காங்கிரஸ் கட்சியிலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு விலகிய, அந்தக் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.ஆண்டனியின் மகனுமான அனில் ஆண்டனி இன்று பா.ஜ.க-வில் இணைந்தார்.

முன்னதாக மோடி குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கடந்த ஜனவரியில் காங்கிரஸிலிருந்து விலகுவதாக அனில் ஆண்டனி அறிவித்தார்.
இந்த நிலையில், பா.ஜ.க-வின் 44-ம் ஆண்டு நிறுவன நாளான இன்று, மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல், வி.முரளீதரன் தலைமையில் அனில் ஆண்டனி பா.ஜ.க-வில் இணைந்தார்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அனில் ஆண்டனி, ``ஒரு குறிப்பிட்ட குடும்பத்துக்கு உழைப்பதுதான் தங்களுடைய கடமை என காங்கிரஸ் தலைவர்கள் பலரும் நம்புகின்றனர்.

ஆனால், நாட்டு மக்களுக்காக உழைப்பதே எனது கடமை என நான் நம்புகிறேன். அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதற்கான தொலைநோக்குப் பார்வை பிரதமர் மோடியிடம் இருக்கிறது" என்றார்.
அதைத் தொடர்ந்து அனில் ஆண்டனி குறித்துப் பேசிய பியூஷ் கோயல், ``அனில் ஆண்டனி பன்முக ஆளுமை கொண்ட நபர். அவரின் நற்பண்புகளைப் பார்த்தபோது நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன்" என்று கூறினார்.