Election bannerElection banner
Published:Updated:

`புதிய தலைவர் விவாதம்; சோனியாவிடம் ஒப்படைக்கப்பட்ட கடிதம்!’ - நாளை காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம்

சோனியா காந்தி குடும்பம்
சோனியா காந்தி குடும்பம்

காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நாளை காணொலி வாயிலாக நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், கட்சித் தலைவர் தேர்வு குறித்து ஆலோசிக்கப்படவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த தோல்வியைத் தொடர்ந்து கடந்த ஆண்டு தனது கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ராகுல் காந்தி. அதைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்றார். அவர் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றும் ஓராண்டு கடந்துவிட்டது. இதனால் தற்போது, `கட்சிக்குத் தலைவர் யார்?’ என்ற விவாதம் வலுத்துள்ளது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

ஒரு தரப்பினர், `தனது பதவியை ராஜினாமா செய்த ராகுல் காந்தியே மீண்டும் தலைவராக வர வேண்டும்’ என்கிறார்கள். கொரோனா காலகட்டத்திலும், இந்திய சீன எல்லை விவகாரத்திலும் ராகுல் காந்தி சிறப்பான வாதங்களை முன்வைத்ததாகவும், துறை சார்ந்த அறிஞர்களுடன் ஆலோசனைகளை நடத்தி ஆக்கபூர்வ கருத்துகளால் மத்திய அரசுக்கு ராகுல் காந்தி நெருக்கடி அளித்ததாகவும் கூறுகிறார்கள் ராகுல் ஆதரவாளர்கள்.

இன்னொருபுறம், பிரியங்கா காந்தி, `எங்கள் குடும்பத்தை சாராதவரே காங்கிரஸுக்குத் தலைமை தாங்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார். பிரியங்கா காந்தியின் இந்தக் கருத்து, `ராகுலைத் தலைவராகக் கொண்டு வர வேண்டும்’ என விரும்பும் தரப்பை அதிருப்தியில் தள்ளியிருக்கிறது. இதற்கிடையே, நாளை காணொலிவாயிலாக காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

சோனியா காந்தி கட்சி இடைக்கால தலைவராக பதவியேற்று ஓராண்டு நிறைவுபெற்ற பிறகு நடைபெறும் முதல் செயற்குழுக் கூட்டம் என்பதால், இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைமை குறித்த விவாதங்கள் நடக்கலாம். எல்லாம் சரியாக நடந்தால் தலைவர் குறித்த இறுதி முடிவெடுக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், `இடைக்கால தலைவராக நீடிக்குமாறு சோனியா காந்தியை காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தலாம்’ எனக் கூறப்படுகிறது. அதை அவர் ஏற்க மறுத்தால், ராகுல் அல்லது பிரியங்காவை அந்தப்பதவிக்குக் கொண்டு வர செயற்குழு உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

சோனியா காந்தி - ராகுல் காந்தி
சோனியா காந்தி - ராகுல் காந்தி

இதற்கிடையே 23 மூத்த நிர்வாகிகள் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் இணைந்து ஒரு கடிதத்தை சோனியா காந்தியிடம் கொடுத்திருக்கிறார்கள். அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை. எனினும், `கட்சியின் அமைப்பை முழுமையாக மாற்றியமைக்குமாறு’ கடிதம் மூலம் கோரிக்கை வைத்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தக் கடிதம் கடந்த சுதந்திர தினத்தில் சோனியா காந்தி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. `நாளைய கூட்டத்துக்குப் பின்னரே இந்தக் கடிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகும்’ எனக் கூறப்படுகிறது.

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் குரியன், ஹிந்துஸ்தான் டைம்ஸ் ஊடகத்துக்கு அளித்திருக்கும் பேட்டியில், `அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்களை இப்போது சொல்ல முடியாது. எனினும், அந்தக் கடிதத்தில் நானும் கையெழுத்திட்டிருக்கிறேன்’ என்றிருக்கிறார். எனவே, அந்தக் கடிதம் தொடர்பாகவும் நாளைய செயற்குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம். `சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகிய மூவரும் தலைமைப் பதவிக்கு வர விருப்பம் தெரிவிக்கவில்லையென்றால், உட்கட்சித் தேர்தலை அறிவிக்க வேண்டும்’ எனவும் சிலர் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ்
காங்கிரஸ்

தலைமை குறித்துப் பல்வேறு காங்கிரஸ் தலைவர்கள் கருத்துகளைத் தெரிவித்துவரும் நிலையில், நாளை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. கட்சியின் அதிகாரம்மிக்க இந்தச் செயற்குழுக் கூட்டத்தில், வரவிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு தயாராவது, கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மத்திய அரசின் செயல்பாடுகள், பொருளாதாரம், சீன எல்லைப் பிரச்னை எனப் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையே இடைக்கால தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரபூர்வத் தகவல் எதுவும் வெளியாகவில்லை.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு