Published:Updated:

முதல்வருக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் நானில்லை! - ஒரே வீட்டில் எத்தனை ரெய்டு?

திருநாவுக்கரசர்
பிரீமியம் ஸ்டோரி
திருநாவுக்கரசர்

அற்புதம்மாள் மகிழ்ச்சியடையலாம் எல்லோருமல்ல... போட்டுத் தாக்கும் திருநாவுக்கரசர்

முதல்வருக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் நானில்லை! - ஒரே வீட்டில் எத்தனை ரெய்டு?

அற்புதம்மாள் மகிழ்ச்சியடையலாம் எல்லோருமல்ல... போட்டுத் தாக்கும் திருநாவுக்கரசர்

Published:Updated:
திருநாவுக்கரசர்
பிரீமியம் ஸ்டோரி
திருநாவுக்கரசர்

சிந்தனை அமர்வு மாநாடு, ப.சிதம்பரம் வீட்டில் ரெய்டு, பேரறிவாளன் விடுதலை, ராஜ்ய சபா தேர்தல் என காங்கிரஸ் கட்சி மீண்டும் தலைப்புச் செய்திகளில் வரத் தொடங்கியிருக்கிறது. இச்சூழலில் அக்கட்சியின் மூத்த தலைவர் திருநாவுக்கரசரை நேரில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்.

“முதல் நாள் பேரறிவாளன் விடுதலையை வரவேற்றுப் பேசிவிட்டு, மறுநாள் ஆர்ப்பாட்டத்தில் எதிர்த்து பேசியிருக்கிறீர்களே?”

“வரவேற்கிறேன் என்கிற வார்த்தையை நான் பயன்படுத்தவே இல்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்து விமர்சிக்க விரும்பவில்லை என்றுதான் சொன்னேன். செய்திகள் திரிக்கப்பட்டதற்கு நான் பொறுப்பேற்க முடியாது. வரவேற்கவேண்டிய அவசியமும் எனக்கில்லை. எம்.பி-யாக இருந்தாலும், கட்சித் தொண்டன் என்கிற முறையில் மாநிலத் தலைவர் அறிவித்த போராட்டத்தில் பங்கேற்று, பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து பேசினேன். அகில இந்திய செய்தித் தொடர்பாளர் சுர்ஜிவாலாவும், விடுதலையைக் கண்டித்துப் பேசியிருக்கிறார். காங்கிரஸைப் பொறுத்தவரை இந்தத் தீர்ப்பை எதிர்க்கவே செய்கிறோம். அதில் எந்தத் தடுமாற்றமும் இல்லை.”

முதல்வருக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் நானில்லை! - ஒரே வீட்டில் எத்தனை ரெய்டு?

“சோனியா, பிரியங்கா என ராஜீவ் குடும்பத்தினரே ஏழு பேரையும் மன்னித்த பிறகும், காங்கிரஸ்காரர்கள் ஏன் இன்னமும் எதிர்க்கிறீர்கள்?”

“அன்னை சோனியா காந்தி குடும்பத்தினர் பெருந்தன்மை காரணமாக மன்னிக்கலாம். ஆனால், ராஜீவ் காந்தி ஒரு குடும்பத்துக்கு மட்டும் தலைவரல்ல, உலகத் தலைவர். அவரை நேசிக்கிற தொண்டர்களின் இதயங்களில் அந்தப் படுகொலை இன்னமும் வடுவாகவே பதிந்துள்ளது, என்றுமே அது ஆறாது. பேரறிவாளன் விடுதலை சட்ட வரம்புக்கு உட்பட்டதாக இருக்கலாம். ஆனால் தர்மத்தின் வரப்புக்கு உட்பட்டதல்ல.”

“பேரறிவாளன் விடுதலைக் கொண்டாட்டத்தையும், காங்கிரஸ் நடத்திய ஆர்ப்பாட்டத்தையும் எப்படிப் புரிந்துகொள்வது?”

“பேரறிவாளன் நிரபராதி என்று உச்ச நீதிமன்றம் சொல்லவில்லை. எனவே, விடுதலையைக் கொண்டாடுவது சரியல்ல. அவரைத் தியாகிபோலவும், ஹீரோபோலவும் காட்டுவது புண்பட்ட காங்கிரஸ் தொண்டர்களின் இதயங்களை பாதிக்கிறது. தமிழகத்திலுள்ள அத்தனை கட்சிகளும் விடுதலையை வரவேற்கலாம், ஆனால் பொதுமக்கள் அத்தனை பேரும் இதை ஏற்றுக்கொள்ள வாய்ப்பில்லை. அற்புதம்மாள் மகிழ்ச்சியடையலாம்; அதற்காக எல்லோரும் சந்தோஷப்பட முடியாது. பேரறிவாளனின் விடுதலைக்கு வருத்தப்படும் மக்கள் சார்பில்தான் காங்கிரஸ் போராட்டம் நடத்தியது. இது கட்சிக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.”

“முதல்வர் ஸ்டாலினே பேரறிவாளனைக் கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறாரே?”

“முதல்வர் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது அவரது உரிமை. அவருக்கு ஆலோசனை சொல்லும் இடத்தில் நானில்லை. முதல்வரின் செயலை நாங்கள் ஏற்கவில்லை. முதல்வர் பேரறிவாளனைச் சந்தித்ததுபோல, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் நேரில் சந்திக்க வேண்டும்; அவர்களது குறைகளைக் கேட்டறிந்து, உதவிகள் செய்ய வேண்டும் என்ற விருப்பம் எனக்கு உண்டு.”

“ஒரு ராஜ்ய சபா எம்.பி சீட்டுக்காக காங்கிரஸில் ப.சிதம்பரம் உட்பட பலர் முட்டி மோதுகிறார்களே?”

“தமிழக காங்கிரஸில் பதவிகளை அனுபவிக்காதவர்கள் எத்தனையோ பேர் இருக்கின்றனர். அவர்களெல்லாம் வாய்ப்பு கேட்பது தவறல்ல. மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்குக் கொடுப்பதில் எந்தப் பிரச்னையும் இல்லை. நான்காண்டுகளாக மாநிலத் தலைவராக இருக்கும் கே.எஸ்.அழகிரியும் எதிர்பார்க்கிறார். தேர்தலில் தோல்வியுற்றதால் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், தேர்தலில் போட்டியிடாததால் கே.வி.தங்கபாலுவும்கூட கேட்கலாம். எனினும், தலைமை எடுக்கும் முடிவே இறுதியானது.”

“ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி என்ற விதி ப.சிதம்பரத்துக்குப் பொருந்தாதா?”

“உதய்பூரில் நடந்த சிந்தனை அமர்வில், `ஒரு குடும்பத்துக்கு ஒரு பதவி’ என்கிற தீர்மானத்தை நிறைவேற்றியது உண்மைதான். கட்சிப் பணியாற்றாத குடும்ப உறுப்பினர்களை, தேர்தலுக்காக திடீரென இறக்குமதி செய்வதைத்தான் தவறு என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே, ப.சிதம்பரமும், கார்த்தி சிதம்பரமும் இந்த வரம்புக்குள் வர மாட்டார்கள்.”

“காங்கிரஸின் பிரதமர் வேட்பாளர் பட்டியலில் சிதம்பரம் இருக்கிறார். அதைத் தடுக்கத்தான் பா.ஜ.க அரசு சி.பி.ஐ-யை ஏவிவிட்டதாகச் சிலர் சொல்கிறார்களே?”

“மோடி ஆட்சிக்கு வந்த இந்த எட்டு ஆண்டுகளில் ஒரே வீட்டில் எத்தனை முறைதான் ரெய்டு நடத்துவார்கள்... இத்தனை ரெய்டுகளிலும் எதைக் கைப்பற்றினார்கள் என்றும் சொல்லவில்லை. சிதம்பரத்தைக் களங்கப்படுத்துவதுதான் ரெய்டின் நோக்கம். அதேநேரம், பத்திரிகைகள் யாரை வேண்டுமானாலும் பிரதமர் என்று சொல்லலாம். ஆனால், எங்களுடைய பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி மட்டும்தான். மோடியை வீழ்த்தும் வலிமையும், எல்லா வகையிலும் மோடிக்கு மாற்றாகத் திகழும் வல்லமையும்கொண்டவர் ராகுல் காந்திதான்.”

“ஆனால், ராகுலை முன்னிறுத்தி காங்கிரஸால் வெற்றிபெறவே முடியவில்லையே?”

“ஜனசங்கமாக இருந்த காலம் தொடங்கி, பா.ஜ.க-வாக மாறியது வரை ஒவ்வொரு தேர்தலிலும் வாஜ்பாய்தான் முன்னிறுத்தப்பட்டார். பலமுறை தோல்வியடைந்தாலும், பின்னர் வாஜ்பாய் ஆட்சியமைத்தாரே... அதுபோல, வரக்கூடிய தேர்தலில் நிச்சயம் ராகுல் காந்தி தலைமையில் வெல்வோம்.”

“காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான வீழ்ச்சிக்கு என்ன காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?”

“யானைக்கும் அடி சறுக்கும்... மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களுக்கும், நாடாளுமன்றத் தேர்தலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. தேசிய அளவிலும், மாநில அளவிலும் வெற்றி தோல்விக்குப் பல காரணங்கள் உள்ளன. இது ஒரு செட்பேக் அவ்வளவுதான். `காங்கிரஸ் தோல்வி’ என்று சொல்லுங்கள் ஒப்புக்கொள்கிறேன், ஒருபோதும் வீழ்ச்சியடையவில்லை. மீண்டும் வீறுகொண்டு எழும்”

முதல்வருக்கு ஆலோசனை சொல்லுமிடத்தில் நானில்லை! - ஒரே வீட்டில் எத்தனை ரெய்டு?

“பிரியாணி, பட்டினப்பிரவேசம் உள்ளிட்ட சில விஷயங்களில் பா.ஜ.க-வுக்கு தி.மு.க அடிபணிந்துவிட்டதாகச் சொல்கிறார்களே?”

“முதல்வராக இருப்பவர் பிடிவாதமாக இருக்கக் கூடாது. முதலில் ஓர் அரசாணை போட்டுவிட்டு மாற்றுவது தவறில்லை. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிடம்கூட இதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. அரசியல் கட்சிகள், மக்கள் எதிர்ப்பால் ஒரு முடிவை மாற்றிக்கொள்வது நல்ல விஷயம்தானே ஒழிய, அடிபணிந்ததாக அர்த்தமாகாது. அரசு ஃப்ளெக்ஸிபிலிட்டியாக இருப்பது நல்லதுதான்.”

“ஒருபக்கம் ஆளுநருடன் மோதிக்கொண்டு, இன்னொருபக்கம் வெங்கைய நாயுடுவுடன் உறவாடுகிறதே தி.மு.க?”

“ஆளுநர் என்பவர் மத்திய அரசால் நியமிக்கப்பட்டவராக இருந்தாலும், மாநில அரசோடு இணைந்து பணியாற்ற வேண்டும். அரசின், அமைச்சரவையின் முடிவை ஏற்க வேண்டும். அதில் முரண்பாடு எழுகிறபோதுதான் மோதல் ஏற்படுகிறது. அதேசமயம், வெங்கைய நாயுடு பா.ஜ.க-வைச் சேர்ந்தவராக இருந்தாலும், அரசியலைப்புச் சட்டப்படி துணைக் குடியரசுத் தலைவர் எனும் எல்லோருக்கும் பொதுவான பொறுப்பிலிருப்பவர். கலைஞர் போன்ற ஆற்றல்மிக்க தலைவரின் சிலையைத் திறக்க, தென் மாநிலத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த தலைவர்களுள் ஒருவரான வெங்கைய நாயுடுவை அழைத்திருப்பது பொருத்தமானதே.’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism