Published:Updated:

புதுச்சேரி: `அரசு விழாவைச் சொந்தம் கொண்டாடும் பா.ஜ.க!’ - உரிமை மீறல் புகார் அளிக்கும் காங்கிரஸ்

கொரோனா தடுப்பூசி முகாம்
கொரோனா தடுப்பூசி முகாம்

“பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கும் ஆறு தொகுதிகளில் நடக்கும் அரசு விழாக்களை காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர் தொடங்கிவைக்கலாமா? அரசு விழாவை தாங்கள் நடத்தும் விழாபோல காட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர்” - காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன்

புதுச்சேரி மாநிலம் முழுவதும் சுகாதாரத்துறை சார்பில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைப்பெற்றுவருகிறது. அதேபோல லாஸ்பேட்டையில் குறிஞ்சிநகர், ஜீவானந்தபுரம் ஆகிய பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாகத் தடுப்பூசி முகாம் நடந்தது. அந்த இடங்களில் பா.ஜ.க-வினர் தங்கள் பேனர்களை வைத்ததுடன், கட்சிக் கொடிகளையும் பறக்கவிட்டனர். அதுமட்டுமல்லாமல் அந்த முகாம்களை பா.ஜ.க-வின் மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கிவைத்தார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன்
காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன்

இந்தநிலையில் நேற்று காலை செல்லப்பெருமாள்பேட்டையில் ஊத்துக்காட்டு மாரியம்மன் கோயில் வளாகத்தில் தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அங்கும் பா.ஜ.க-வினர் அவர்களது கட்சிக் கொடிகளைக் கட்டி, பேனர்களையும் வைத்திருந்தனர். அப்போது, ‘இது அரசு நடத்தும் தடுப்பூசி முகாம். இங்கு ஏன் உங்கள் கட்சிக் கொடிகளை வைக்கிறீர்கள்?’ என்று எதிர்ப்பு தெரிவித்தனர் பணியில் இருந்த சுகாதாரத்துறை ஊழியர்கள். அதனால் சுகாதாரத்துறை ஊழியர்களிடமும், பணியில் இருந்த மருத்துவரிடமும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பா.ஜ.க நிர்வாகிகள்.

தகவலறிந்து தனது ஆதரவாளர்களுடன் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்துக்குச் சென்றார் லாஸ்பேட்டை தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன். அதையடுத்து அங்கிருந்த பா.ஜ.க நிர்வாகிகள் கலைந்து சென்றனர். ஆனாலும் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நீடித்தது. தொடர்ந்து தடுப்பூசி முகாமைத் தொடங்கிவைத்த எம்.எல்.ஏ வைத்தியநாதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “ஏற்கெனவே குறிஞ்சிநகர், ஜீவானந்தபுரம் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை பா.ஜ.க-வினர் நடத்துவதுபோல கட்சிக்கொடி, பேனர்களை வைத்திருந்தனர்.

புதுச்சேரி: ’அரசு நிறுவனங்களைப்போல ராமரையும் பா.ஜ.க விற்கிறது!’- கொதிக்கும் காங்கிரஸ் எம்.பி!

தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒரு கட்சியின் தலைவர் முகாமைத் தொடங்கிவைக்கிறார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளேன். பா.ஜ.க வெற்றிபெற்றிருக்கும் ஆறு தொகுதிகளில் நடக்கும் அரசு விழாக்களை காங்கிரஸ் மற்றும் தி.மு.க-வினர் தொடங்கிவைக்கலாமா? அரசு விழாவைத் தாங்கள் நடத்தும் விழாபோலக் காட்டிக்கொண்டு சொந்தம் கொண்டாடுகின்றனர். இது தொடர்பாக சபாநாயகரிடம் உரிமை மீறல் புகாரைத் தெரிவிக்கவிருக்கிறேன்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு