அலசல்
அரசியல்
Published:Updated:

பா.ஜ.க-வுக்கு ‘குட்பை’ சொன்ன தென்னிந்தியா... கர்நாடகாவில் காங்கிரஸ் வென்றது எப்படி?

டி.கே.சிவக்குமார், ராகுல் காந்தி, சித்தராமையா
பிரீமியம் ஸ்டோரி
News
டி.கே.சிவக்குமார், ராகுல் காந்தி, சித்தராமையா

காங்கிரஸைப்போல அல்லாமல், தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அங்கு பணிகளையே தொடங்கியது பா.ஜ.க.

`காங்கிரஸ் இனி மெல்லச் சாகும்’ என நினைத்துக்கொண்டிருந்த பா.ஜ.க-வுக்கு, இமாச்சலப்பிரதேசம், கர்நாடகா என அடுத்தடுத்து இரண்டு சட்டமன்றத் தேர்தல்களில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி வாகை சூடி, ஷாக் கொடுத்திருக்கிறது இந்தியாவின் பழம்பெரும் கட்சி. தென்னிந்தியாவில் தங்களுக்கான நுழைவு வாயிலாக, கர்நாடகாவை மட்டுமே நம்பியிருந்த பா.ஜ.க-வுக்கு, இந்தத் தேர்தல் தோல்வி மூலம் `குட்பை’ சொல்லியிருக்கிறது தென்னிந்தியா. கர்நாடகாவில் காங்கிரஸின் வெற்றிக்கும், பா.ஜ.க-வின் தோல்விக்கும் காரணம் என்ன?

காங்கிரஸின் எழுச்சியும் பா.ஜ.க-வின் வீழ்ச்சியும்..!

கர்நாடகாவில் ஆட்சியிலிருந்த பா.ஜ.க அரசின்மீதான ஊழல், கமிஷன், வகுப்புவாதப் பிரச்னைகள் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தின. கடந்த 2022-ம் ஆண்டு, பெலகாவியைச் சேர்ந்த சந்தோஷ் பாட்டீல் என்ற ஒப்பந்ததாரரின் தற்கொலை வழக்குக்குப் பிறகு, `அனைத்துத் துறைகளிலும் 40 சதவிகித கமிஷன் பெறுகிறது பா.ஜ.க ஆட்சி’ என்ற கோஷத்தை முன்னெடுத்தது காங்கிரஸ். `PayCM’ என்று QR கோடில் முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் முகத்தைச் சேர்த்து ஒட்டப்பட்ட போஸ்டர் பிரசாரம் இளைஞர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. கர்நாடக காங்கிரஸ் வார் ரூமை வழிநடத்திய, தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலும், கர்நாடகாவைச் சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோலுவும் பா.ஜ.க ஆட்சி மீதான அதிருப்தியை அனைத்துத் தரப்பு மக்களிடமும் கடத்தினர்.

டி.கே.சிவக்குமார், சித்தராமையா
டி.கே.சிவக்குமார், சித்தராமையா

மேலும், கர்நாடகாவைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவை கட்சியின் தேசியத் தலைவராக்கியது, முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்தது, பணபலமும் செல்வாக்கும் பெற்ற டி.கே.சிவக்குமாரை மாநிலத் தலைவராக்கியது என காங்கிரஸ் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் அவர்களுக்குச் சாதகமாக அமைந்தன. மேலும், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே கர்நாடகத் தேர்தலுக்கான வேலைகளைத் தொடங்கியதும் காங்கிரஸுக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது. வியாபாரிகள் சங்கம், ஒப்பந்ததாரர்கள் சங்கம் எனச் சங்கங்களைத் தங்கள் வசம் இழுத்ததும், லிங்காயத் மடாதிபதிகள், இஸ்லாமிய அமைப்புகள் எனச் சமூகரீதியான ஆதரவைப் பெற்றதும் காங்கிரஸ் வெற்றிக்கு வித்திட்டன.

இதற்கிடையே, ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை கர்நாடக இளைஞர்கள், சாமானியர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டதும் மக்களிடம் அனுதாப அலையை உருவாக்கியது. `150 தொகுதிகளிலாவது வென்றுவிட வேண்டும்; இல்லையென்றால், பா.ஜ.க குதிரைப் பேரத்தில் ஈடுபடும்’ என்பதே கர்நாடக காங்கிரஸாருக்கு ராகுல் சொன்ன முக்கிய அறிவுரை. அதேநேரம், தேர்தல் அறிக்கையில் மகளிருக்குக் கட்டணமில்லா பேருந்துப் பயணம், மாதம் ரூ.2,000 உரிமைத்தொகை, இலவச மின்சாரம் என மக்களை ஈர்க்கும் வாக்குறுதிகளை அறிவித்ததும் மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 135 தொகுதிகளை காங்கிரஸ் தன்வசப்படுத்த உதவியிருக்கிறது.

காங்கிரஸைப்போல அல்லாமல், தேர்தலுக்குச் சில மாதங்களுக்கு முன்புதான் அங்கு பணிகளையே தொடங்கியது பா.ஜ.க. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜே.பி.நட்டா என பா.ஜ.க-வின் தேசிய முகங்களை முன்னிறுத்தி மேற்கொள்ளப்பட்ட பிரசாரம் கர்நாடகாவில் எடுபடவில்லை. `தி கேரளா ஸ்டோரி’, `ஜெய் பஜ்ரங் பலி’ என மதம் சார்ந்த விஷயங்களை முன்னிறுத்தி மோடி செய்த பிரசாரங்களையும் கர்நாடக மக்கள் காதில் வாங்கவில்லை. லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த சக்திவாய்ந்த தலைவரான எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து நீக்கியபோதே கர்நாடகாவில் பா.ஜ.க-வின் சரிவு தொடங்கிவிட்டது. பசவராஜ் பொம்மை பதவியேற்ற பிறகு கர்நாடகாவில் ஹிஜாப், ஹலால் உள்ளிட்ட மதவாதப் பிரச்னைகளால் பதற்றமான சூழலே நிலவியது. அரசுத் துறைகளில் தலைவிரித்தாடிய லஞ்சம், ஊழல் உள்ளிட்டவையும் பா.ஜ.க-வை ஆட்சிக்கட்டிலிலிருந்து இறக்கியிருக்கின்றன.

``ஆட்சியை இழந்தாலும் 85 முதல் 90 இடங்களில் வெல்வோம் என்று நினைத்திருந்தோம். ஆனால், 66 இடங்களே கிடைத்திருக்கின்றன. எடியூரப்பாவே, பசவராஜ் பொம்மைக்கு எதிராக வேலைகளைச் செய்ததும், சரியான மாநிலத் தலைமை இல்லாததும்தான் இந்தப் பெரும் தோல்விக்குக் காரணம்’’ எனப் புலம்புகிறார்கள் கர்நாடக பா.ஜ.க-வினர். இதற்கிடையில், `50 தொகுதிகளை வெல்வோம்’ என்று சொல்லிவந்த குமாரசாமியின் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 19 இடங்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன.

மோடி, அமித் ஷா
மோடி, அமித் ஷா

2024-ல் எதிரொலிக்குமா?

``நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பா.ஜ.க-வும் நேரடியாக மோதிக்கொள்ளும் கர்நாடகத் தேர்தல் களம், ஒரு செமி ஃபைனல்ஸாகவே பார்க்கப்பட்டது. இதில் காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றி, 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்ட அவர்களுக்குப் பெரிய உதவியாக இருக்கும். அதேநேரம் `நாங்கள் வெற்றிபெற மோடியின் பிம்பம் மட்டுமே போதும்’ என்று திமிறிக்கொண்டிருந்த பா.ஜ.க-வினரின் நம்பிக்கை தகர்ந்திருக்கிறது” என்கின்றனர் தேசிய அரசியல் பார்வையாளர்கள்.

காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் இந்த வெற்றி, உற்சாகத்தைக் கொடுத்திருந்தாலும் சித்தராமையாவுக்கும் டி.கே.சிவக்குமாருக்கும் இடையிலான முதல்வர் நாற்காலி ரேஸ் கர்நாடக காங்கிரஸை இரண்டாக்கியிருக்கிறது. இந்த இதழ் உங்கள் கைகளில் கிடைக்கும்போது கர்நாடகாவின் புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். ஆனால், காங்கிரஸின் உட்கட்சிப் பூசல்கள் ஓய்ந்திருக்காது. அதைச் சரிக்கட்டினால் மட்டுமே தேசிய அளவில் தொய்வடைந்திருக்கும் காங்கிரஸ் மீண்டெழ முடியும்!