Published:Updated:

`நேரம் கிடைக்கும்போது படியுங்கள்!' -மோடிக்கு அரசியலமைப்பு புத்தகத்தை அனுப்பிய காங்கிரஸ்

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

காங்கிரஸ், தனது ட்விட்டர் பதிவுடன் அமேசானில் புத்தகம் ஆர்டர் செய்த ஸ்கிரீன் ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளது. முகவரியில், பி.எம்.மோடி, சென்ட்ரல் செக்ரட்ரியேட், புது டெல்லி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா, 71-வது குடியரசு தின விழாவை நேற்று கொண்டாடியது. காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் மோடிக்குக் குடியரசு தினவிழாவையொட்டி இந்திய அரசியலமைப்புச் சட்ட புத்தகத்தை அனுப்பியுள்ளனர். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச்சட்டம் எனப் பல விஷயங்களை முன்னெடுப்பதால் அவரை விமர்சிக்கும்விதமாக காங்கிரஸ் கட்சியினர் இந்தச் செயலைச் செய்துள்ளனர்.

அரசியலமைப்புப் புத்தகத்தை அவருக்கு அனுப்பியதன் அடையாளமாகத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். காங்கிரஸின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில், ``மோடி அவர்களே, இந்திய அரசியலமைப்புப் புத்தகம் விரைவில் உங்களுக்குக் கிடைக்கும். நாட்டைப் பிளவுபடுத்த நினைக்கும்போது, இந்த அரசியலமைப்புப் புத்தகத்தைப் படியுங்கள். இப்படிக்கு காங்கிரஸ்" எனக் கடித வடிவில் எழுதியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பகிர்ந்த படம்
காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பகிர்ந்த படம்

ட்விட்டர் பதிவுடன் அமேசானில் புத்தகம் ஆர்டர் செய்த ஸ்கிரீன் ஷாட் ஒன்றையும் பகிர்ந்துள்ளனர். முகவரியில், பி.எம்.மோடி, சென்ட்ரல் செக்ரட்ரியேட், புது டெல்லி என்று பதிவிட்டுள்ளனர். அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14, 15 மற்றும் 19 ஆகியவற்றையும் சற்று விளக்கமாகப் பதிவிட்டு பா.ஜ.க-வை விமர்சித்துள்ளது காங்கிரஸ்.

குடியரசு தின விழா தொடர்பாக நடந்த விழாவில் பேசிய சோனியா காந்தி, ``மதம், மொழி மற்றும் எல்லை ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்துவதற்கும் அரசியலமைப்பின் மதிப்பைக் குறைப்பதற்கும் சதித்திட்டம் தீட்டப்படுகிறது. இதனால் நாடு முழுவதும் பதற்றம், பயம், பாதுகாப்பின்மை ஆகியவை மக்களிடம் உருவாகியுள்ளது" என்று பேசினார்.

பா.ஜ.க ஆதரவாளர்கள் காங்கிரஸின் இந்தச் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ட்வீட் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆர்டர் திரும்ப வந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் நோட்டிபிகேஷனின் ஸ்க்ரீன்ஷாட்டையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ள காங்கிரஸ் கட்சி, ``இந்திய மக்களே, நாங்கள் முயற்சித்தோம். ஆனால், அரசியலமைப்பின் மீது மோடி அக்கறைக் காட்டவில்லை" என்று பதிவிட்டுள்ளனர்.

`பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் அரசியலமைப்பு!’- கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு
அடுத்த கட்டுரைக்கு