Published:Updated:

ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது நல்லதல்ல!

 - குமரி அனந்தன்
பிரீமியம் ஸ்டோரி
- குமரி அனந்தன்

- குமரி அனந்தன் அட்வைஸ்

ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது நல்லதல்ல!

- குமரி அனந்தன் அட்வைஸ்

Published:Updated:
 - குமரி அனந்தன்
பிரீமியம் ஸ்டோரி
- குமரி அனந்தன்

தமிழ்நாட்டில் எஞ்சியிருக்கும் காந்தியவாதிகளில் ஒருவர் குமரி அனந்தன். சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கான விடுதியில் தங்கியிருந்த அவரைச் சந்தித்து, காங்கிரஸின் போக்கு, மத்திய - மாநில அரசுகளின் செயல்பாடு, ஆளுநர்களின் அத்துமீறல் உள்ளிட்ட விஷயங்கள் குறித்த கேள்விகளை முன்வைத்தோம்.

“நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறை வடைந்திருக்கிறது. உங்கள் தந்தை சுதந்திரப் போராட்ட தியாகி. சுதந்திரம் பெற்றதற்கான நோக்கம் நிறைவேறிவிட்டதாக நினைக்கிறீர்களா?”

“இல்லை. வாக்குரிமை உள்ளிட்ட சில நோக்கங்கள் நிறைவேறினாலும், இன்னும் பல நோக்கங்கள் நிறைவேறவேயில்லை. இதற்கு ஓர் உதாரணம் சொல்கிறேன்... சுதந்திரத்துக்கு முன்பு இடைக்கால அரசை அமைத்துக்கொள்ள ஆங்கிலேயர்கள் அனுமதியளித்தனர். அதன்படி, நேரு, பட்டேல், அபுல் கலாம் ஆசாத், சரோஜினி நாயுடு உள்ளிட்ட தலைவர்கள், இடைக்கால அரசை அமைக்க காந்தியிடம் ஆசி வாங்குவதற்கு அவரது ஆசிரமத்துக்குச் சென்றிருந்தனர். அச்சமயம் காந்தி மௌன விரதத்தில் இருந்ததால், தனது உதவியாளரிடம் காகிதத்தையும் எழுது கோலையும் வாங்கி, ‘தீண்டாமையையும் மதுவை யும் ஒழிப்பதன் மூலம் எனது ஆசியைப் பெறலாம்’ என்று எழுதி நேரு உள்ளிட்டோரிடம் கொடுத்தார். அந்த இரண்டும் இன்றுவரை ஒழியவேயில்லையே... அப்புறம் எப்படி நோக்கம் நிறைவேறும்?

தமிழ்நாட்டிலேயே உள்ளாட்சித் தேர்தலில் வென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டியலின ஊராட்சித் தலைவர்களுக்கு உட்கார இருக்கை யைக்கூடக் கொடுக்காமல், அவர்களது உரிமை யைப் பறிக்கும் செயல் நடந்துகொண்டிருக்கிறது... அது தீண்டாமைதானே... அதேபோல, மதுவை டாஸ்மாக் மூலம் அரசே விநியோகித்துக் கொண்டிருக்கிறதே!”

ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது நல்லதல்ல!

“அதேநேரம், போதைப்பொருள்களுக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறாரே?”

“கஞ்சா, அபின் போன்ற போதை தீய பாதை என்று ஸ்டாலின் பேசியதை வரவேற்கிறோம். ஆனால், அதே போதையைத்தானே குடியும் கொடுக்கிறது... அரசே டாஸ்மாக் கடைகளைத் திறந்துவைத்துக்கொண்டு, மாணவர்களை அழைத்து ‘போதை தீய பாதை’ என்றால் எப்படிச் சரியாகும்... ‘ஆட்சியே போனாலும் பரவாயில்லை, மதுவுக்கு மட்டும் அனுமதி கொடுக்கமாட்டேன்’ என்று சொன்ன அண்ணாவின் வழியில் வந்த ஸ்டாலின், முதலில் மதுவை ஒழிக்க வேண்டும்.”

“பொதுத்துறை நிறுவனங்களை ஒவ்வொன்றாக மத்திய பா.ஜ.க அரசு தனியாருக்குத் தாரைவார்த்துவருகிறதே?”

“பொதுவுடைமைக்கு ஆதரவானவன் நான். திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயில் தனியார் வசமிருந்தது. கோயில் என்பது எல்லா மக்களுக்கும் உரியது என்பதால், போராடி மீட்டுக் கொடுத்தவன் நான். எனவே, பொதுமக்களின் சொத்தாக இருக்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குக் கொடுப்பதை எதிர்க்கிறேன்.”

“மோடி அரசின் எட்டு ஆண்டுக்கால ஆட்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“பல முயற்சி மேற்கொள்கிறார்கள். ஆனால், போதுமான அளவுக்குச் செயல்படவில்லை.”

“மத்திய அரசு சமீபத்தில் தாக்கல் செய்த மின் மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறதே?”

“விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வேண்டு மென்று களக்காட்டிலிருந்து ராதாபுரம் வரை நடைப்பயணம் மேற்கொண்டவன் நான். 1984-ல் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் விவசாயிகளுக்கான இலவச மின்சாரம் பற்றி எடுத்துச்சொன்னேன். அதே ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி 1.5 ஏக்கர் நஞ்சை நிலம் மற்றும் 2.5 ஏக்கர் புஞ்சை நிலம் வைத்திருக்கும் விவசாயி களுக்கு இலவச மின்சாரத் திட்டத்தை அறிவித்தார் எம்.ஜி.ஆர். அனைத்துத் தரப்பு விவசாயிகளுக்கும் இலவச மின்சாரம் வேண்டும் என்று தொடர்ந்து நான் வலியுறுத்திக்கொண்டே இருந்தேன். கருணா நிதியிடமும் முறையிட்டேன். அதை ஏற்று, முதல்வராக இருந்த கருணாநிதி அதற்கு ஒப்புதல் கொடுத்து அது குறித்த திட்டத்தை அறிவித்தார். புதிய மின் மசோதாவால் அதற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது.”

“ஆளுநர்களைக் கொண்டு ஒவ்வொரு மாநில அரசையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள விரும்புவதாகச் சொல்லப்படுகிறதே?”

“அப்படிப்பட்ட எண்ணம் இருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை. எனினும், ஆளுகிற ஆட்சியாளர்களுக்கும், ஆளுநர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுவது நல்லதல்ல.”

“தமிழக அரசின் செயல்பாடுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“சிறப்பாக இருக்கின்றன. பூரண மதுவிலக்கை அமல்படுத்தி, மேலும் சிறப்படைய வேண்டும் என்கிற கோரிக்கையை உங்கள் மூலம் வைக்கிறேன்.”

“நாட்டில் எங்குமே காங்கிரஸ் கட்சி இருக்கக் கூடாது என்றரீதியில் பா.ஜ.க செயல்படுவது பற்றி உங்கள் கருத்து?”

“அவரவர் கட்சி பற்றி மட்டுமே அவரவர் சிந்தித்தால் போதுமானது. காங்கிரஸ் இன்றும் இருக்கும், என்றும் இருக்கும். காந்தியம் இருக்கும்வரை காங்கிரஸுக்கான தேவை இருந்துகொண்டே இருக்கும். காங்கிரஸ் பேரியக்கத்தை எந்தக் கட்சியாலும் அழிக்கவோ, ஒழிக்கவோ முடியாது.”

“2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க-வை எதிர்க்கும் அளவுக்கு காங்கிரஸ் வலுவாக இருக்கிறதா?”

“காங்கிரஸ் கட்சி வலுவோடுதான் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. காந்தியடிகள் பாதையில் காங்கிரஸ் தொடர்ந்து நடைபோடுவதுதான் எங்களது அடையாளமே. செப்டம்பர் 7-ம் தேதி எங்கள் தலைவர் ராகுல் காந்தி, குமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரையைத் தொடங்கவிருக்கிறார். நல்லவழி, நன்மை தரும் ஒளியாக அது அமையும். காங்கிரஸ் கட்சி எழுச்சிபெறும்!”