Published:Updated:

ராஜஸ்தான்: `உள்ளதையும் ஒப்பேற்ற முடியாத நிலையில் காங்கிரஸ்?!' - அமைச்சரவை மாற்றம் கைகொடுக்குமா?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அசோக் கெலாட், சச்சின் பைலட் - ராஜஸ்தான் காங்கிரஸ்
அசோக் கெலாட், சச்சின் பைலட் - ராஜஸ்தான் காங்கிரஸ்

சச்சின் பைலட்டுக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் புதிய அமைச்சரைவில் முக்கிய துறைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 122 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இதில் காங்கிரஸ் மட்டும் 108 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. முன்பு ஆட்சியிலிருந்த பா.ஜ.க கூட்டணி 73 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பிடித்தது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் பொறுப்பேற்றனர்.

சச்சின் பைலட், ராகுல் காந்தி, அசோக் கெலாட்
சச்சின் பைலட், ராகுல் காந்தி, அசோக் கெலாட்
ட்விட்டர்

ஆரம்பம் முதலே இருவருக்குமிடையே அதிகார பகிர்வில் போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக இருவருக்குமிடையேயான கருத்து வேறுபாடு அதிகரிக்கத் தொடங்கியது. சச்சின் பைலட் முக்கிய பதவி கேட்டு கட்சி மேலிடத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த விவகாரம் வலுப்பெறவே ராகுல்காந்தி தலையிட்டு சச்சின் பைலட்டிடம் சமாதானம் பேசினார். மேலும், ஜெய்ப்பூரில் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தலைமையிலான அணி அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே சமாதானம் பேசி பிரச்னையை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தது.

இந்த சமாதான பேச்சுவார்த்தைக்குப் பின்னர், கடந்த வருடம் ஜூலை மாதம் சச்சின் பைலட் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டதாகக் கட்சித் தலைமை அறிவித்தது. மாநிலத்தில் ஆட்சி நீடிக்க சச்சின் பைலட்டும், அவர் ஆதரவாளர்களும் ஆதரவு தெரிவித்துவந்தனர். மேலும், அவரின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு வழங்கப்படும் என்றும் கட்சித் தலைமை உத்தரவாதம் தெரிவித்திருந்தது. பல மாதங்களாகியும், அவரின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இன்னும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்ற அதிருப்தியிலிருந்தார் சச்சின்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
ட்விட்டர்

இந்த சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அமைச்சரவை மாற்றம் தொடர்பாகப் பேசக் கட்சித் தலைமை சச்சின் பைலட்டை டெல்லிக்கு அழைத்திருந்தது. டெல்லி சென்ற சச்சின் பைலட், சோனியா காந்தி, கே.சி.வேணுகோபால், அஜய் மக்கான், பிரியங்கா காந்தி, அசோக் கெலாட் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பேச்சுவார்த்தை நடந்தது. இந்த கூட்டத்தில், அமைச்சரவை மாற்றத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

முறியடிக்கப்பட்ட பா.ஜ.க சதி; கரையவைத்த பிரியங்கா! - சச்சின் பைலட் மீண்டும் `கை'கோத்த பின்னணி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சரவை மாற்றத்தின் முக்கியத்துவம் குறித்து சச்சின் பைலட் விளக்கமாகப் பேசியிருக்கிறார். தற்போதைய அமைச்சரவையில், பட்டியலின பிரிவு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் யாருக்கும் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. அதோடு, அதிருப்தியில் இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க-வுக்குச் செல்ல இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த அமைச்சரவை மாற்றம் மிகவும் அவசியம் என்று சச்சின் பைலட் கட்சித் தலைமைக்கு எடுத்துக்கூறியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்தே, அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறார் சோனியா காந்தி.

அசோக் கெலாட்
அசோக் கெலாட்
ட்விட்டர்

ராஜஸ்தான் அமைச்சரவையில் சுமார் 20 அமைச்சர்கள் மட்டுமே பொறுப்பிலிருந்த நிலையில், ஹரிஷ் சவுத்திரி, கோவிந்த் சிங், ரகு சர்மா ஆகிய மூன்று அமைச்சர்களும் தங்களின் பதவியை ராஜினாமா செய்தனர். இந்த தகவலை, ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் அஜய் மக்கான், டெல்லி தலைமைக்குத் தெரிவித்தார். இந்த நிலையில், அமைச்சரவை மாற்றம் நிகழவிருப்பதால் மாநிலத்தின் மற்ற அமைச்சர்களும் தங்கள் ராஜினாமா கடிதத்தை முதல்வர் அசோக் கெலாட் வசம் அளித்திருக்கின்றனர். இதன் மூலம், சச்சின் பைலட்டுக்கும், அவர் ஆதரவாளர்களுக்கும் புதிய அமைச்சரைவில் முக்கிய துறைகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், இந்த அமைச்சரவை மாற்றம் ராஜஸ்தான் அரசியலில் கவன ஈர்ப்பு சம்பவமாகப் பார்க்கப்படுகிறது.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்
ட்விட்டர்

அமைச்சரவை மாற்றம் இன்று (21-11-2021) நடைபெறும் என்று, நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னதாக, காங்கிரஸ் கமிட்டி கூட்டம் இன்று நடைபெறவிருப்பதாகக் கூறப்படுகிறது. அந்த கமிட்டி கூட்டத்தில், புதிய அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைச்சரவை மாற்றம் மூலம் அசோக் கெலாட்டுக்கும், சச்சின் பைலட்டுக்கும் இடையே நிலவிவரும் பனிப்போர் முடிவுக்கு வரும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

`தலைமையிடம் ஊடகங்களின் வழியாகப் பேசாதீர்கள்’ - காரிய கமிட்டி கூட்டத்தில் சோனியா காந்தி பேசியது என்ன?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு