Published:Updated:

மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறோம்! - எப்போது கிடைக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி!

தலைமைச் செயலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமைச் செயலகம்

ஜூலை மாதம் நிதி ஒதுக்கினாலும், அதைச் செலவிட டிசம்பர் மாதம் ஆகிவிடும் என்பதுதான் யதார்த்தம்

“2021-2022-ம் ஆண்டுக்கான எம்.எல்.ஏ தொகுதி மேம்பாட்டு நிதியை தி.மு.க அரசு இன்னும் விடுவிக்கவில்லை. அதேசமயம் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டும் நேரடியாக அமைச்சர்கள், அரசு அதிகாரிகளை அணுகி தங்கள் தொகுதிப் பணிகளுக்கான நிதியைப் பெற்றுக்கொள்கிறார்கள்.” - சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு இது. நிதி ஏன் ஒதுக்கப்படவில்லை, இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் என்னென்ன?

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுதோறும் ஒதுக்கப்படுகிறது. 2011-12 முதல் 2016-17 வரை ஆண்டுக்கு இரண்டு கோடி ரூபாயாக இருந்த இந்த நிதி, 2017-18 முதல் இரண்டரைக் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டு, 2021 முதல் மூன்று கோடி ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததும் ஜூன் - ஜூலை மாதங்களுக்குள் இந்த நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போதுவரை அது பற்றிய எந்த அறிவிப்பும் இல்லை. இதனால், ஏற்பட்டுள்ள சிக்கல்கள் பற்றி முக்கியக் கட்சிகளின் எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம் பேசினோம்...

சு.ரவி, அரக்கோணம், அ.தி.மு.க:

“அ.தி.மு.க ஆட்சியில் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்ததுமே என்னென்ன திட்டங்களுக்கு, எவ்வளவு நிதி ஒதுக்க வேண்டும் என்ற மனுவைக் கொடுக்கச் சொல்லி நிதியை ஒதுக்கிவிடுவார்கள். ஆனால், தி.மு.க ஆட்சியில் இதுவரை அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த ஆண்டுக்கான கோரிக்கைகளை எப்போது நிறைவேற்றப் போகிறோம் என்று தெரியாமல், மக்களிடம் பதில் சொல்லவும் முடியாமல் தவிக்கிறோம். நாங்களாவது எதிர்க்கட்சியினர்... பரவாயில்லை, தி.மு.க எம்.எல்.ஏ-க்களோ அரசைக் கேட்கவும் முடியாமல், மக்களுக்கு பதில் சொல்லவும் முடியாமல் திண்டாடுகிறார்கள்.”

சு.ரவி, மாலி, வானதி சீனிவாசன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி
சு.ரவி, மாலி, வானதி சீனிவாசன், செல்வப்பெருந்தகை, எஸ்.எஸ்.பாலாஜி

மாலி, கீழ்வேளூர், சி.பி.எம்

``ஆறு மாதங்கள் கடந்துவிட்டன. மக்களிடமிருந்தும் நிறைய கோரிக்கை மனுக்கள் வருகின்றன. தொகுதி மக்களும், ‘அடிப்படை வசதிகளை எப்போது செய்து கொடுக்கப்போகிறீர்கள்?’ என்று கேட்கத் தொடங்கிவிட்டார்கள். பள்ளிகள் பழைய கட்டடங்களிலேயே இயங்கிவருகின்றன. சாலைகள் மோசமாக இருக்கின்றன. நல்ல குடிநீர் கிடைக்கவில்லை. கடந்த பத்தாண்டுகளில் எதுவும் செய்யாமலேயே இருந்திருக்கிறார்கள். இவற்றையெல்லாம் சரிசெய்ய தொகுதி மேம்பாட்டு நிதி மட்டும் போதாது; கூடுதலாகத் திட்டங்களை வகுத்து நிதி ஒதுக்க வேண்டும்.”

வானதி சீனிவாசன், கோவை தெற்கு, பா.ஜ.க

“பட்ஜெட் கூட்டத்தொடரில் இது பற்றி பரபரப்பாக விவாதங்கள் நடந்தன. ‘தொகுதி மேம்பாட்டு நிதி பயன்படுத்தப்படுவதில் சில திருத்தங்களைச் செய்து, விரைவில் நிதி ஒதுக்கப்படும்’ என்று உறுதியளித்தார்கள். ஆனால், இதுவரை அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை. தி.மு.க அரசின் நிர்வாகத்திறன் போதாமையால், நாங்கள் மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறோம். எனக்கு மேலும் நெருக்கடியைக் கொடுக்கும் வகையில், என் தொகுதியில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட பல ஒப்பந்தங்களை ரத்துசெய்துவிட்டனர். தங்களுடைய கட்சியின் நலத்தை மட்டுமே யோசிக்கும் சுயநல அரசாக இருக்கிறது தி.மு.க அரசு.”

செல்வப்பெருந்தகை, ஸ்ரீபெரும்புதூர், காங்கிரஸ்

“கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் கொடுத்த வெள்ளை அறிக்கையில் தமிழகத்தின் நிதிநிலை எந்த அளவுக்கு மோசமாக இருந்தது என்பதை அனைத்து எம்.எல்.ஏ-க்களும் புரிந்துகொண்டிருப்பார்கள். கொரோனா பேரிடர் காலத்தில் நான்காயிரம் ரூபாய் கொடுத்தது, நகைக்கடன், விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்தது எனக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கிறது இந்த அரசு. இப்போதைக்கு தொகுதி மேம்பாட்டு நிதியை எதிர்பார்க்காமல், மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில் கவனம் செலுத்தலாம்.”

எஸ்.எஸ்.பாலாஜி, திருப்போரூர், வி.சி.க

“ஜூலை மாதம் நிதி ஒதுக்கினாலும், அதைச் செலவிட டிசம்பர் மாதம் ஆகிவிடும் என்பதுதான் யதார்த்தம். என்னைப் பொறுத்தவரை இதைக் காலதாமதமாகப் பார்க்கவில்லை. அதேசமயம், மூன்று கோடி ரூபாய் என்பது இன்றைய பொருளாதாரச் சூழலில் பெரிய தொகை இல்லை. எனவே, நிதியைக் கொஞ்சம் அதிகப்படுத்த வேண்டும்.”

தி.மு.க தரப்பில் எம்.எல்.ஏ-க்களைத் தொடர்புகொண்டபோது பலரும் இது பற்றிப் பேசத் தயாராக இல்லை. “பெயர் வேண்டாம்” என்ற நிபந்தனையுடன் பேசிய ஓரிரு எம்.எல்.ஏ-க்களோ, “கொரோனா பாதிப்பு, சட்டமன்றக் கூட்டத்தொடர், மழைவெள்ள பாதிப்பு என்று ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் நிற்காமல் ஓடிக்கொண்டிருக்கிறது தி.மு.க அரசு. கடந்த அ.தி.மு.க ஆட்சியாளர்களின் பொறுப்பற்ற தன்மையால், தமிழக அரசின் நிதி நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதையும் நிதியமைச்சர் வெள்ளை அறிக்கையாகவே வெளியிட்டுவிட்டார். ஆனாலும், தொகுதி மேம்பாட்டு நிதி ஒதுக்கும் நடவடிக்கைகள் வேகமடைந்துள்ளன” என்றார்கள்.

மக்களுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறுகிறோம்! - எப்போது கிடைக்கும் தொகுதி மேம்பாட்டு நிதி!

நம்மிடம் புலம்பிய தென்மாவட்ட தி.மு.க எம்.எல்.ஏ ஒருவரோ, “தினமும் என் வீட்டுல இருந்து பக்கத்து ஊருல இருக்குற என்னோட தொகுதிக்குப் போயிட்டு வர்றதுக்கே காருக்கு பெட்ரோல் செலவு மூவாயிரம் ஆயிடுது. கூட வர்றவங்களுக்கு சாப்பாடு செலவு நாலாயிரம், பார்க்க வர்றவங்களுக்கு ஐநூறு, ஆயிரம் கொடுக்க வேண்டியிருக்கு. எல்லாம் சேர்த்து தினமும் பத்தாயிரம் ரூபாயைத் தாண்டுது செலவு... தொகுதி நிதியைக் கொடுத்தாக்கூட அதை வெச்சு சமாளிச்சுடலாம்...” என்று யதார்த்தத்தை பட்டென்று போட்டு உடைத்தார்!

நிதித்துறையில் சீனியர் அதிகாரி ஒருவரிடம் பேசினோம்... “கடந்த ஜூலை மாதமே நிதியை விடுவிக்கலாம் என்று பேச்சு வந்தபோது, கொரோனா பேரிடர் செலவுகளைச் சமாளிக்கவேண்டியிருந்தது. அடுத்து, இரண்டு தவணைகளில் கொரோனா நிவாரண நிதியாக நான்காயிரம் கொடுக்க வேண்டியிருந்தது. மாநில அரசிடம் போதுமான நிதி இல்லாததாலேயே, தொகுதி மேம்பாட்டு நிதியை ஒதுக்க முடியவில்லை. இவ்வளவு சிரமங்களுக்கு இடையிலும், கடந்த வாரம் தொகுதி மேம்பாடு நிதி ஒதுக்கீட்டுக்கான கோப்புகள் தயாராகி எங்களுக்கு வந்திருக்கின்றன. ஊரக வளர்ச்சித்துறையில் சில அறிக்கைகள் பெறப்பட்டு, விரைவில் நிதி ஒதுக்கப்படும்” என்றார்கள்.

“தொகுதி மக்கள் வையுறாங்க... சீக்கிரம் காசு கொடு!” என்று மட்டும்தான் கேட்கவில்லை எம்.எல்.ஏ-க்கள்!