`பெருந்தலைவர் காமராஜர் கடல் சார் அறிவியல் மற்றும் பொறியியல் நிலையம்' என்ற கல்வி நிறுவனத்தின் அறங்காவலராக இருப்பவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி. இந்தக் கல்வி நிறுவனத்தின் மீது கப்பல் போக்குவரத்து துறைக்கு மாணவர் ஒருவர் மின்னஞ்சல் மூலம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன் அடிப்படையில், ``உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக் கூடாது” என்று கேட்டு ஆகஸ்டு 8-ம் தேதி நோட்டீஸ் அனுப்பி, அதை தனது இணையதளத்திலும் வெளியிட்டிருக்கிறது கப்பல் போக்குவரத்து இயக்ககம். தமிழக காங்கிரஸ் கமிட்டியில் இருக்கும் சிலரே அழகிரிக்கு எதிராக இதைப் பரப்பி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது ஒருபுறமிருக்க தி.மு.க-விலிருந்து காங்கிரஸ் தனித்துவிடப்படுகிறது என்ற குற்றசாட்டுகளும் முன்வைக்கப்படுகின்றன. இதுதொடர்பாக அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கோபண்ணாவிடம் பேசினோம். ``தீயணைப்பது தொடர்பான பயிற்சி வகுப்பு அது. அதன் கட்டணம் 8,000 ரூபாய். அதில் படித்த வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில தவறான பழக்கவழக்கத்தால் கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் புகார் ஒன்றையும் கொடுத்திருந்தார். அந்தப் புகாருக்கு உரிய விளக்கத்தை அறக்கட்டளையின் தலைவர் கே.எஸ்.அழகிரி பதிலளித்துவிட்டார். இந்த பிரச்னையை அரசியல்ரீதியாக, காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சிலர், கே.எஸ்.அழகிரிக்கு எதிராகவும் அவர் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்டுவருகின்றனர். இது உண்மையில்லை.
இன்றைக்கு பா.ஜ.க ஆட்சிதான் நடக்கிறது. பா.ஜ.க-வை கடுமையாக அழகிரி விமர்சிக்கிறார். அவர் ஏதாவது தவறோ, குற்றமோ செய்திருந்தால் அவர்கள் நடவடிக்கை எடுக்காமலா இருப்பார்கள். உண்மைக்குப் புறம்பான செய்தி அது. அரசியலில் தனித்துவிடப்பட்ட சிலர், காங்கிரஸிலிருந்து வெளியேற்றபட்டவர்கள், அவர்கள் பரப்புகிற கட்டுக்கதைதான் இது” என்றவரிடம், `தி.மு.க கூட்டணிக்கட்சிகள் தொடர்ந்து காங்கிரஸை விமர்சிக்கிறதே?' எனக் கேட்டதற்கு,``பா.ஜ.க மீது ப.சிதம்பரம் கடுமையான விமர்சனங்களையெல்லாம் முன்வைக்கிறார்.

ஆனால், ஏதோ ஒன்றிரண்டு விஷயங்களை அவர் ஆதரிப்பதால், அவர் பா.ஜ.க ஆதரவாளர் என்று கூறுவதெல்லாம் நியாமில்லாத ஒன்று. 99 சதவிகிதம் அவர் பா.ஜ.க-வை எதிர்க்கிறார். மோடி தலைமையிலான பா.ஜ.க-வை முழுமையாக எதிர்க்க வேண்டும் என்பது ஒரு கொள்கை. அந்தக் கொள்கையிலிருந்து சிதம்பரம் சற்று வேறுபடுகிறார். நூறு சதவிகிதம் எதிர்க்க வேண்டும் என்று முத்தரசன் கூறுகிறார். 99 சதவிகிதம் எதிர்க்கிறேன்; ஒரு சதவிகிதம் எதுவும் நல்லது செய்தால் அதை வரவேற்பேன் என்பது சிதம்பரத்தின் கூற்று. இருவருக்கும் வித்தியாசம் 1 சதவிகிதம்தான். பெரிய வேறுபாடெல்லாம் இல்லை. அதற்கு உள்நோக்கம் கற்பிக்க வேண்டிய அவசியமில்லை.
நரேந்திரமோடி எதிர்ப்பு, அ.தி.மு.க எதிர்ப்பு, மதசார்பற்ற கொள்கை இந்த அடிப்படையில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி அமைந்திருக்கிறது. ஒரு சில விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் உண்டு. பொதுவான நோக்கத்தின் அடிப்படையில் அமைந்த கொள்கை கூட்டணி இது. வைகோ மாநிலங்களவையில் காஷ்மீர் பிரச்னை குறித்து பேசும்போது, தேவையில்லாமல் காங்கிரஸை விமர்சனம் செய்திருக்கிறார்.

இன்றைக்கு இருக்கும் அரசியலைப் பார்க்கும்போது, அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 ரத்து குறித்துதான் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமே தவிர, ஜவஹர்லால் நேருவை விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு பிரச்னையிலும், ரிஷி மூலம், நதி மூலம் பார்த்தால், அதை வைகோ விஷயத்திலும் பார்க்க வேண்டியது வரும். அவர் ஒரு கருத்து சொன்னார். எங்கள் தலைவர் அழகிரி ஒரு கருத்து சொன்னார். பிரச்னை அதோடு முடிந்துவிட்டது. எங்களுக்குள் சுமுகமான உறவு இருக்கிறது” என்றார் இயல்பாக.