Published:Updated:

“பா.ஜ.க-வில் குஷ்பு... பெரியாருக்குக் கிடைத்த வெற்றி!”

பீட்டர் அல்போன்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
பீட்டர் அல்போன்ஸ்

பீட்டர் அல்போன்ஸ் புது விளக்கம்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் ஆழமான புள்ளிவிவரங்களையும், அழுத்தமான கருத்துகளையும் தெளிவாக எடுத்துவைப்பவர் கட்சியின் மூத்த தலைவரான பீட்டர் அல்போன்ஸ். குஷ்புவின் ராஜினாமா, ஹத்ராஸ் போராட்டக்களம் உள்ளிட்ட ‘ஹாட் அரசியல்’ குறித்து அவரிடம் பேசினோம்...

“ `காங்கிரஸில் கட்சி வேலை செய்வதற்கு எனக்கு அனுமதி அளிக்கப்படவில்லை’ என்று நீங்கள் கூறிய அதே குற்றச்சாட்டை குஷ்புவும் கூறியிருக்கிறாரே..?’’

“குஷ்புவையும் என்னையும் ஒரேநிலையில் வைத்துப் பார்க்க முடியாது. ஏனெனில், கட்சியில் எந்தவிதமான அதிகார அங்கீகாரமும் இல்லாமலிருக்கும் என்னைப் போன்ற மூத்த தலைவர்களால், தன்னிச்சையாக ஒரு கட்சிக் கூட்டத்தைக்கூடக் கூட்ட முடியாது. ஆனாலும்கூட எங்கள் அளவில் நிறைவாகக் கட்சிப் பணி செய்துகொண்டிருக்கிறோம். ஆனால், `கட்சியின் தேசியச் செய்தித் தொடர்பாளர்’ என்ற ஒரு மிகப்பெரிய பொறுப்பை குஷ்புவுக்குக் கட்சி வழங்கியிருந்தது. அந்தத் தளத்தை அவர்தான் சரியாகப் பயன்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஒருவேளை, அவர் கட்சிமீது குறை கூறித்தான் ஆக வேண்டுமென்றால், தேசிய நிர்வாகிகள் மீதுதான் குற்றம்சாட்ட வேண்டுமே தவிர... தமிழக நிர்வாகிகள்மீது அல்ல.’’

“ஆனால், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினரான கார்த்தி சிதம்பரம், கட்சிக் கூட்டங்களில் கலந்துகொண்டதை தமிழக காங்கிரஸ் தலைமை விமர்சிக்கிறதே..?’’

“தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் இப்படிக் குற்றம்சாட்டியதாக எனக்கெதுவும் தெரியவில்லை. ஏனெனில், ‘கட்சி வேலை செய்வதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது’’

“அண்மையில் நீங்களேகூட ‘பண வசதி இருப்பவர்களுக்கே தேர்தலில் சீட் கொடுக்கப்படுகிறது’ என்று வெளிப்படையாக வருத்தப்பட்டிருந்தீர்கள். இது கட்சிக்கு பலவீனம்தானே..?’’

“இன்றைய சூழலில், ‘தேர்தல் செலவை செய்யக்கூடியவரா...’ என்பதும் வேட்பாளர் களுக்கான முக்கியமான ஒரு தகுதியாக மாறியிருக்கிறது. இது காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல... ஒட்டுமொத்த பாராளுமன்ற ஜனநாயகத்துக்குமே ஏற்பட்டிருக்கக்கூடிய நெருக்கடி - அச்சுறுத்தல்!

“மக்களிடையே நன்கு அறிமுகமான குஷ்புவை காங்கிரஸ் கட்சி தக்கவைக்கத் தவறியது பா.ஜ.க-வுக்குக் கிடைத்திருக்கும் வெற்றிதானே?’’

“குஷ்புவுக்கு காங்கிரஸ் கட்சி முக்கியத்துவம் அளித்தேதான் வந்திருக்கிறது. முக்கியப் பிரச்னைகள் குறித்துப் பேசுவதற்காகப் பல மாநிலங்களுக்கும் கட்சியால் அனுப்பப் பட்டிருக்கிறார். அண்மையில் குண்டுராவ் வந்திருந்த கூட்டத்தில்கூட, மேடையில் குஷ்புவுக்கும் இடம் அளிக்கப்பட்டிருந்தது. அவர் ஒருபோதும் ஒதுக்கிவைக்கப்படவில்லை. ஆனாலும்கூட இப்போது அவர் பா.ஜ.க-வில் இணைந்திருப்பதை, பா.ஜ.க-வுக்கோ அல்லது குஷ்புவுக்கோ கிடைத்த வெற்றியாக நான் பார்க்கவில்லை. இந்த விவகாரத்தில் வெற்றி பெற்றிருப்பது பெரியார்தான்!’’

``பெரியாரா... எப்படி?’’

கமலாலயத்துக்குள் சென்று, தீனதயாள் உபாத்யாயா படத்தின் முன் நின்றுகொண்டு, ‘நான் என்றைக்கும் பெரியாரிஸ்ட்தான்’ என்று சொல்லும் குஷ்புவுக்கு ஆளுயர மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுக்கிறார்கள் என்றால், அது பெரியாருக்குக் கிடைத்த வெற்றிதானே!’’

“ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசுவதற்கு, கடந்த இரண்டு வருடங்களாகவே தனக்கு அனுமதி வழங்கப்பட வில்லை என்று வருத்தம் தெரிவித்திருக்கிறாரே குஷ்பு?’’

“தான் எடுத்துவிட்ட ஒரு முடிவுக்கு, புதிதாக ஒரு காரணத்தைக் கண்டுபிடித்துச் சொல்லியிருக் கிறார். பா.ஜ.க-வில் இணைவதற்கு முந்தைய நாள்வரைகூட, ராகுலைச் சந்திக்க முடியாதது குறித்து குஷ்பு கருத்து எதுவும் தெரிவிக்க வில்லையே... ஒட்டுமொத்தத்தில், குஷ்பு எடுத்திருக்கும் இந்தத் தவறான முடிவால், மக்களிடையே அவருக்கிருந்த நம்பகத்தன்மை உடைந்துபோயிருக்கிறது... அவ்வளவுதான்!’’

பீட்டர் அல்போன்ஸ்
பீட்டர் அல்போன்ஸ்

“ஹத்ராஸ் சம்பவத்தில், ராகுல் காந்தி கீழே தள்ளப்படுகிறார்; பிரியங்கா அவமானப்படுத்தப்படுகிறார். ஆனாலும்கூட காங்கிரஸ் கட்சியிலிருந்து பெரிய அளவிலான எதிர்ப்புகள் கிளம்பவில்லையே?’’

“இன்றைய சூழலில் வேலைவாய்ப்பின்மை, நோய்த்தொற்று, மருத்துவச் சிகிச்சை கிடைக்காத நிலை என மக்களின் வாழ்வாதாரமே மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறது. அடித்தட்டு மக்களிடையே போதுமான கருத்து பரிமாற்றம் செய்ய முடிவதில்லை. முலாயம் சிங், அகிலேஷ் யாதவ், மாயாவதி, மம்தா பானர்ஜி என எதிர்க்கட்சித் தலைவர்களில் பலரும் ஒதுங்கிவிட்ட இந்தச் சூழலிலும் ராகுல் காந்தியும் பிரியங்காவும் பொதுமக்களைத் திரட்டி ரோட்டில் அமர்ந்து நியாயம் கேட்கிறார்கள். ஆக, களத்தில் இன்றைக்கும் மோடியை எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஒரே கட்சியாக காங்கிரஸ்தான் நிற்கிறது!’’

“ `ஹத்ராஸ் சம்பவத்தில் பிரச்னையைத் தீர்ப்பதைவிட மக்களைத் திரட்டி அரசியலாக்கப் பார்க்கிறது காங்கிரஸ் கட்சி’ என்பதுதானே ஆளும்கட்சியின் குற்றச்சாட்டாக இருக்கிறது?’’

“19 வயதுப் பெண் கற்பழிக்கப்பட்டு, நாக்கறுக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப் பட்டிருக்கிறாள். இந்தக் கொடுமைக்கு நியாயம் கேட்டு, பாதிக்கப்பட்ட வர்களோடு களத்தில் கரம்கோத்து நிற்பதும் போராடுவதும்தானே ஓர் எதிர்க்கட்சியின் கடமை. இதை எப்படி அரசியல் என்று சொல்கிறார்கள்? அப்படிப் பார்த்தால், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பில் எல்லாமே அரசியல்தானே!”

“2021 சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க கூட்டணியில், காங்கிரஸுக்கு ஒற்றை இலக்கத்தில்தான் சீட் வழங்கப்பட விருப்பதான செய்திகள் வெளிவருகின்றனவே?’’

“தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடையேயான ஒற்றுமையையும், நம்பிக்கையையும், பரஸ்பர மரியாதையையும் கெடுப்பதற்குச் சில சக்திகள் ஊடகம் வழியே இது போன்ற தவறான செய்திகளைப் பரப்பிக்கொண்டிருக்கின்றனர். தமிழகக் கள அரசியலின் யதார்த்தம், கூட்டணியில் அங்கம்வகிக்கக்கூடிய கட்சிகளின் தகுதி, வாக்கு வங்கி பற்றி தி.மு.க தலைவருக்கு நன்றாகத் தெரியும். எனவே அந்தந்த கட்சிகளுக்குத் தகுந்த இடங்களை அவர் தருவார்.’’

“2016-ல் தனித்து நின்ற ‘மக்கள் நலக் கூட்டணி’, தற்போது தி.மு.க கூட்டணியில் அங்கம்வகிப்பதால், தொகுதிப் பங்கீட்டில் குறைவான இடங்கள் கிடைக்கத்தானே வாய்ப்பு அதிகம்?’’

“2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க கூட்டணிக் கட்சிகளிடையே ஒரு மனநிறைவான உடன்படிக்கை ஏற்பட்டது; எல்லோரும் சுமுகமாகப் பணியாற்றி, வெற்றிக் கனியைப் பறித்தோம். அதே போன்ற உறவும் சூழலும் வரும் சட்டமன்றத் தேர்தலிலும் நீடிக்கும். எனவே, இது பற்றி வேறு யாரும் கவலைப்பட வேண்டாம்!’’