Published:Updated:

`மோடி அலையிலும் சிக்காத வர்ஷா!' - காங்கிரஸின் கோட்டையைத் தக்கவைத்த `தாராவியின் ராஜமாதா'

மும்பை பகுதியில் உள்ள தாராவியில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளார் காங்கிரஸின் வர்ஷா கெய்க்வாட்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘தாராவி’ இந்தப் பெயர் தமிழகத்தில் இருப்பவர்கள் பலருக்கும் பரிச்சயமான ஒன்று. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள சிறிய பகுதிதான் தாராவி. 1987-ம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படம் முதல் சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ உள்ளிட்ட பல படங்களில் தாராவி மக்களின் நிலை பற்றி அழுத்தமாகப் பேசப்பட்டிருக்கும்.

தாராவி
தாராவி

தாராவி தமிழகத்தில் மட்டும்தான் இல்லை மற்றபடி அங்கு வாழ்பவர்கள் அனைவரும் தமிழர்கள்தான். ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய குடிசை பகுதியாகக் கருதப்படும் தாராவியில், தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட மக்களும் உள்ளனர். 1850 -களில் மும்பை அசுர வளர்சியைச் சந்தித்துக்கொண்டிருந்தது. அதே சமயம் தமிழகத்தில் வறட்சி நிலவியது. இதனால் பல தமிழர்கள் மும்பை நோக்கிப் படையெடுத்தனர்.

அந்த நேரத்தில் மும்பைக்குத் தொழிலாளர்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினர் தேவை என்பதால் தமிழர்களை அள்ளி அணைத்துக்கொண்டது தாராவி. அப்போது தொடங்கிய தமிழர்- தாராவி பந்தம் இன்றுவரை நீடித்து வருகிறது. இந்தியாவில் மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் தாராவியும் ஒன்று. வெறும் 500 ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியில் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். தாராவியில் பத்துப் பேர் வாழவேண்டிய இடத்தில் ஐம்பது பேர் வசித்து வருகின்றனர். இப்படி தாராவி பற்றிச் சொல்ல வேண்டும் என்றால் பல விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வர்ஷா கெய்க்வாட்
வர்ஷா கெய்க்வாட்
Twitter/@VarshaEGaikwad

தற்போதைய கதைக்கு வருவோம், அரசியலைப் பொறுத்தவரை தாராவி காங்கிரஸின் கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. அங்கு 1980-ம் ஆண்டு முதல் காங்கிரஸ் வேட்பாளர்களே தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றனர். அதுவும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்தான் அங்கு எம்.எல்.ஏவாக இருந்து வருகின்றனர். 2014-ம் ஆண்டு இந்தியா முழுவதும் மோடி அலை வீசியதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்போதும் தாராவியில் காங்கிரஸ்தான் கோலோச்சியது.

Vikatan

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஏக்நாத் கெய்க்வாட் (Eknath Gaikwad) இவர்தான் தாராவியின் ஆஸ்தான காங்கிரஸ் வேட்பாளர். 1985 -ம் ஆண்டு முதல் இவர்தான் தாராவியின் மக்கள் பிரதிநியாதச் செயல்பட்டு வந்தார். ஆனால், 1995-ம் ஆண்டு மட்டும் சிவசேனாவின் வேட்பாளர் வெற்றி பெற்றார். அதன் பிறகு அதே தாராவி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஏக்நாத் கெய்க்வாட்டின் மகள் வர்ஷா கெய்க்வாட் களமிறக்கப்பட்டார். 2004-ம் ஆண்டு முதல் நேற்று நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தல் வரை அனைத்திலும் வர்ஷாதான் வெற்றி பெற்று வருகிறார்.

வர்ஷா கெய்க்வாட்
வர்ஷா கெய்க்வாட்
Twitter/@VarshaEGaikwad

தொடர்ந்து நான்காவது முறையாக தாராவியின் மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் வர்ஷா. நேற்று நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், வர்ஷா தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்தார். 22 சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை முடிவில் 53,954 வாக்குகள் வித்தியாசத்தில் வர்ஷா மீண்டும் வெற்றி பெற்று, தாராவி காங்கிரஸின் அசைக்கமுடியாத கோட்டை என்பதை நிரூபித்துள்ளார்.

தாராவி பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அமைக்க வேண்டும் என்பதுதான் அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. தாராவிக்கு அருகிலேயே விமான நிலையம் உள்ளதால் அங்கு அடுக்குமாடிகள் கட்ட பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், அங்கு இருந்த சில நிழலுலக தாதாக்களால் தற்போது வரை தாராவி ஒரு குற்றப் பகுதியாகவே பார்க்கப்படுகிறது.

தாராவி
தாராவி

தாராவியில் ஏராளமான பிரச்னைகள் இருக்கலாம் மூச்சுவிடக் கூட சிரமப்படும் அளவு மக்கள்தொகை இருக்கலாம். ஆனால், தாராவி மக்களின் நிலைக்காகவும் அவர்களின் வளர்ச்சிக்காகவும் அதிகம் உழைத்துள்ளார் வர்ஷா. தாராவி மக்கள் இவரை `தாய்’ என அழைக்கும் அளவுக்கு வர்ஷா செயல்பட்டுள்ளார். இருப்பினும் அவர் மீது சில அதிருப்திகளும் இருந்துகொண்டுதான் உள்ளன. தாராவியில் அதிகம் உள்ள இஸ்லாமியர்கள், பட்டியலின மக்கள், தமிழர்கள் என அனைத்து மக்களின் தேவை அறிந்து உடனடியாகச் செயல்பட்டு வருவதால்தான் நான்காவது முறையாக அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியுள்ளனர் தாராவி மக்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு