Published:Updated:

புதுச்சேரி: `சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டி!’ - தொல்.திருமாவளவன்

திருமாவளவன் எம்.பி
திருமாவளவன் எம்.பி

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எம்.பி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எல்லையம்மன் கோயில் வீதியிலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். சுமார் அரை மணி நேரம் நிகழ்ந்த அந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், ``2021 புதிய ஆண்டில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை நேரில் சந்தித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்தோம். புதுச்சேரி மாநிலத்தில் பட்டியலின மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை கட்டணம் இல்லாமல் கல்வி கற்க தற்போது ஆணை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

முதல்வர் நாராயணசாமியுடன் திருமாவளவன்
முதல்வர் நாராயணசாமியுடன் திருமாவளவன்

அமைச்சரவையில் இதற்காகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இன்று அது வெற்றிகரமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். இது நீண்டநாள் கோரிக்கை. இந்தியாவிலேயே கல்விக் கட்டணம் இல்லாமல் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மாணவர்கள் கல்வி கற்பதற்காக நல்லதொரு அரசாணையைப் பிறப்பித்திருக்கிறார் முதல்வர் நாராயணசாமி. இந்தியாவுக்கே வழிகாட்டியாக, புதுச்சேரி சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதேபோல இந்தத் திட்டத்தை ஓ.பி.சி மாணவர்களுக்காகவும் விரிவுபடுத்த வேண்டுமென்று கோரிக்கைவைத்திருக்கிறோம். முதல்வரும் அதைப் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்திருக்கிறார். 2020-ம் ஆண்டு அனைவருக்கும் துக்கம், துயரம் நிறைந்த ஆண்டாக மாறி மனித உலகத்தையே புரட்டிப்போட்டுவிட்டது.

2021-ம் ஆண்டு அப்படியில்லாமல் மனிதகுலம் நிம்மதியாக வாழ்வதற்கு ஏற்றதாக அமைய வேண்டும். அதேபோல சனாதன சக்திகளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கால் ஊன்ற விடாமல் பாதுகாக்க புத்தாண்டில் உறுதி ஏற்போம். இந்த ஆண்டு அதற்கான ஆண்டாக மலரும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க மீதும், அதன் கூட்டணிக் கட்சிகள் மீதும் குற்றம் சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை. அதனால்தான் தி.மு.க வாரிசு அரசியல் செய்வதாக அ.தி.மு.க-வினர் தொடர்ச்சியாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனிச் சின்னத்தில் போட்டியிடும்" எனத் தெரிவித்தார்.

Vikatan

அவரைத் தொடர்ந்து பேசிய முதல்வர் நாராயணசாமி, ``புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை இலவசமாகப் படிப்பதற்கான திட்டத்தை எங்களது காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தோம். அதற்காக 2018, 2019, 2020 எனத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம். அந்தக் கோப்புக்கு ஆளுநர் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தார். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அதற்காக அரசு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கும்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு