Published:Updated:

`நள்ளிரவில் ஒப்புக்கொண்ட ஆளுநர்; அவசர பதவியேற்பு'- அமைச்சரவையை முன்வைத்து காங்கிரஸின் 10 கேள்விகள்!

பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தது குறித்து காங்கிரஸ் கட்சி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

பட்னாவிஸ் - அஜித் பவார்
பட்னாவிஸ் - அஜித் பவார் ( twitter )

மகாராஷ்டிராவில் யாரும் எதிர்பார்க்காத விதமாக பா.ஜ.க-வின் தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்.சி.பி-யின் அஜய் பவார் துணை முதல்வராகவும் நேற்று காலை பதவியேற்றுள்ளனர். மகாராஷ்ராவில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்பதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டதாக முதல்வர் பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார். ஆனால், இதற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை எனத் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார். ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விஷயத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என மூன்று கட்சிகளும் உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்துள்ளன.

தேவேந்திர பட்னாவிஸ்
தேவேந்திர பட்னாவிஸ்

2018-ல் எடியூரப்பாவை 48 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட்டது போல், தேவேந்திர ஃபட்னாவிஸ்-க்கும் உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கு இன்று காலை அவசர மனுவாக விசாரிக்கப்பட இருக்கிறது. இந்த நிலைமையில் பட்னாவிஸ் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தது குறித்து காங்கிரஸ் கட்சி சில கேள்விகளை எழுப்பியுள்ளது.

* பா.ஜ.க தரப்பில் இருந்து ஆட்சி அமைக்க உரிமை கோரியது யார்?

* பட்னாவிஸ் ஆட்சி அமைக்க பா.ஜ.க, தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் எத்தனை பேர் ஆதரவு தெரிவித்து கையெழுத்திட்டனர்?

* இரவு நேரத்தில் அத்தனை கையெழுத்துக்களையும் ஆளுநர் எவ்வாறு சரி பார்த்தார்?

* மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக்கொள்ள ஆளுநர் எத்தனை மணிக்கு கோரிக்கை விடுத்தார்?

* மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்றிரவு எத்தனை மணிக்கு நடைபெற்றது?

பட்னாவிஸ்
பட்னாவிஸ்

* ஜனாதிபதி ஆட்சியை விலக்கிக்கொள்ள குடியரசுத் தலைவருக்கு எத்தனை மணிக்கு அமைச்சரவை கோரிக்கை விடுத்தது?

* அமைச்சரவையின் முடிவுக்கு எத்தனை மணிக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்?

* பட்னாவிஸையும், அஜித் பவாரையும் பதவியேற்க எத்தனை மணிக்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்?

* பதவியேற்பு நிகழ்ச்சி எத்தனை மணிக்கு நடைபெற்றது?

* சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிருபிக்கும் படி பட்னாவிஸுக்கு ஆளுநர் ஏன் இதுவரை உத்தரவிடவில்லை?

என்ற 10 கேள்விகளை எழுப்பியுள்ளது. இதே கேள்விகளை முன்வைத்து இன்று நீதிமன்றத்திலும் வாதாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.