Published:Updated:

அ.தி.மு.க உடைந்தாலும் பா.ஜ.க-வின் கனவு பலிக்காது! - திருநாவுக்கரசர் பேட்டி

திருநாவுக்கரசர்
பிரீமியம் ஸ்டோரி
திருநாவுக்கரசர்

கட்சிகளிலிருந்து கட்சிகள் உடைவது, விலகுவது இந்திய வரலாற்றில் காங்கிரஸில் மட்டும்தான் நடக்கிறதா என்ன

அ.தி.மு.க உடைந்தாலும் பா.ஜ.க-வின் கனவு பலிக்காது! - திருநாவுக்கரசர் பேட்டி

கட்சிகளிலிருந்து கட்சிகள் உடைவது, விலகுவது இந்திய வரலாற்றில் காங்கிரஸில் மட்டும்தான் நடக்கிறதா என்ன

Published:Updated:
திருநாவுக்கரசர்
பிரீமியம் ஸ்டோரி
திருநாவுக்கரசர்

அ.தி.மு.க ஜா-ஜெ என்று பிளவுபட்டிருந்த காலத்தில் ஜெயலலிதாவின் தளபதிகளில் ஒருவராகக் களமாடியவர் திருநாவுக்கரசர். தற்போது காங்கிரஸ் எம்.பி-யாக இருந்தாலும், அ.தி.மு.க விவகாரங்களை உன்னிப்பாக கவனிப்பவர் என்கிற முறையில், அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

“ஜா-ஜெ காலத்தில் நடந்த உட்கட்சி நெருக்கடியையும், இப்போது நடக்கிற நெருக்கடியையும் எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“ஜானகி அம்மாவுக்கு அரசியலில் அனுபவம் இல்லையென்றாலும் தலைவரின் மனைவி என்ற ‘மாஸ்’ இருந்தது. எனவே அதிகப்படியான எம்.எல்.ஏ-க்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் அவர் பக்கம் இருந்தார்கள். ஆனால், பெரும்பான்மையான தொண்டர்கள் ஜெயலலிதா அணியில் இருந்தார்கள். ஜெயலலிதா ஆக்ரோஷமாக எதிர்க்கட்சியோடு தர்க்கம் செய்தார். ஜானகி அம்மா தலைவர் பெயரைச் சொல்லி அழுதார்கள். இதைத் தொண்டர்கள் ரசிக்கவில்லை. ஆவேசத்தைக் காட்டிய ஜெயலலிதா 1989-ல், 26 எம்.எல்.ஏ-க்கள் வெற்றியோடு முதன்முறையாக எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். நான் துணைத் தலைவர். அந்த எம்.எல்.ஏ-க்களில் இ.பி.எஸ்-ஸும் ஒருவர். மக்கள், இருவரில் ஜெயலலிதாவைத் தேர்வு செய்தார்கள். இன்றைய பிரச்னையில், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒன்றியச் செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு-செயற்குழு உறுப்பினர்களிடம் யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறதோ அவர்கள்தான் வெற்றிபெற முடியும். அப்படிப் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சிக்குத் தலைமை ஏற்றாலும், உடன்படாத இன்னொரு தலைவர் மக்களைச் சந்திக்கும்போது மாற்றம் நேரலாம். அந்த இருவரில் யாருக்கு மக்களிடம் அதிகமான ஆதரவு இருக்கிறதோ அவர்தான் இந்தக் கட்சியின் தலைவராக வருங்காலங்களில் செயல்பட முடியும். இது எல்லாக் கட்சிகளுக்கும் பொருந்தும்.”

“உங்களுக்கும் இது போன்ற இரட்டைத் தலைமை அனுபவம் இருக்கிறதல்லவா?”

“ஆம்... எனக்கும் ஜெயலலிதாவுக்கும் கருத்து வேறுபாடு வந்தபோது அந்த 26 எம்.எல்.ஏ-க்களில் எட்டு எம்.எல்.ஏ-க்களும், 14 எம்.பி-க்களில் ஏழு எம்.பி-க்களும் என்னோடு வந்தார்கள். சட்டமன்றத்தில் ‘அ.தி.மு.க ஜெயலலிதா’, ‘அ.தி.மு.க திரு’ என்று சபாநாயகர் வாய்ப்பளித்தார். இருவரும் தேர்தல் ஆணையத்தை அணுகினோம். அதில் பெரும்பான்மையான மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயலலிதா பக்கம் இருந்ததால் சின்னம் அவர்களுக்குக் கிடைத்து, பொதுச்செயலாளரானார். அதற்குமேல் அ.தி.மு.க என்று நான் சொல்ல முடியாது என்பதால் ‘எம்.ஜி.ஆர் அ.தி.மு.க’ என்று வைத்துக்கொண்டேன். யாருக்குப் பெரும்பான்மை இருந்து, தேர்தல் கமிஷன் அங்கீகாரம் கிடைக்கிறதோ அவர்தான் அந்தக் கட்சியின் தலைமையாக இருந்து, கட்சியை வழிநடத்த முடியும்.”

“அ.தி.மு.க-வின் பலவீனத்தை பா.ஜ.க பயன்படுத்தும் என்கிறார்களே?”

“அ.தி.மு.க பலவீனமாக உடைந்தால் அதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்கிற நப்பாசையிலோ, கனவிலோ பா.ஜ.க இருக்கலாம். ஆனால் பா.ஜ.க-வின் அந்தக் கனவு பலிக்காது. அதில் பெரிய வெற்றி பெற முடியாது. ஏனென்றால் இந்த இரண்டு அணிகள் தாண்டி இன்னொரு பக்கம் தினகரனும், சசிகலாவும் குழப்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்தக் குழப்பங்களுக்குள் சிக்கி, தொண்டர்கள் இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று போகலாமே தவிர இந்த வட்டத்தைத் தாண்டி வெளியே போகும் வாய்ப்பு குறைவுதான்.”

“உங்கள் கட்சியிலும் தலைமை சரியில்லை என்று சிலர் விலகிச் செல்கிறார்களே..?”

“கட்சிகளிலிருந்து கட்சிகள் உடைவது, விலகுவது இந்திய வரலாற்றில் காங்கிரஸில் மட்டும்தான் நடக்கிறதா என்ன... காங்கிரஸில் சிலர் போகலாம் வரலாம். இது 130 ஆண்டுக் கட்சி. வரவும் இருக்கும்... செலவும் இருக்கும்.”

அ.தி.மு.க உடைந்தாலும் பா.ஜ.க-வின் கனவு பலிக்காது! - திருநாவுக்கரசர் பேட்டி

“ ‘தேசிய அளவில் காங்கிரஸ் வலிமையான கட்சியாக இருப்பது அவசியம். இல்லாவிட்டால் அந்த இடத்தை மாநிலக் கட்சிகள் நிரப்பும் நிலை ஏற்பட்டுவிடும். இதனால் இந்திய ஜனநாயகம் பாதிக்கப்படும்’ என்று பா.ஜ.க அறிவுரை சொல்லும் அளவுக்கு காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறதா?”

“பா.ஜ.க-வே இரண்டு எம்.பி-க்கள் என்ற எண்ணிக்கையிலிருந்துதானே இன்று 350-க்கு வந்திருக்கிறது... காங்கிரஸைப் பொறுத்தவரை ஒன்றிரண்டு தேர்தலில் தோற்றிருக்கலாம். அடுத்து தோற்கலாம், ஜெயிக்கலாம். ஆனால் என்றைக்காவது ஒருநாள் ராகுல் காந்தி பிரதமராக வருவார். அதுவரை காங்கிரஸ்காரர்கள் பொறுமை காக்க வேண்டும்.”

“காங்கிரஸில் குடியரசுத் தலைவருக்கான தகுதியான நபர் இல்லையா... பா.ஜ.க-வில் பயணித்தவரைத்தானே முன்னிறுத்துகிறீர்கள்?”

“யஷ்வந்த் சின்ஹா பா.ஜ.க-விலிருந்து வந்திருந்தாலும் ‘சோஷலிஸ்ட்’ பின்னணி கொண்டவர். எனக்குத் தெரிந்தவரை அவருக்கு ஆர்.எஸ்.எஸ் பின்னணி கிடையாது. சிறந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி, பொருளாதார நிபுணர். மிகச்சிறந்த பேச்சாளர், நிர்வாகி. தனிப்பட்ட முறையில் நல்ல பண்புள்ள மனிதரும்கூட. யாருக்கும் அடிமையாக இருந்து வேலை பார்க்கமாட்டார். அதனால்தான் மோடிக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வெளியே வந்தார். அவரை நாங்கள் ஏற்றுக் கொள்வதன் மூலம் பெரும்பான்மையோரின் தேர்வை ஏற்கிறோம். இது காங்கிரஸின் பண்பை... பாரம்பர்யத்தைத்தான் உணர்த்துகிறது.”

“ ‘எம்.ஜி.ஆரை எஸ்.டி.எஸ் எதிர்த்தார். அம்மாவை திருநாவுக்கரசு எதிர்த்தார். அ.தி.மு.க-வை எதிர்த்தவர்கள் வாழ்ந்ததில்லை. அந்த நிலை ஓ.பி.எஸ்-ஸுக்கு வந்துவிடுமோ என்ற கவலை எனக்கு இருக்கிறது’ என்று ஆர்.பி.உதயகுமார் கருத்து தெரிவித்திருக்கிறாரே?”

“பன்னீர்செல்வம் வெற்றிபெற மாட்டார் என்பதைச் சொல்வதற்கு, உதாரணமாக எங்களைக் காட்டுகிறார் உதயகுமார். அ.தி.மு.க-வில் தலைமைப் பதவியைப் பிடிக்க முடியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக என்னைத் தோல்வியடைந்தவனாகச் சொல்ல முடியாது. அங்கேயே இருந்து வெற்றி பெற்றவர்களைவிட, நான் அதிகம் வெற்றிபெற்றிருக்கிறேன். உதயகுமார்மீது வருத்தமெல்லாம் இல்லை. அதேநேரம் நான் கவலைக்குரிய நிலையில் இல்லை என்பதையும் அவருக்குத் தெளிவுபடுத்துகிறேன்!”