Published:Updated:

`பள்ளி, கல்லூரி பாடத்திட்டத்தில் அரசியலமைப்பு!’- கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பு

கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாகப் பாலியல் கல்வி ஆகியன குறித்தும் பினராயி விஜயன் பேசியுள்ளார்.

பினராயி விஜயன்
பினராயி விஜயன்

கேரளா, பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்கும் அசெம்ப்ளிகளின் ஒரு பகுதியாக அரசியலமைப்பின் முன்னுரையை வாசிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த அம்மாநில அரசு முன்மொழிந்துள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கேரள முதல்வர் பினராயி விஜயன்
கேரள முதல்வர் பினராயி விஜயன்

கோழிக்கோட்டில் நடைபெற்ற மாணவர்களின் மாநாட்டில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ``அரசியலமைப்பைப் பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக, பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலை பிரார்த்தனை கூட்டங்களில் நடைபெறும்போது, அதில் ஒரு பகுதியாக அரசியலமைப்பின் முன்னுரை வாசிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான முயற்சிகளை மேற்கொள்ள மாநில அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்” என்று கூறியுள்ளார்.

அரசியலமைப்பு மீதான விவாதங்கள் சமூகத்தில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேலும், அரசியலமைப்பு தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்போது பாடத்திட்டத்தில் தவிர்க்க முடியாத ஒரு பகுதியாக அரசியலமைப்பு இருக்க வேண்டும் என்ற கல்லூரி மாணவர்கள் சங்கத் தலைவர்களின் கோரிக்கையை அடுத்து கேரள அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

`ஒற்றுமையே இந்த கணத்தின் தேவை!' - 11 மாநில முதல்வர்களுக்குக் கடிதம் எழுதிய பினராயி விஜயன் #CAA

கல்லூரி மாணவர் சங்கத் தேர்தல்களில் பெண்களுக்கு 50 சதவிகிதம் இட ஒதுக்கீடு, பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பாலியல் கல்வி, கல்லூரி வளாகத்துக்குள் நடைபெறும் அரசியல் தொடர்பாக சட்டங்களைட் தயாரித்தல் போன்ற திட்டங்கள் குறித்து மாணவர்களுடன் முதல்வர் நடத்திய ஆலோசனையில் விவாதிக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எந்தவித தடையுமின்றி பல்கலைக்கழக நூலகங்களை 24 மணி நேரமும் திறந்து வைப்பது குறித்தும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஜே.என்.யூ மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்தும் ட்விட்டர் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். அதில், ``ஜே.என்.யூ மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல் சகிப்பின்மையை வெளிப்படுத்தும் பயங்கரமான காட்சி. தாக்குதலின் அளவு, திட்டமிடப்பட்டதை வெளிப்படுத்துகிறது. சங் பரிவார் அமைப்புகள் கொடூரமான தாக்குதல்கள் மூலம் பல்கலைக்கழகங்களை அமைதியாக்க முயல்வதைக் கைவிட வேண்டும். மாணவர்கள் அனைவருக்காகவும் பேசுகிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

`எனது மகளைப் பின்வாங்கச் சொல்லமாட்டேன்!’ - ஜே.என்.யு  மாணவி ஆய்ஷி கோஷின் தாய்