Published:Updated:

``வங்கிகள் இணைப்பு: அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும்!” - பொருளாதார நிபுணர்

தமிழ்ப்பிரபா

இந்தியாவில் பொருளாதார நிலை சரிந்து வருகிறது எனப் பரவலாக அறியப்பட்டு வரும் சூழலில், அதை மேம்படுத்தும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறார். அதில் ஒரு முன்னெடுப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

Banks Merging Plan
Banks Merging Plan

இந்தியாவில் பொருளாதார நிலை சரிந்து வருகிறது எனப் பரவலாக அறியப்பட்டு வரும் சூழலில், அதை மேம்படுத்தும் விதமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அதில் ஒரு முன்னெடுப்பாக 10 பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதாவது, 4 பெரிய வங்கிகளுடன், 6 சிறிய வங்கிகள் இணைக்கப்படுகின்றன. இதன்மூலம் 10 பொதுத்துறை வங்கிகள் 4 வங்கிகளாக உருமாறுகின்றன.

Nirmala Sitharaman
Nirmala Sitharaman

அதன்படி, பஞ்சாப் நேஷனல் வங்கியுடன் ஓரியண்டல் பாங்க் ஆஃப் காமர்ஸ், யுனைடெட் பாங்க் ஆஃப் இந்தியா ஆகிய 2 வங்கிகள் இணைக்கப்படுகின்றன.

கனரா வங்கியுடன் சிண்டிகேட் வங்கி இணைக்கப்படுகிறது.

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் ஆந்திரா வங்கியும், கார்ப்பரேஷன் வங்கியும் இணைக்கப்படுகின்றன.

இந்தியன் வங்கியுடன் அலகாபாத் வங்கி இணைக்கப்படுகிறது.

ஒருபக்கம், இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து சம்பந்தப்பட்ட வங்கி ஊழியர்கள் வங்கி ஒருங்கிணைப்பிற்கு எதிராகப் போராடத் தொடங்கிவிட்டார்கள். இன்னொரு பக்கம், இந்த முடிவு சரியா... தவறா என இணையத்தில் உரையாடல்கள் தொடங்கிவிட்டன. இத்தகையச் சூழலில் இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதன் காரணம் என்னவாக இருக்குமென்று பொருளாதார நிபுணர் வ.நாகப்பனிடம் பேசினோம்.

வ.நாகப்பன்
வ.நாகப்பன்

"வங்கிகளை இப்படி இணைக்க வேண்டுமென்பது நீண்டநாள்களாகப் பேசப்பட்டு வரும் விஷயம்தான். ஒரே சாலையிலேயே ஒன்றுக்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் ஒரே சேவையைத்தான் செய்கின்றன. பெரிய வித்தியாசமென்று ஏதுமில்லை. அப்படியிருக்கிற பட்சத்தில் இவை தனித்தனியாக இருப்பதற்குப் பதில் நான்கும் ஒன்றாக இருப்பின் வலுவாகவும், தரமாகவும் இருக்கும் என நாம் எதிர்பார்க்கலாம். ஒவ்வொரு சமூகமும் தங்களுக்கென பிரத்யேகமாக வங்கிகள் வைத்திருந்த காலம் ஒன்று இருந்தது. அதேபோல, ஒவ்வோர் ஊருக்கும் அந்த மக்களுக்கென வங்கிகள் இருந்தன. அந்தக் காலத்தில் இவையெல்லாம் தேவைப்பட்டன. இப்போது காலம் மாறிவிட்டது.

சிலவருடங்களுக்கு முன்னாலேயே அவையெல்லாம் குறைக்கப்பட்டுவிட்டன. இதனால் அந்த மக்களெல்லாம் இப்போது வங்கி இல்லாமல் பாதிக்கப்படுகிறார்களா என்ன? அரசு செய்தது சரியான விஷயம்தான். இதனால், அவர்களின் செலவு குறையும்.

Money
Money

எப்படியெனில், ஒவ்வொரு வங்கிக்கும் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் என இருப்பார்கள். அவர்கள் வருடத்திற்கு நான்கு முறை சந்திப்பார்கள். இந்தச் சந்திப்பிற்காக ஒவ்வொரு போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ்க்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு கொடுக்கும். மேனஜிங் டைரக்டர், எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர், சேர்மன், இவர்களுக்கும் அரசு நிறைய செலவுகள் செய்கிறது. வங்கிகளை ஒன்றிணைப்பது வழியாக இவர்களின் எண்ணிக்கையும் குறையும். அரசின் நிர்வாகச் செலவு குறையும். போலவே, நிறைய வங்கிகள் இருக்கும்போது ஒவ்வொருவரும் தனித்தனியாக தங்களை மார்க்கெட்டிங் செய்ய வேண்டியிருக்கிறது. வங்கிகள் ஒன்றிணையும்போது அரசுக்குச் செலவாகிற விளம்பரச்செலவும் கணிசமாகக் குறையும். இது தவிர, தனியார்த் துறை வங்கிகள் கோலோச்சுகிற தற்போதைய சூழலில் தரத்திலும் வேகத்திலும் அவர்களுக்கு நிகரான ஐந்து பொதுத்துறை வங்கிகள் உருவாக வேண்டுமென்றால், அரசு வங்கிகள் ஒன்றிணைவது சரியான தீர்வாகத்தான் இருக்கும்.

ஆனால், சில விஷயங்களை அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும். வங்கிகள் குறைக்கப்பட்டாலும் செயல்பட இருக்கும் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

Modi
Modi

`என் ஊரில் உங்கள் வங்கிக் கிளையைக் கொண்டுவருகிறீர்கள்’ எனில், எங்கள் மொழி தெரிந்தவரை அங்கே வேலைக்கு வைக்க வேண்டும். கடன் கொடுத்துவிட்டு அதை முறையாக வசூலிக்க வேண்டும். கடனைக் கொடுத்துவிட்டு வசூலிப்பதில் எளிய மக்களிடம் கறாராகவும், செல்வந்தர்களிடம் அலட்சியமாகவும் இருக்கக் கூடாது. எல்லோரிடமும் தவறாமல் பணம் வசூலிக்க வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயம், பொதுத்துறை வங்கிகள் லாபம் கிடைக்கும் என்பதற்காக தங்களுக்குத் தெரியாத விஷயங்களைச் செய்வதைத் தவிர்க்கலாம். உதாரணத்திற்கு, Mutual Fund, இன்சூரன்ஸ், தங்கம் போன்றவற்றில் நிபுணத்துவமே இல்லாமல் அதில் இறங்கக்கூடாது. பணப் பரிவர்த்தனைகளில் முறையாகவும், விரைவாகவும் நடந்துகொண்டாலே போதுமானது. இவையெல்லாம் சரியாக நடக்குமென்றால் வங்கிகளை இணைத்தது சரியான முடிவுதான் என்பது என்னுடைய கருத்து" என்றார்.