Published:Updated:

''திமுக-வைப் பார்த்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்!'' - அமெரிக்கை நாராயணன் அட்வைஸ்

அமெரிக்கை நாராயணன்

''தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்ட' இந்த 2022-லும்கூட, அவசியமான இந்த விமர்சனங்களை நான் காங்கிரஸ் கட்சியை நோக்கி வைக்காவிட்டால் என்னைப்போல் துரோகி யாரும் கிடையாது!'' என்கிறார் அமெரிக்கை நாராயணன்.

''திமுக-வைப் பார்த்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும்!'' - அமெரிக்கை நாராயணன் அட்வைஸ்

''தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்ட' இந்த 2022-லும்கூட, அவசியமான இந்த விமர்சனங்களை நான் காங்கிரஸ் கட்சியை நோக்கி வைக்காவிட்டால் என்னைப்போல் துரோகி யாரும் கிடையாது!'' என்கிறார் அமெரிக்கை நாராயணன்.

Published:Updated:
அமெரிக்கை நாராயணன்

ஐந்து மாநிலத் தேர்தல் தோல்வியையடுத்து, காங்கிரஸ் கட்சித் தலைமையை நோக்கி கட்சிக்குள்ளேயே கேள்விகள் எழுப்பப்பட்டுவருகின்றன. அண்மையில் ஜி 23 தலைவர்கள் நடத்திய கூட்டத்தின் முடிவிலும் காங்கிரஸ் கட்சி அமைப்புரீதியாக சீர்திருத்தங்களைச் செய்தாக வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, 'காங்கிரஸ் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி குடும்பத்தினர் விலகியிருக்க வேண்டும்' என்று கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபலில் ஆரம்பித்து நம்மூர் அமெரிக்கை நாராயணன் வரை வெளிப்படையாகப் பேச ஆரம்பித்திருக்கின்றனர்.

இதையடுத்து, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தித் தொடர்பாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான அமெரிக்கை நாராயணனைச் சந்தித்தேன்...

சோனியா - ராகுல்
சோனியா - ராகுல்

''காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நீங்கள் செய்துவரும் விமர்சனங்கள் கட்சியை பலவீனப்படுத்தும்தானே?''

''நான் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விமர்சிக்கவில்லை... காங்கிரஸ் கட்சிக்காகத்தான் விமர்சிக்கிறேன். மோடி குறித்து விமர்சிப்பவர்களை, 'இந்த நாட்டுக்கு எதிரானவன்' என்று மோடி பக்தர்கள் சொல்லிவருவதை எப்படி ஏற்க முடியாதோ... அதைப்போல், காங்கிரஸ் கட்சியின் தலைமை குறித்து ஆக்கபூர்வமான முறையில் நான் விமர்சித்துவருவதை காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விமர்சனமாகவும் கருத முடியாது.

தொண்டர்களின் ரத்தத்தில் கட்சியை வளர்ப்பவர்களுக்கு மத்தியில், காந்தி குடும்பத் தலைவர்களின் ரத்தத்தைக் கொடுத்து வளர்க்கப்பட்ட கட்சி காங்கிரஸ். அந்தவகையில் சோனியா, ராகுல், பிரியங்கா என எல்லோருமே நல்லவர்கள்தான். ஆனால், வல்லவர்கள் இல்லை! அதைத்தான் நான் விமர்சிக்கிறேன். மற்றபடி, கட்சியின் தலைவர்கள்மீது குற்றச்சாட்டு எதுவும் சுமத்தவில்லை.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

''காங்கிரஸ் கட்சிமீது நீங்கள் வைத்துவரும் விமர்சனங்கள் எதிர்க்கட்சியான பா.ஜ.க-வுக்குத்தானே சாதகத்தை ஏற்படுத்தும்?''

''அப்படியில்லை... இந்த விமர்சனங்களையெல்லாம் நான் 2014-லேயே காங்கிரஸ் கட்சிமீது வைத்திருந்தால், என்னைப்போல் முட்டாள் யாரும் கிடையாது. ஆனால், தொடர்ச்சியான தோல்விகளைச் சந்தித்து 'கழுதை தேய்ந்து கட்டெறும்பாகிவிட்ட' இந்த 2022-லும்கூட, அவசியமான இந்த விமர்சனங்களை நான் வைக்காவிட்டால் என்னைப்போல் துரோகி யாரும் கிடையாது.

என்னுடைய தனிப்பட்ட நலனுக்காக நான் இந்த விமர்சனங்களை முன்வைக்கவில்லை. நாட்டைக் காப்பாற்றியாக வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேதானே விமர்சிக்கிறேன்.''

சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்
சசிகாந்த் செந்தில் ஐ.ஏ.எஸ்

''காங்கிரஸ் கட்சித் தலைவர்களை விமர்சிக்கிற நீங்கள் கட்சிக்காக என்ன செய்தீர்கள் என்று சசிகாந்த் ஐ.ஏ.எஸ் கேட்டுள்ளாரே?''

''ஏசி அறையில் இருந்துகொண்டு அரசியல் செய்பவன் நான் அல்ல. ஆனால், மேஜையில் உள்ள ஃபைல்களை மட்டுமே பார்த்துவிட்டுப் பேசக்கூடிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் உள்ளனர். அந்த வகையில், அரசியலுக்குள் வந்துவிட்ட பிறகும்கூட, வெறுமனே ஃபைலை மட்டுமே பார்த்துப் பேசுகிற அதிகாரியாக சசிகாந்த் இருக்கிறாரே என்றுதான் எனக்கு வருத்தம்.

தமிழ்நாட்டில் 12 ஆயிரத்து 524 கிராமங்கள் இருக்கின்றன. இங்கு, வீடு வீடாக காங்கிரஸ் கட்சிக்கொடியை எடுத்துச் சென்று மக்களிடையே கட்சியைக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும். இதுதான் கட்சி வளர்ச்சிக்கான அடிப்படை. இதைத்தான் 'ஆபரேஷன் 6263' என்ற பெயரில், 2013-ம் ஆண்டிலிருந்தே நான் நேரடியாக கிராமங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்துவருகிறேன். என்னுடைய சொந்தக் கைக்காசில் நான் செய்துவரும் இந்தப் பணியைக்கூடத் தெரிந்திராத சசிக்குமார், என்னைப் பார்த்து கிராமங்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் எனக் கேட்பது வியப்பாக இருக்கிறது.''

''தேசிய அளவில், காங்கிரஸ் கட்சியில் அமைப்புரீதியான சீர்திருத்தம் கொண்டுவர ஆக்கபூர்வமாக என்ன ஆலோசனை வைத்திருக்கிறீர்கள்?''

''காங்கிரஸிலிருந்து பிரிந்து போய் தனிக்கட்சி நடத்தி, ஜெயித்துக்காட்டிய மம்தா பானர்ஜி, ஜெகன்மோகன் ரெட்டி, சரத் பவார் உள்ளிட்ட தலைவர்களை மறுபடியும் கட்சிக்குள் அழைத்துவர வேண்டும். மாநிலங்களில் அவரவர் கட்சிகளைத் தொடர்ந்தபடியே, தேசிய அளவில் காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதற்கான திட்டங்களைத் தீட்டி, முடிவெடுக்கும் குழுவில் இவர்களும் அங்கத்தினர்களாக வேண்டும். இந்தக் குழுவில் உள்ள ஒருவரே பிரதமராக வர முடியும் என்பதையெல்லாம் எழுத்துபூர்வமாக உறுதிகொடுக்க வேண்டும். இதையெல்லாம் செய்தால், கட்சியின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கை ஏற்படும். இப்போது கூட்டணிக்காக நாம் போய்க் கெஞ்சுகிற நிலைமை மாறி, நம்மைத் தேடி கூட்டணிக் கட்சிகள் வரும். இதையெல்லாம் நான் கட்சியில் தொடர்ந்து சொல்லிவருகிறேன்; கடிதம் எழுதிவருகிறேன். ஆனால், என் பேச்சைக் கேட்கவோ கடிதத்தைப் படித்துப் பார்த்து பதில் எழுதவோ அவர்களுக்கு நேரம் இல்லை!

இப்போது பொதுவெளியில் சொன்ன பிறகு, இவையெல்லாம் இன்று பேசுபொருளாகியிருக்கின்றன. இல்லையென்றால், டெல்லித் தலைமைக்கு என் குரலெல்லாம் கேட்குமா?''

கே.எஸ்.அழகிரி
கே.எஸ்.அழகிரி

''தமிழக காங்கிரஸ் கட்சிக்கு உங்கள் ஆலோசனை என்ன?''

''காங்கிரஸ் கட்சி, மாநிலத்திலும் மத்தியிலும் ஆட்சியைப் பிடிக்க வேண்டுமானால், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அதிக கவனம் செலுத்த வேண்டும். ஆனால், தொடர்ந்து தோழமைக் கட்சிகளோடே தேர்தலைச் சந்தித்துவருவதால், அடிப்படையான கிராமத்து மக்களிடம் கட்சியை எடுத்துச்செல்ல தவறிவிட்டது காங்கிரஸ். தமிழ்நாட்டில், ராஜீவ் காந்தி காலத்தில் 20%-ஆக இருந்த வாக்குவங்கி, இன்றைக்கு 5%-ஆகத் தேய்ந்துவிட்டது. இப்படியே போனால், 'நீங்கள் நல்லவர்கள்தான்... ஆனால், கூட்டணியில் இடம் இல்லை. மனதில்தான் இடம் இருக்கிறது' என்றுகூட கூட்டணிக் கட்சியினர் சொல்லிவிடுவார்கள். காரணம் தேர்தல் என்றால், அதில் ஜெயித்தாகவேண்டியது கட்டாயம்!

ஒரு கட்சி எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை தி.மு.க-வைப் பார்த்து காங்கிரஸ் கற்றுக்கொள்ள வேண்டும். ஓர் அடிப்படைத் தொண்டனின் சட்டையைக் கழற்றிவிட்டார் என்பதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரைத் தொடர்ச்சியாக சிறைக்குள் வைத்தார்கள். ஆனால், எங்கள் கட்சித் தலைவர் ராஜீவ் காந்தியாடு 14 தமிழர்களையும் சேர்த்துக் கொன்றவர்களுக்கு எதிராக எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்காமல் காங்கிரஸ் கட்சி இருந்துவருகிறதே..!''

''ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்டவர்களை, ராகுல் காந்தியே மன்னித்துவிட்டார்தானே?''

''தனிப்பட்ட மனிதர்கள் யாருக்கும் எதிராக நான் பேசவில்லை. உதாரணமாக பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் இடத்தில் நான் இருந்திருந்தால்கூட, 'என் பிள்ளையின் விடுதலைக்காகத்தான் போராடியிருப்பேன்.’ எனவே நான் அதைக் குற்றம் சொல்லவில்லை.

ராகுல் - ராஜீவ் - பிரியங்கா
ராகுல் - ராஜீவ் - பிரியங்கா

ராஜீவ் காந்தி என்பவர் ராகுல் காந்தியின் தந்தை. சோனியா காந்தியின் கணவர். இதனாலேயே ராஜீவ் காந்தி இவர்களுக்கு மட்டுமே சொந்தமானவர் என்றில்லை. ராஜீவ் காந்தி என்ற மாபெரும் தலைவர், காங்கிரஸ் கட்சித் தொண்டர்களையும் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவுக்கே சொந்தமானவர். அப்படிப்பட்ட ஒரு தலைவரையும் தமிழர்களையுமே காப்பாற்ற முடியாத காங்கிரஸ் கட்சி, வேறு யாரைக் காப்பாற்றிவிடப்போகிறது?

ராஜீவ் காந்தி படுகொலையில் நியாயம் கேட்டு கவிஞர் ராமலிங்கம் ஜோதி, இராம.சுகந்தன், ராயபுரம் மனோ உள்ளிட்ட சில காங்கிரஸார்தான் என்னோடு சேர்ந்து சட்டப் போராட்டம் நடத்தினர். ஆக, காங்கிரஸ் கட்சியிலிருந்து எந்தவோர் உதவியும் கிடைக்காத சூழலிலும்கூட, ராஜீவ் காந்தி படுகொலையில் பலியானவர்களின் குடும்பத்தினரோடு சேர்ந்து உச்ச நீதிமன்றம்வரை சட்டப் போராட்டம் நடத்தியவர்கள் நாங்கள்.''

(விறுவிறுப்பான இந்தப் பேட்டியின் அடுத்த பாகம் விரைவில்...)