ஒவ்வோர் ஆண்டும் குடியரசு தின விழா அணிவகுப்பு டெல்லியின் இந்தியா கேட்டிலிருந்து ஜனாதிபதி மாளிகை வரையிலான ராஜபாதையில் நடப்பது வழக்கம். தற்போது சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின்கீழ் இந்த ராஜபாதை `கர்த்தவ்ய பாதை’ எனப் பெயர் மாற்றப்பட்டு மறு சீரமைப்பு செய்யப்பட்டிருக்கிறது. `கர்த்தவ்ய பாதை' என்றால் `கடமைப் பாதை’ என அர்த்தம். 2 கி.மீ நீளமுள்ள பாதையில் இந்த ஆண்டு குடியரசு தின விழா அணிவகுப்பு நடக்கவிருக்கிறது. இந்த அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பதற்காக ஏராளமான முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் வருவது வழக்கம்.
இந்த ஆண்டு அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்வையிட `கர்த்தவ்ய பாதை' கட்டுமானப் பணியில் ஈடுபட்ட 850 தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும்படி அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி உத்தரவிட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்படி, இந்தத் தொழிலாளர்களுக்கு முதல் வரிசையில் இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இவர்கள் மட்டுமல்லாமல் இந்தியா கேட் பகுதியில் பழம் உள்ளிட்ட தின்பண்டங்களை விற்பனை செய்யும் சிறு வியாபாரிகளுக்கும் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பார்வையிட முன்னுரிமை அளிக்கப்படும் என தகவல் வெளியாகியிருக்கிறது.

பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தைத் திறந்து வைத்தபோது, அங்கு கட்டுமானப் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களது பாதங்களைக் கழுவியது குறிப்பிடத்தக்கது.