Published:Updated:

இளையராஜாவை, ஈ.வி.கே.எஸ் விமர்சித்தது தவறு! - திருத்துகிறார் திருநாவுக்கரசர்

சு.திருநாவுக்கரசர்
பிரீமியம் ஸ்டோரி
சு.திருநாவுக்கரசர்

நூற்றாண்டைக் கடந்த பாரம்பர்யம் கொண்ட காங்கிரஸ் கட்சியில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் நிறைய இருக்கிறார்கள்

இளையராஜாவை, ஈ.வி.கே.எஸ் விமர்சித்தது தவறு! - திருத்துகிறார் திருநாவுக்கரசர்

நூற்றாண்டைக் கடந்த பாரம்பர்யம் கொண்ட காங்கிரஸ் கட்சியில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் நிறைய இருக்கிறார்கள்

Published:Updated:
சு.திருநாவுக்கரசர்
பிரீமியம் ஸ்டோரி
சு.திருநாவுக்கரசர்

‘தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், காங்கிரஸ் கட்சியில் சேரப்போகிறார்’ என்கிற செய்தி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி, கடைசியில் புஸ்ஸென்று ஆகிவிட்டது. பிரசாந்த் கிஷோர் காங்கிரஸில் சேர மறுத்துவிட்டார். இந்நிலையில், காங்கிரஸுக்குள் என்ன நடக்கிறது என்பது குறித்த கேள்விகளை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சு.திருநாவுக்கரசர் எம்.பி-யிடம் முன்வைத்தோம்...

“தொடர் தோல்விகளைச் சந்தித்துவரும் காங்கிரஸ் கட்சியில், பிரசாந்த் கிஷோர் இணைவதால் கட்சி பலப்பட்டுவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவிவந்த சூழலில், காங்கிரஸில் சேர பிரசாந்த் கிஷோர் மறுத்துவிட்டாரே?”

“நூற்றாண்டைக் கடந்த பாரம்பர்யம் கொண்ட காங்கிரஸ் கட்சியில், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும், இளம் தலைவர்களும் நிறைய இருக்கிறார்கள். அறிவுக்கும் அனுபவத்துக்கும் காங்கிரஸில் பஞ்சமில்லை. பிரசாந்த் கிஷோர் பல கட்சிகளுக்கும் தேர்தல் வியூகங்களை வகுத்துக்கொடுப்பதைப்போல, காங்கிரஸ் கட்சிக்கும் வியூகங்களை வகுத்துக்கொடுக்கலாம். அதில் தவறில்லை. ஆனால், கட்சியில் சேர்ந்து செயல்பட்டால், அது அவருக்கும் நல்லதல்ல, காங்கிரஸுக்கும் நல்லதல்ல.”

“ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்?”

“காங்கிரஸில் சேராமல், பொதுவான ஒரு நபராகப் பிற கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக் கொடுப்பவராக இருந்தால்தான், பிரசாந்த் கிஷோருக்கு மதிப்பு இருக்கும். அதுபோல, பல கட்சிகளுக்கு வியூகங்களை வகுத்துக்கொடுத்த ஒருவரை, திடீரென சேர்த்துக்கொள்வதால், கட்சிக்குள் பல சங்கடங்கள் உருவாகும். உதாரணமாக, கட்சியில் அவரைச் சேர்த்துக்கொண்டு, அவர் கொடுக்கும் சில ஆலோசனைகளைச் செயல்படுத்த முடியாமல் போய், கட்சியைவிட்டு அவர் வெளியேறினால், காங்கிரஸுக்கு அது பலவீனம்தானே?”

“பிரசாந்த் கிஷோர் வருகையால், தங்கள் இடம் கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சத்தாலேயே அவரது வருகையைக் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் எதிர்த்தனர் எனச் சொல்லப்படுகிறதே?”

“இந்தியாவின் மிகப்பெரிய கட்சியான காங்கிரஸில், நூற்றுக்கணக்கான தலைவர்களும், லட்சக்கணக்கான நிர்வாகிகளும், கோடிக்கணக்கான தொண்டர்களும் இருக்கிறார்கள். அப்படியிருக்கும்போது, திடீரென வெளியிலிருந்து வந்து கட்சியில் இணையும் ஒருவர், எந்த நிலையில் செயல்படுவார் என்ற கேள்வி எழுகிறது. அதில் கருத்து வேறுபாடு ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது.”

இளையராஜாவை, ஈ.வி.கே.எஸ் விமர்சித்தது தவறு! - திருத்துகிறார் திருநாவுக்கரசர்

“தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குப் புதிய தலைவர் தேர்வுசெய்யப்படவிருப்பதாகச் செய்திகள் வெளிவருகின்றன. இதுவரை 60 வயதைக் கடந்தவர்களே மாநிலத் தலைவராக இருந்துள்ளனர். இந்த முறை இளைஞர் ஒருவர் தேர்வுசெய்யப்படுவாரா?”

“இளைஞரா, நடுத்தர வயதுடையவரா, முதியவரா என்பது பிரச்னையே அல்ல. முதியவர்களிலும் இளைஞர்கள் உண்டு. இளைஞர்களிலும் முதியவர்கள் உண்டு. வயது குறைந்த ஒருவர் வயதானவர்போலச் செயல்படுவார். வயதான ஒருவர் இளைஞர்போலச் செயல்படுவார். ஒருவரது மனநிலை, அறிவாற்றல், அவர் செயல்படும் விதம் போன்றவற்றைப் பொறுத்துத்தான் எப்படிப்பட்ட தலைமை என்பதைத் தீர்மானிக்க முடியும்.”

“தமிழக பா.ஜ.க-வை எடுத்துக்கொண்டால் இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் போன்றவர்கள் மாநிலத் தலைவராக இருந்திருக்கிறார்கள். ஆனால், இப்போது 37 வயது இளைஞரான அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறாரே..?”

“பா.ஜ.க-வின் செயல்பாடு இப்போது எப்படி இருக்கிறதோ, அதேபோலத்தான் இல.கணேசன் போன்றவர்கள் மாநிலத் தலைவராக இருந்தபோதும் இருந்தது. இப்போது மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் இருப்பதால் கிடைக்கும் விளம்பர வெளிச்சத்தில் அண்ணாமலை அரசியல் செய்துகொண்டிருக்கிறார்...அவ்வளவுதான். அண்ணாமலையின் செயல்பாடுகளில் பா.ஜ.க பெரிய கட்சியாக வளர்ந்து, தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் நிலைக்கு வந்துவிட்டது என்று சொல்ல முடியுமா?”

“தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்கிற ஒரு பிம்பத்தை உருவாக்கும் அளவுக்கு பா.ஜ.க-வின் செயல்பாடுகள் இருக்கின்றனவே?”

“மத்தியில் இருக்கும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்துவதாலும், பண பலம், ஊடக வெளிச்சம் ஆகியவற்றாலும் அப்படியொரு தோற்றம் ஏற்பட்டிருக்கலாம். ஒற்றைத் தலைமை இல்லாதது, கோஷ்டி அரசியல் மற்றும் பா.ஜ.க-வின் பிடியில் இருப்பது போன்ற காரணங்களால், அ.தி.மு.க பலவீனமாக இருக்கிறது. இந்தச் சூழலில், அ.தி.மு.க-வைவிட அதிகமாக பா.ஜ.க சத்தம் போடுகிறது... அவ்வளவுதான்.”

“இப்படியான சூழலில், அ.தி.மு.க-வுக்குத் தலைமை தாங்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் சசிகலா முன்னெடுக்கும் நகர்வுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?”

“இவராகத்தான் ‘வருகிறேன்... வருகிறேன்’ என்று சொல்கிறாரே தவிர, எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் யாரும் சசிகலாவைக் கட்சியில் சேர்த்துக்கொள்ளத் தயாராக இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே சிறையிலிருந்து விடுதலையாகிவிட்டார். தேர்தல் நேரத்தில் சுற்றுப்பயணம் போயிருக்கலாமே... அப்போது, ஏன் ஒதுங்கியிருந்தார்... சுமார் 50 ஆண்டுக்காலம் அரசியல் அனுபவம்கொண்டவனாகச் சொல்கிறேன்... சசிகலா தன் உடல்நலனைக் கவனித்துக்கொண்டு, இருக்கிற சொத்துகளைப் பார்த்துக்கொண்டு, நிம்மதியாக ஓய்வெடுப்பதுதான் அவருக்கு நல்லது.”

“அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்டதற்காக, இசையமைப்பாளர் இளையராஜாவைத் தரம் தாழ்ந்தும், சாதியைக் குறிப்பிட்டும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துப் பேசியது சரியா?”

“என்னைப் பொறுத்த அளவில், இளையராஜாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சட்டமேதையும் மிகப்பெரிய தலைவருமான அம்பேத்கரை பிரதமர் மோடியுடன் ஒப்பிடவே முடியாது, ஒப்பிடவும் கூடாது. தேவகவுடா உட்பட பலர் பிரதமராக இருந்திருக்கிறார்கள். பிரதமராக இருந்த காரணத்தால், அவர்களை மகாத்மா காந்தியுடன் ஒப்பிட முடியுமா? இளையராஜா ஓர் இசைமேதை. அவர், அரசியல்வாதி கிடையாது. மோடி மீதான பிரியம் காரணமாக அந்தக் கருத்தை அவர் தெரிவித்திருக்கலாம். அதற்காக இளையராஜாவைத் தனிப்பட்ட முறையில் ஈ.வி.கே.எஸ் அப்படி விமர்சித்திருப்பது மிகவும் தவறு!”

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism