Published:Updated:

மீண்டும் வெடிக்கும் ரஃபேல் விவகாரம்; தேர்தல் காலத்தில் பா.ஜ.க-வுக்குப் பின்னடைவா?!

ரஃபேல் விமானம் அருகே ராஜ்நாத் சிங்
ரஃபேல் விமானம் அருகே ராஜ்நாத் சிங்

அடங்கியிருந்த ரஃபேல் ஒப்பந்த விவகாரம் மீண்டும் வெடித்திருக்கிறது. ரஃபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டுமென்கிற கோரிக்கையும் எழுந்துள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஆட்சிக் காலத்தில், ரூ.72,000 கோடியில் 126 ரஃபேல் விமானங்களை பிரான்ஸிடமிருந்து கொள்முதல் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தவுடன், பழைய ஒப்பந்தத்தைக் கைவிட்டு 36 ரஃபேல் விமானங்களை ரூ.59,000 கோடியில் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை 2015-ம் ஆண்டு, ஏப்ரல் 10-ம் தேதி பிரதமர் மோடி வெளியிட்டார். அதையடுத்து, காங்கிரஸ் கட்சி பல குற்றச்சாட்டுகளை எழுப்பியது. ‘ஐக்கிய முற்போக்கு ஆட்சிக் காலத்தில் போர் விமானங்களை தலா ரூ.526 கோடியில் வாங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. அதே விமானங்களை தலா ரூ.1,670 கோடிக்கு மோடி தலைமையிலான அரசு வாங்குகிறது’ என்று குற்றம்சாட்டிய காங்கிரஸ் கட்சி, ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறியது.

ரஃபேல் விமானங்கள்
ரஃபேல் விமானங்கள்

அந்த விவகாரம், 2019 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலுக்கு முன்பாக, பா.ஜ.க-வுக்கு மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. ஆனாலும், அந்தக் குற்றச்சாட்டுகளை பா.ஜ.க-வும் `டசால்ட் ஏவியேஷன்' நிறுவனமும் மறுத்தன. ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் இந்திய இடைத்தரகர் ஒருவருக்கு டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் சுமார் ரூ.8.8 கோடியை லஞ்சமாகக் கொடுத்ததாக பிரான்ஸைச் சேர்ந்த `மீடியா பார்ட்’ என்ற இணையதளம் கடந்த ஏப்ரல் மாதம் செய்தி வெளியிட்டது. தற்போது அந்த இணையதளம், ‘ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பாக இந்தியா, பிரான்ஸ் இரண்டு அரசுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் நடைபெற்றதாகச் சொல்லப்படும் முறைகேடு தொடர்பாக விசாரிக்க நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்’ என்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், நீதிபதியின் விசாரணை கடந்த ஜூன் 14-ம் தேதி முறைப்படி தொடங்கியிருக்கிறது என்றும் மீடியா பார்ட் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தற்போது இந்திய அரசியலில் மீண்டும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. ரஃபேல் சர்ச்சையில் ரிலையன்ஸ் நிறுவனமும் சிக்கியிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தைக் கைவிட்டு 36 ரஃபேல் விமானங்களைக் கொள்முதல் செய்வதற்கான அறிவிப்பை 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். அதற்கு முன்னதாக, ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனம், தனது இந்தியத் தொழில்நுட்பப் பங்குதாரராக அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தைத் தேர்வுசெய்து முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டதாக மீடியா பார்ட் செய்தி வெளியிட்டது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

2017-ம் ஆண்டு டசால்ட் மற்றும் ரிலையன்ஸ் இணைந்து, டி.ஆர்.ஏ.எல் எனப்படும் 'டசால்ட் ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமிடெட் ' என்ற கூட்டு நிறுவனத்தை உருவாக்கி புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அரசியல் காரணங்களுக்காகக் கட்டாயத்தின் பேரில் ரிலையன்ஸுடன் டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்ததாகவும், அனில் அம்பானி நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் டசால்ட் நிறுவனம் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்றும் செய்திகள் வெளியாகின.

இந்திய அரசின் நிர்பந்தம் காரணமாகவே ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் சேர்த்ததாகவும், தங்களுக்கு வேறு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும் அப்போது பிரான்ஸ் ஜனாதிபதியாக இருந்த ஹாலண்டே கூறினார். அது, இரு நாட்டு அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படியாக, ரஃபேல் விவகாரம் மோடி அரசுக்குப் பெரும் நெருக்கடியை அதிகரித்துவந்த நேரத்தில், ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் ஊழல் எதுவும் நடைபெறவில்லை என்று கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ரஃபேல் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன், ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதையடுத்து, பா.ஜ.க நிம்மதிப் பெருமூச்சுவிட்டது.

ரஃபேல் விமானம்
ரஃபேல் விமானம்

தற்போது, நீதிபதி விசாரணை குறித்து மீடியா பார்ட் இணையதளத்தில் வெளியாகியிருக்கும் செய்திகளைத் தொடர்ந்து, ரஃபேல் விவகாரம் மீண்டும் பா.ஜ.க-வுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

ரஃபேல் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் கோரிக்கை வைத்துள்ளன. காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா, ``ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்திருப்பது தற்போது தெளிவாகியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ராகுல் காந்தியின் நிலைப்பாடு நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தேசியப் பாதுகாப்பு மற்றும் தேசிய அடையாளத்துடன் தொடர்புடையது என்பதால், இதற்கு நியாயமான, சுதந்திரமான நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைதான் ஒரே வழி" என்றார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ’ரஃபேல் விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அரசாங்கத்தின் பங்கு என்ன என்பது குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளது.

‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ - உச்ச நீதிமன்றம் கெடுபிடி; தமிழகத்தின் நிலைப்பாடு என்ன?

ஆனால், ரஃபேல் விவகாரம் தொடாபான எந்தவொரு விசாரணைக்கும் மத்திய அரசு தயாராக இல்லை. ரஃபேல் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வதந்திகளைப் பரப்பிவருவதாகவும், அதன் மூலம் நாட்டை வலுவிழக்கச் செய்ய அந்தக் கட்சி முயன்றுவருவதாகவும் பா.ஜ.க-வின் செய்தித் தொடர்பாளர் சம்பித் பாத்ரா குற்றம்சாட்டினார். மேலும், ``ரஃபேல் போர் ஒப்பந்தம் தொடர்பாக தன்னார்வ அமைப்பு ஒன்று பிரான்ஸில் அளித்த புகாரின் அடிப்படையில் அதை விசாரிக்க நீதிபதி நியமிக்கப்பட்டுள்ளார். அதை இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

மோடி
மோடி

குற்றச்சாட்டுகளை பா.ஜ.க மறுத்துவந்தாலும், பிரான்ஸில் தொடங்கியிருக்கும் நீதிபதி விசாரணை இந்திய அரசுக்கு எதிராக அமைந்தால், அது பா.ஜ.க-வுக்கு நெருக்கடியைக் கொடுக்கும். உ.பி., குஜராத், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெறவிருக்கின்றன. அப்போது, ரஃபேல் விவகாரம் முக்கியப் பிரச்னையாக எதிர்க்கட்சிகளால் முன்னிறுத்தப்படும். பா.ஜ.க-வுக்கு இந்த விவகாரம் தேர்தலில் பின்னடைவை ஏற்படுத்துமா அல்லது பா.ஜ.க இதை எளிதாகச் சமாளித்துக் கடந்துவிடுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு