`உடனே அறிவித்தால் கூட்டம் எப்படி வரும்?' - ப.சிதம்பரம் கைது போராட்டம் குறித்து விஜயதரணி

ப.சிதம்பரம் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய கமல், `வேட்டி கட்டிய தலைவர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்’ என்று பேசினார். அப்போது கருணாநிதியும் இதை ஆமோதித்துப் பேசினார்.
ப.சிதம்பரம் கைதுக்கு எதிரான போராட்டத்தில் காங்கிரஸாரைக் காண முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுமட்டுமன்றி, சிதம்பரம் கைது விவகாரத்தை தி.மு.க-வினர் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை என்கிறார்கள். பெயரளவுக்கு டி.கே.எஸ்.இளங்கோவனை வைத்துக் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர். `ப.சிதம்பரம் சட்டவல்லுநர், வழக்கை எப்படி எதிர்கொள்வதென்று அவருக்குத் தெரியும்’ என்று ஸ்டாலின் பேசியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க தரப்பில் விசாரித்தபோது, ``மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருக்கும்போதுதான், 2ஜி விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தீவிரமடையும்போது, `மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டும்’ என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மூலம் கருணாநிதிக்கு அழுத்தம் கொடுத்தவர் சிதம்பரம்.
2ஜியை மையமாக வைத்து தி.மு.க-வை பலவீனப்படுத்தியவர் சிதம்பரம். 2012-ம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில், கருணாநிதி, ரஜினி, கமல், வைரமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் பேசிய கமல், `வேட்டி கட்டிய தலைவர் ஒருவர் பிரதமராக வர வேண்டும்’ என்று பேசினார். அப்போது கருணாநிதியும் இதை ஆமோதித்துப் பேசினார்.

அந்தவகையில், ப.சிதம்பரத்துக்காக குரல் கொடுத்தது தி.மு.க தான். ஒருவேளை 2014-ல் மக்களவைத் தேர்தல் ரேஸில் பிரதமர் பட்டியலில் சிதம்பரத்தின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால், சிதம்பரமோ, தமிழகத்தில் தி.மு.க-வை பலவீனப்படுத்தி காங்கிரஸை முன்னிலைப்படுத்தப் பார்த்தார்’ என்கிறார்கள் தி.மு.க நிர்வாகிகள்.
ஆனால், இந்த விவகாரம் தொடர்பாகப் பேசும் காங்கிரஸ் நிர்வாகிகள், `தனது ஆதரவாளர்களுக்குக்கூட பெரிதாக எதுவும் செய்யாதவர் ப.சிதம்பரம். மத்தியில் இருக்கும்போது, தமிழகத்தின் நலன்கள் மீது பாராமுகமாகவே இருந்தார். தமிழக காங்கிரஸூக்கும் அவர் எதுவும் செய்யவில்லை” என்கின்றனர்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திலும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளைப் பார்க்க முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. குமரி ஆனந்தன் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.கிருஷ்ணசாமி, தணிகாசலம், கோபண்ணா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் சிலர் கலந்துகொள்ளவில்லை.

இதுதொடர்பாக, காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணியிடம் பேசினோம். ``நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, நான் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் பங்கேற்றிருந்தேன். அதனால் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றபடி இதில் வேறெந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை. உடனே ஆர்ப்பாட்டத்தை அறிவித்தால் எப்படிக் கூட்டம் வரும். ஒரு நாளுக்கு முன்பே அறிவிந்திருந்தால்தான் தலைவர்கள் கலந்துகொள்ள வாய்ப்பிருந்திருக்கும். இந்த உடனடி அறிவிப்புதான், கூட்டம் குறையக் காரணம்” என்றார் இயல்பாக.