அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

கார்கேவை ஆதரிக்குமாறு தலைமை நிர்பந்திக்கவில்லை! - சொல்கிறார் திருநாவுக்கரசர்

திருநாவுக்கரசர்
பிரீமியம் ஸ்டோரி
News
திருநாவுக்கரசர்

இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை இந்தி திணிக்கப்படாது’ என்று எழுத்துபூர்வமாக ஜவஹர்லால் நேரு கொடுத்த வாக்குறுதி தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும்.

‘ராகுல் காந்தி நடைப்பயணம், கட்சியின் தேசிய தலைவருக்கான தேர்தல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைமை யார்...’ என்பது உள்ளிட்ட பரபர கேள்விகளோடு, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியும், எம்.பி-யுமான திருநாவுக்கரசரைச் சந்தித்தேன்...

“ராகுல் காந்தி முன்னெடுக்கும் இந்திய ஒற்றுமைப் பயணத்தின் இன்றைய தேவை என்ன?”

“இந்தியா வேற்றுமைகள் நிறைந்த நாடு. அந்த வேற்றுமைகளைக் கடந்து, அனைவரையும் இணைத்து, ஒரே நாடு என்பதை வலியுறுத்துவதற்கான தேவை இந்த நேரத்தில் ஏற்பட்டிருக்கிறது.”

“கட்சியிலிருக்கும் கோஷ்டிகளையே ஒன்றிணைக்க முடியாத ராகுல், இந்தியாவை எப்படி ஒன்றிணைக்கப் போகிறார்?”

“எல்லா கட்சிகளிலும் குழுக்கள் இருக்கும். அதில் பிரச்னைகளும் இருக்கும். கட்சிக்குள் கோஷ்டிகள் இருந்தாலும், ராகுலின் யாத்திரையின்போது எல்லோரும் ஒன்று சேர்ந்துதானே நடக்கிறோம், ஒருங்கிணைக்கிறோம்... எனவே, ராகுலின் இந்த நடைப்பயணம் மக்களை ஒன்றுபடுத்துவதோடு, கட்சியையும் ஒன்றுபடுத்தி, பலப்படுத்துகிறது.”

கார்கேவை ஆதரிக்குமாறு தலைமை நிர்பந்திக்கவில்லை! - சொல்கிறார் திருநாவுக்கரசர்

“ `இந்த யாத்திரையில், மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை காங்கிரஸ் ஏன் அழைக்கவில்லை?’ என்று பா.ஜ.க கேள்வி எழுப்பியிருக்கிறதே?”

“இது அனைத்துக் கட்சி யாத்திரையில்லையே! அதோடு அவர்கள் யாரையும் கட்டாயப்படுத்தியும் அழைக்க முடியாது. தமிழ்நாட்டில் தி.மு.க தலைவர் கலந்துகொள்ளவில்லையா... அதுபோல் அடுத்தடுத்த மாநிலங்களுக்குப் பயணிக்கும்போது எங்களோடு தோழமையாக இருப்பவர்கள் பங்கேற்கலாம், வாழ்த்துச் சொல்லலாம். ராகுல் காந்தியின் இந்த நடைப்பயணத்துக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து வயிற்றெரிச்சலில் இது போன்ற விமர்சனத்தை பா.ஜ.க முன்வைக்கிறது. ராகுல் ஏன் நடக்கிறார், பா.ஜ.க ஏன் விமர்சிக்கிறது என்பதெல்லாம் மக்களுக்குத் தெரியும்.”

“சோனியா, ராகுலின் ஆதரவு இருப்பதால்தானே சசி தரூரைவிடவும் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சியில் பலத்த வரவேற்பு கிடைக்கிறது?’’

“சோனியா, ராகுலின் விருப்பமான வேட்பாள ராக கார்கே இருப்பதில் என்ன தவறு... நீங்கள் சொல்வதுபோல், கார்கேதான் அவர்களின் விருப்பமான வேட்பாளர் என்றால், தேர்தலே நடத்தாமல் நேரடியாக அவரைக் கட்சித் தலைவராகவே நியமித்திருக்க லாமே! கார்கேவுக்கு வாக்களிக்க நினைப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதனால் அவர் வெற்றிபெறுவதற்கும் அதிக வாய்ப்பு இருக்கிறது. மற்றபடி தலைமை சொல்லியோ அல்லது நிர்பந்தித்தோ யாரும் அவரை ஆதரிக்கவில்லை.”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, பெண் ஒருவரை நியமிக்கப்போவதாகச் செய்திகள் வெளிவருகின்றனவே?”

“ஒரேவிதமான மதம், சமூகம், பாலினம் சார்ந்து இல்லாமல், சுழற்சிமுறையில் தலைவரைத் தேர்ந்தெடுக்கலாம் இல்லையா... அந்த அடிப்படையில் தமிழ்நாட்டில் ஒரு பெண்ணோ, தலித் சமூகத்தைச் சார்ந்தவரோ அல்லது மாற்று மதத்தைச் சார்ந்தவரோ தலைவராக வரலாம் என்று பேசப்பட்டிருக்கலாம்.”

“தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் பொருத்தமானவர் என்று நீங்கள் யாரைப் பரிந்துரைப்பீர்கள்?’’

“அப்படியெல்லாம் நான் ஜோசியம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. யாரையும் மாற்றித்தான் ஆக வேண்டுமென்கிற கட்டாயமும் கட்சிக்குக் கிடையாது. அதேசமயம் கே.எஸ்.அழகிரி கடந்த மூன்று, நான்கு வருடங்களாகப் பொறுப்பில் இருந்துவருகிறார். அவரது தலைமையில் பல தேர்தல்களைச் சந்தித்திருக்கிறோம். வலுவான கூட்டணியோடு எல்லா தேர்தல்களிலும் வெற்றியும் பெற்றிருக்கிறோம். எனவே கட்சி விரும்பினால், அவரேகூட மீண்டும் தலைவர் பொறுப்பில் தொடரலாம். மாறாக, அவர் இல்லாமல் வேறு யார் தலைவராகத் தேர்வானாலும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்.”

“மீண்டும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு நீங்கள் முயற்சி செய்யவில்லையா?’’

“முயற்சியெல்லாம் கிடையாது. ஏற்கெனவே மூன்று ஆண்டுகள் செயலாற்றியிருக்கிறேன். தலைமை விரும்பி நியமித்தால், மீண்டும் பணியாற்றத் தயாராகவும் இருக்கிறேன்.”

“தி.மு.க பொதுக்குழுவில், அந்தக் கட்சியின் தலைவர் ஸ்டாலின் வருத்தப்பட்டுப் பேசியிருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?’’

“கட்சியின் மொத்த மையமாக இருக்கக்கூடிய முக்கிய நிர்வாகிகள் கூட்டத்தில்தானே பேசியிருக்கிறார்... கட்சியில் பிரச்னை இருந்தால், ‘பிரச்னை இருக்கிறது’ என்று அவர் வெளிப்படையாகச் சொல்லியிருப்பதில் தவறு ஏதும் இல்லையே! ஒரு கட்சித் தலைவருக்கு தன்னுடைய தொண்டர்களிடமும் நிர்வாகிகளிடமும் கெஞ்சுவதற்கும் உரிமை இருக்கிறது; கொஞ்சுவதற்கும் உரிமை இருக்கிறது; மிஞ்சுவதற்கும் உரிமை இருக்கிறது.”

“இந்தித் திணிப்பை எதிர்த்து போராடிவரும் தி.மு.க குறித்து காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு என்ன?’’

“ ‘இந்தி பேசாத மக்கள் விரும்புகிற வரை இந்தி திணிக்கப்படாது’ என்று எழுத்துபூர்வமாக ஜவஹர்லால் நேரு கொடுத்த வாக்குறுதி தொடர்ந்து காப்பாற்றப்பட வேண்டும். அந்த வாக்குறுதியை காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். விருப்பப்பட்டுப் படிப்பது வேறு, திணிப்பது வேறு. எனவே, விருப்பம் இருப்பவர்கள் இந்தியைக் கற்றுக்கொள்ளலாம். ஆனால், விருப்பத்துக்கு மாறாக ஒரு மொழியைத் திணித்தால் அதை தமிழ்நாடு தொடர்ந்து எதிர்க்கும். அந்த எதிர்ப்பு களத்தில், காங்கிரஸும் முன் நிற்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!”