின்றனர். நீங்கள்தான் நிரந்தரமாகப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கண்ணீருடன் சொல்ல... அவரை ஆறுதல்படுத்தினார் கே.எஸ்.அழகிரி.

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

``சென்னையிலுள்ள ஒன்பது மண்டலக் குப்பைகளை இங்கே கொண்டு வந்து தினமும் 2,500 டன் கொட்டுகிறார்கள். தினமும் வருவதை முதலில் நிறுத்துங்கள். ஆங்காங்கேயுள்ள மண்டலங்களில்வைத்து குப்பைகளைப் பிரித்து சுத்திகரியுங்கள். ஏற்கெனவே கொடுங்கையூரில் குவிந்துகிடக்கும் குப்பைகளைப் படிப்படியாக அகற்றுங்கள்'' என்று அரசுக்குக் கோரிக்கை வைத்தார் கே.எஸ்.அழகிரி. அங்குள்ள 10,000 பேரிடம் கையெழுத்து வாங்கி, மாநகராட்சி கமிஷனர், கலெக்டரிடம் மனுகொடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள் காங்கிரஸார்.

அடுத்த கட்டுரைக்கு