Published:Updated:

பினராயி விஜயனை கவிழ்த்த கே ரயில்! - கேரள இடைத்தேர்தல் முடிவும்... காங்கிரஸின் எழுச்சியும்...

பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
பினராயி விஜயன்

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் ரயில் பாதை மூலம் இணைக்கும் ‘கே ரயில்’ திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணி நடந்துவருகிறது

பினராயி விஜயனை கவிழ்த்த கே ரயில்! - கேரள இடைத்தேர்தல் முடிவும்... காங்கிரஸின் எழுச்சியும்...

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் ரயில் பாதை மூலம் இணைக்கும் ‘கே ரயில்’ திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணி நடந்துவருகிறது

Published:Updated:
பினராயி விஜயன்
பிரீமியம் ஸ்டோரி
பினராயி விஜயன்

இடைத்தேர்தல்களில் ஆளுங்கட்சி அமோக வெற்றிபெறுவதைப் பார்த் திருப்போம். ஆனால், கேரள மாநிலம், திருக்காக்கரை சட்டசபைத் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சிக்கு மரண அடி கொடுத்து, வெற்றி மகுடம் சூடியிருக்கிறது எதிர்க்கட்சியான காங்கிரஸ்.

திருக்காக்கரை தொகுதி எம்.எல்.ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பி.டி.தாமஸின் மரணத்தைத் தொடர்ந்து, கடந்த மாதம் 31-ம் தேதி அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் பி.டி.தாமஸின் மனைவி உமா தாமஸ், சி.பி.எம் சார்பில் டாக்டர் ஜோ.ஜோசப், பா.ஜ.க சார்பில் ஏ.என்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் களமிறக்கப்பட்டனர். தேர்தல் முடிவு கடந்த 3-ம் தேதி வெளியானது. ஆளும் சி.பி.எம் வேட்பாளரைவிட 25,016 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிவாகை சூடி கேரள அரசியலில் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறார் காங்கிரஸைச் சேர்ந்த உமா தாமஸ்.

பினராயி விஜயனை கவிழ்த்த கே ரயில்! - கேரள இடைத்தேர்தல் முடிவும்... காங்கிரஸின் எழுச்சியும்...

ஓராண்டுக்கு முன்பு நடந்த பொதுத்தேர்தலில் 14,329 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருந்தார் பி.டி.தாமஸ். இடைத்தேர்தலில் 25,000 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸை மக்கள் வெற்றிபெறவைத்திருப்பது, பினராயி சர்க்காருக்கு மக்கள் கொடுத்த சிவப்பு கோடிட்ட ‘புராகிரஸ் கார்டு’ என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

2011-ல் தோற்றுவிக்கப்பட்ட திருக்காக் கரை தொகுதியில் இதுவரை நடந்த அனைத்து சட்டசபைப் பொதுத்தேர்தல் களிலும் காங்கிரஸ் கட்சிதான் வெற்றிபெற்றுவருகிறது. அதேசமயம், இடைத்தேர்தல் என்பதால், ‘பினராயி விஜயன் 2.0’ ஆட்சியின் மானத்தைக் காக்க வேண்டிய கட்டாயத்தில் சி.பி.எம் தீயாய் வேலை செய்தது. ஏற்கெனவே 99 எம்.எல்.ஏ-க்கள் இருக்கும் நிலையில், இடைத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ-க்கள் எண்ணிக்கையை 100 ஆக்கத் திட்டமிட்டார் பினராயி விஜயன். அதற்காக முதல்வர் பினராயி விஜயன் அரிதினும் அரிதாக 15 நாள்கள் திருக்காக்கரை தொகுதியில் முகாமிட்டு பிரசாரம் செய்தார். திருக்காக்கரையில் திரும்பிய இடமெல்லாம் அமைச்சர்களும் களமாடினார்கள். இதெயெல்லாம் மீறி காங்கிரஸ் கட்சிக்குப் பெரும் வெற்றி சாத்தியமானதன் காரணிகள் பல உண்டு. அவற்றில், ‘கே ரயில்’ என்ற கேரள அரசின் சில்வர் லைன் திட்டத்துக்கு மிக முக்கியப் பங்கு உண்டு.

பினராயி விஜயனை கவிழ்த்த கே ரயில்! - கேரள இடைத்தேர்தல் முடிவும்... காங்கிரஸின் எழுச்சியும்...

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களையும் ரயில் பாதை மூலம் இணைக்கும் ‘கே ரயில்’ திட்டத்துக்கு நிலம் எடுக்கும் பணி நடந்துவருகிறது. அதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர். திருக்காக்கரை தொகுதி வழியாகவும் ‘கே ரயில்’ பாதை செல்கிறது. திருவனந்தபுரம் மங்களாபுரத்தில் ‘கே ரயில்’ திட்டத்துக்கு எல்லைக்கல் போட எதிர்ப்பு தெரிவித்து போராடியவரை, போலீஸ் பூட்ஸ் காலால் மிதித்த சம்பவம் ஏற்கெனவே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. “நீங்கள் சி.பி.எம்-க்கு வாக்களித்தால் ஏற்கெனவே 99-ஆக இருக்கும் அக்கட்சி எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை சட்டசபையில் சதமடிக்கும். ஆனால், ‘சில்வர் லைன்’ திட்டத்தின் மூலம் உங்கள் நிலங்கள் பறிக்கப்படும்” எனப் பிரசாரத்தின்போது பேசியிருந்தார், காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீசன்.

அதேசமயம், “கே ரயில் திட்டத்தை செயல்படுத்தியே தீருவேன்” என்று பிடிவாதமாகச் சொன்னார் பினராயி விஜயன். கே ரயிலுக்கு எதிரான மக்கள் மனநிலை காங்கிரஸுக்குச் சாதகமாக அமைந்தது. இதற்கிடையே திலீப் விசாரணைக்கு ஆஜராகிவரும் பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட நடிகை, ‘தன் பாலியல் வழக்கு அரசு தலையீட்டால் சுணக்கமாகச் செல்கிறது’ என கோர்ட்டில் கூறியதும், சினிமா தலைநகரமான எர்ணாகுளம் மாவட்டத்திலிருக்கும் இந்தத் தொகுதியில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. மற்றொருபுறம் சி.பி.எம் வேட்பாளரான டாக்டர் ஜோ.ஜோசப்பின் ‘கில்மா வீடியோ’ என்ற தலைப்பில் அவரைப் போன்ற மற்றொருவர் ஒரு பெண்ணிடம் நெருக்கமாக இருக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் சிலர் வைரலாக்கினர். அதற்கு பதில் சொல்லிச் சமாளிப்பதற்குள் ஒருவழியாகிவிட்டனர் சி.பி.எம் கட்சியினர்.

உமா தாமஸ், ஜோ.ஜோசப், ஏ.என்.ராதாகிருஷ்ணன்
உமா தாமஸ், ஜோ.ஜோசப், ஏ.என்.ராதாகிருஷ்ணன்

மூன்றாம் முன்னணியான பா.ஜ.க அதிக ஓட்டுகளைப் பிரித்தால், வெற்றிபெறலாம் எனக் கணக்கிட்டிருந்தது சி.பி.எம். ஆனால், ‘முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் குழந்தை பிறக்காமல் செய்யும் மருந்தை வேண்டுமென்றே கலக்கிறார்கள்’ என பேசி வம்பு வழக்கில் சிக்கிய, ‘கேரள ஜனபக்‌ஷம்’ கட்சித் தலைவர் பி.சி.ஜார்ஜை முன்னிலைப்படுத்தி, மதரீதியிலான பிரசாரத்தைச் செய்தது பா.ஜ.க. இதனால் கடந்த பொதுத்தேர்தலில் 15,483 வாக்குகள் பெற்ற பா.ஜ.க., 2,526 வாக்குகளை இழந்து 12,957 வாக்குகளையே இடைத்தேர்தலில் பெற்றுள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு எதிராகத் தொடர்ந்து போராடிவரும் வழக்கறிஞர் ரசல் என்பவர், “அணையை உடைப்பதற்கு எந்த அரசியல் கட்சியும் ஆதரவாக இல்லை. எனவே, அரசியல் கட்சிகளைப் புறக்கணித்து நோட்டோவுக்கு வாக்களியுங்கள்” என்று பிரசாரம் செய்தார். நோட்டாவுக்கு 1,111 ஓட்டுகள் மட்டுமே கிடைத்திருப்பது தமிழ்நாட்டு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது!

மொத்தத்தில் வீழ்ந்துகிடந்த காங்கிரஸ் கட்சிக்குத் திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது, திருக்காக்கரை இடைத்தேர்தல். அந்த உற்சாகத்தில் வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ‘கே ரயில்’ திட்ட எதிர்ப்பு போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தத் தயாராகிவிட்டனர், கேரள மாநில காங்கிரஸ் தலைவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism