Published:Updated:

குட்கா வேண்டுமா முதல்வரே?

குட்கா வேண்டுமா முதல்வரே?
பிரீமியம் ஸ்டோரி
குட்கா வேண்டுமா முதல்வரே?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மே 8, 2013-ல் ஓர் அறிவிப்பைச் சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

குட்கா வேண்டுமா முதல்வரே?

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மே 8, 2013-ல் ஓர் அறிவிப்பைச் சட்டமன்றத்தில் வெளியிட்டார்.

Published:Updated:
குட்கா வேண்டுமா முதல்வரே?
பிரீமியம் ஸ்டோரி
குட்கா வேண்டுமா முதல்வரே?

“நான் முகேஷ்... ஒரு வருஷம் குட்கா தின்னேன்... இப்போ வாய்ல ஆபரேஷன்...” தியேட்டர் மூடியிருக்கும் சூழலில்கூட இந்தக் குரலை யாரும் மறந்திருக்க முடியாது. ‘எடப்பாடியார் சாதனைகள்’ பற்றிய விளம்பரப் படத்துக்குப் பிறகு, தியேட்டரில் ஒளிபரப்பப்படும் அந்தப் படத்தின் இறுதியில், “சோகம் என்னன்னா... முகேஷை எங்களால காப்பாத்த முடியலை. குட்கா, பான் மசாலா போன்றவை உயிரைப் பறிக்கும்!” என்ற குரல் பின்னணியில் ஒலிக்கும்.

குட்கா வேண்டுமா முதல்வரே?

குட்கா மட்டுமல்ல, அதிகாரத்தில் இருப்பவர்களின் அலட்சியமும்கூட மக்களின் உயிரைப் பறிக்கும். குறிப்பாக, குட்கா விஷயத்தில்!

பல்வேறு நச்சுத்தன்மைகொண்ட குட்கா உள்ளிட்ட ‘புகையிலைப் பொருள்களுக்குத் தடை’ என்பதைப் பெயரளவில் மட்டுமே வைத்திருக்கும் ‘எடப்பாடி’ அரசு, ‘குட்காவை விரட்டுவதுதான் என்னுடைய லட்சியம்’ எனச் சட்டமன்றத்தில் சூளுரைத்த ஜெயலலிதாவின் வார்த்தைகளையே பொட்டலத்தில் மடித்து விற்றுக்கொண்டிருக்கிறது.

தேசத்தின் சுதந்திரத்தைக் கொண்டாடும் ஆகஸ்ட் 15-ம் தேதி, அப்படி விடியும் எனக் காவல்துறை உயரதிகாரிகள் யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். கடலூர் மாவட்டம், கே.என்.பேட்டை திருப்பதி நகரில், பெட்டி பெட்டியாக ஒரு வீட்டில் குட்கா பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக போலீஸுக்குத் தகவல் கிடைத்து சோதனையிட்டனர். வீடு முழுவதும் கால்வைக்கக்கூட இடமில்லாமல் எட்டு டன் குட்கா குவிந்திருந்ததைப் பார்த்து போலீஸ் அதிகாரிகளே மிரண்டுபோனார்கள். ஊரடங்கு அமலிலிருக்கும் காலத்தில், இவ்வளவு குட்கா எப்படிக் கொண்டுவரப்பட்டது... கடத்தல்காரர்களின் நெட்வொர்க் எப்படிச் செயல்படுகிறது? தேடிப்போனால், மலைக்கவைக்கும் மர்மங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் விரிகின்றன.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மே 8, 2013-ல் ஓர் அறிவிப்பைச் சட்டமன்றத்தில் வெளியிட்டார். அதில், `புகையிலையால் ஏற்படும் பல்வேறு நோய்களைத் தடுக்கும் வண்ணம் குட்கா, பான் மசாலா போன்ற பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஓர் ஆரோக்கியமான சமுதாயம் உருவாக, என்னால் அறிவிக்கப்பட்ட இத்திட்டம் வழிவகை செய்யும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார். அந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் குட்கா, பான்பராக், மாவா போன்ற பொருள்களுக்கு விற்பனை மற்றும் சேமிப்புக்கான தடை அமலுக்கு வந்தது. ஆனால், ஏழு ஆண்டுகள் உருண்டுவிட்ட நிலையிலும் கள்ளச்சந்தையில் டன் கணக்கிலிருந்து சிங்கிள் பாக்கெட் வரை குட்கா விற்பனை இன்றளவும் படு ஜோராக நடந்துகொண்டுதானிருக்கிறது.

குட்கா தொடர்பான வழக்கில், சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் டி.ஜி.பி-க்கள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் தொடங்கி பல போலீஸ் அதிகாரிகள், உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சி.பி.ஐ விசாரணை வளையத்தில் இருக்கிறார்கள். குறிப்பாக, மாநிலத்தின் சுகாதாரத்தைப் பேணிக்காக்க வேண்டிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரே இந்த வழக்கில் சிக்கியிருப்பது நாடு முழுவதுமே அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. `சர்ச்சையில் சிக்கிய பிறகும் இன்றுவரை அவரே அமைச்சர் பதவியில் நீடிப்பதால், இந்த விவகாரத்தில் எப்படி நீதி கிடைக்கும்?’ என்கிற கேள்வியும் மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது. இவ்வளவு சர்ச்சைகள் இருந்தாலும்கூட, சி.பி.ஐ விசாரணையில் சுறுசுறுப்பு இல்லை. விசாரணை நடக்கிறது... நடக்கிறது... நடந்துகொண்டே இருக்கிறது!

‘குட்கா தடையின்றி விற்கப்படுவதாக’ குட்கா பொட்டலங்களோடு சட்டமன்றத்தில் போராட்டம் நடத்திய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 எம்.எல்.ஏ.க்கள் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டுவரப்பட்டுள்ளது. `உரிமை மீறல் நோட்டீஸை ரத்துசெய்ய வேண்டும்’ என ஸ்டாலின் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மிகவும் சென்சிட்டிவ்வான இந்த விவகாரத்தில், ஆளும்தரப்பின் குடுமி சி.பி.ஐ வசமிருக்கும் நிலையில், இன்றளவும் குட்கா எந்தத் தடையும் இல்லாமல் விற்கப்படுவதும் மலை மலையாகக் கைப்பற்றப்படுவதும் அதிர்ச்சியளிக் கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் கடந்த சில மாதங்களில் மட்டும் கைப்பற்றப்பட்ட குட்கா மற்றும் அதன் பின்புலன்களை ஆராய்ந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கர்நாடகா டு தமிழ்நாடு

கர்நாடகாவிலிருந்துதான் பெருமளவு குட்கா கடத்திவரப்படுகிறது. குறிப்பாக, பெங்களூரு, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சத்தியமங்கலம் வழியாக இது கடத்தப்படுகிறது. கடந்த ஜூலை மாதம், 3-ம் தேதி பெங்களூருவிலிருந்து முட்டைக்கோஸ் ஏற்றி வந்த வாகனத்தில், மூட்டை மூட்டையாக சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள புகையிலைப் பொருள்கள் இருந்தன. பண்ணாரி சோதனைச் சாவடியில் போலீஸார் அவற்றை மடக்கிப் பிடித்தனர். இப்படி ஈரோட்டுக்குக் கொண்டுவரப்படும் சரக்குகள் கொங்காலம்மன் கோயில் கடைவீதிகளில் பதுக்கப்பட்டு கனஜோராக விற்கப்படுகின்றன. போலீஸாருக்கு விஷயம் தெரிந்தும், எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

குட்கா
குட்கா

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ம் தேதி அப்துல்லாபுரம் பகுதியில் ‘குட்கா’ குடோனே சிக்கியது. இது தொடர்பாக, அ.தி.மு.க முன்னாள் மாவட்ட கவுன்சிலரான சக்திவேல் உட்பட எட்டுப் பேர் கைதுசெய்யப்பட்டனர். அதன் பின்னரும் குட்கா கடத்தல் நின்றபாடில்லை. கடந்த ஜூலை 1-ம் தேதி, ஆம்பூர் பாங்கி ஷாப் பகுதியிலுள்ள மளிகைக்கடையில் பதுக்கப்பட்டிருந்த குட்கா பறிமுதல் செய்யப்பட்டு, மூவர் கைதானார்கள்.

சில மாதங்களுக்கு முன்னர் தற்காலிகமாக ரயில் போக்குவரத்து இருந்தது. அப்போது ரயில் டிக்கெட் எடுத்திருந்தும் இ-பாஸ் இல்லாததால், சில பயணிகளை ரயில்வே நிர்வாகம் அனுமதிக்கவில்லை. இது திருச்சி, விழுப்புரம் ரயில்வே நிலையங்களில் பிரச்னையாக வெடித்தது. இவ்வளவு கெடுபிடியாகச் செயல்படும் ரயில்வே அதிகாரிகளின் கண்காணிப்பிலேயே மண்ணைத் தூவிவிட்டு குட்காவைக் கடத்துகின்றனர். ஜூலை 7-ம் தேதி அதிகாலை, திருப்பத்தூருக்கு ரயிலில் கடத்திவரப்பட்ட இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா மூட்டைகள் பிடிபட்டதும் இந்த விஷயம் அம்பலமானது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மலைக்கவைத்த நான்கு டன்

கேரளாவிலிருந்து தென்காசிக்கு குட்கா பொருள்களை காய்கறி வாகனத்தில் ஏற்றி வருகின்றனர். ஆலங்குளம் அருகேயுள்ள அத்தியூத்து கிராமத்தில் ஓய்வுபெற்ற காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஜெயராஜ் என்பவருக்குச் சொந்தமாகத் தோட்டமும் கோழிப்பண்ணையும் உள்ளன. அங்கு குட்கா பதுக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் சப்ளை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. நான்கு டன் அளவுக்கு குட்கா, புகையிலைப் பொருள்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து போலீஸாரே விக்கித்துப்போனார்கள். `அதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய்’ என்கின்றனர். அந்தப் பண்ணையை வாடகைக்கு எடுத்திருந்த பிரகாஷ் படேல் என்பவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தவிர, கடையநல்லூர் பகுதியிலுள்ள மாவடிக்கால் என்ற இடத்திலும், குடோனை வாடகைக்கு எடுத்து பிரகாஷ் படேல், குட்கா பொட்டலங்களைப் பதுக்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

குட்கா வேண்டுமா முதல்வரே?

குளிருக்கு இதமாக குட்கா

நீலகிரி மாவட்டத்தில், குட்கா பொட்டலத்தின் விலையை எக்குத்தப்பாக உயர்த்திவிட்டனர். கர்நாடகாவின் மைசூரிலிருந்து சரக்கு வாகனங்களில் கொண்டுவரப்படும் குட்கா பாக்கெட்டுகள், தலா 60 முதல் 80 ரூபாய் வரை விற்கப்படு கின்றன. ‘செய்வது திருட்டுத்தனம்... அதிலும் கொள்ளையா?’ என குட்கா பயன்படுத்து பவர்கள் நொந்துகொள்கிறார்கள். திருச்சியில் ஒரு பாக்கெட் 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. “ஒவ்வொரு செக் போஸ்ட்லயும் கட்டிங் கொடுக்கணும். லோக்கல்ல கொடுக்கணும். விலை ஏத்துனாத்தானே சமாளிக்க முடியும்?” எனக் காரணத்தை அடுக்கும் வியாபாரிகளின் காட்டில் பணமழைதான். திருச்சியில் மட்டும் கடந்த ஜூலை முதல் தற்போது வரை 163 குட்கா வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. 320 பேர் கைதுசெய்யப் பட்டுள்ளனர். ஒரு மாதத்தில் மட்டும் மூன்று டன்னுக்கு மேல் குட்கா பிடிபட்டிருப்பது அடுத்த அதிர்ச்சி.

குட்கா வேண்டுமா முதல்வரே?

கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழக-கேரள எல்லையான களியக்காவிளையில் ஐந்து காய்கறிக் கடைகளில் பதுக்கிவைத்திருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான குட்கா மூட்டைகள் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி, போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் கடை உரிமையாளர்களான அசப், ஷாபி, அஷ்ரப், ரசாக், ரெஜித் ஆகிய ஐந்து பேரை போலீஸார் கைதுசெய்தனர். ‘கொரோனா ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் பூட்டப்பட்டிருந்ததால் குட்காவுக்கு அதிக தேவை இருப்பதாகவும், அத்தியாவசியப் பொருளான காய்கறிகளைக் கொண்டு செல்லும் டெம்போக் களில் கேரளாவுக்கும் குட்கா கடத்தியதாகவும்’ கைதுசெய்யப்பட்ட கடைக்காரர்கள் தெரிவித்தனர். பல ஆண்டுகளாகக் காய்கறி மூட்டைகளில் இவர்களுக்கு குட்கா வந்து சேர்ந்தது விசாரணையில் தெரியவந்தது. குட்காவைப் பறிமுதல் செய்ததுடன் சரி, அது எங்கிருந்து சப்ளை செய்யப்படுகிறது என்பதைக் கண்டுபிடித்து மேல் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முன்வரவில்லை. நடவடிக்கைகளைப் பொறுத்தவரை தமிழகம் முழுக்கவே இந்த நிலைதான். எது அல்லது யார் அவர்களைத் தடுப்பது?

மருத்துவத் தேவைக்காக, உறவினர்களின் இறப்பு, திருமணம் போன்ற அவசரத்துக்காக இ-பாஸ் வாங்கிச் செல்பவர்களைக்கூட செக்போஸ்ட்டுக்கு செக்போஸ்ட் நிறுத்திச் சோதனையிடும் போலீஸார், தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி குட்கா சப்ளை செய்யப்படுவதைத் தடுக்காதது ஏன்? பெங்களூருவிலிருந்து குட்கா எப்படி வருகிறது என்பது அவர்களுக்குத் தெரியாதா?

முதல்வர் உட்பட அமைச்சர்களின் வீடுகள் அமைந்திருக்கும் கிரீன்வேஸ் சாலையிலிருந்து கோட்டை நோக்கிப் பயணிக்கும்போது, இடதுபுறம் திரும்பினால் மந்தைவெளி சாலை; வலதுபுறம் திரும்பினால் அடையாறு சாலை. இவ்விரண்டு சாலைகளிலும் ஏறக்குறைய பத்து கடைகளில் குட்கா விற்கப்படுவதைக் காண முடிகிறது. முதல்வர் வீடு அமைந்திருக்கும் ஏரியாவிலேயே இந்த லட்சணம் என்றால், மற்ற பகுதிகளின் கதி? இதேநிலை தொடர்ந்தால், உள்துறையை வைத்திருக்கும் எடப்பாடி பழனிசாமியிடமே யாராவது, `குட்கா வேண்டுமா முதல்வரே?’ என்று கேட்டாலும் ஆச்சர்யம் இல்லை.

குட்கா வேண்டுமா முதல்வரே?

போலீஸ் தரப்பில் அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டத்தில், கடந்த ஜூலை முதல் தற்போது வரை

1.25 டன் எடையுள்ள 2,34,678 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 25 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மாவட்ட எஸ்.பி ஜெயகுமார், “போதைப் பொருள் கடத்தல் போன்ற நடவடிக்கை களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்படுவார்கள்” என எச்சரித்துள்ளார்.

அரசாங்கத்தின் தடை என்பது, தடை செய்யப்பட்ட பொருளின் விலையை ஏற்றி விற்பதற்குத்தான் பெரும்பாலும் பயன்படுகிறது. நடவடிக்கை என்பது, குற்றம் தொடங்குகிற முதல் ‘புள்ளி’யை விட்டுவிட்டு அதில் ஈடுபடுகிற கடைசி ‘எளிய’ குற்றவாளியைக் கைதுசெய்வதாகத் தான் இருக்கிறது.

மன்னராட்சிக் காலங்களில், மன்னர்கள் மாறுவேடத்தில் நகர்வலம் போவது பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். அதுபோல, கொரோனா தடுப்புப் பணிகளை ஆய்வு செய்வதற்காக இப்போது மாவட்டம் மாவட்டமாகப் பயணிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓர் இரவாவது (பகலில் போனாலும் சரி!) மாறுவேடத்தில் நகரத்தைச் சுற்றினால், ஏராளமான குட்கா பொட்டலங்களை வாங்கலாம். இந்த விவகாரத்தில் தனிப்படை அமைத்து, குட்கா விற்பனையை நசுக்காதது அந்தத் துறைக்குப் பொறுப்பான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் கையாலாகாத்தனம்தான்!

- ஜூ.வி. டீம்

குட்கா டைரி

ரடங்குக்கு முன்பு வரை ஆந்திராவிலிருந்து தடா, திருத்தணி வழியாகவும், பெங்களூருவிலிருந்தும் வாகனங்கள் மூலமாக குட்கா தமிழகத்துக்குள் கடத்திவரப்பட்டது. அதேநேரம் ஆந்திரா வழியாக வரும் ரயில் மூலமும் குட்காவைக் கொண்டுவந்தனர். இப்போது இ-பாஸ் பிரச்னை இருப்பதால் பெரும்பாலும் காய்கனி லாரி, வேன்களில்தான் குட்கா கடத்தப்படுகிறது. சென்னைக்குக் கடத்தி வரப்படும் குட்கா மூட்டைகளைச் சேமித்து வைப்பதற்கென்றே செங்குன்றம், மாதவரம், புழல் ஏரியாக்களில் ஒரு டஜன் குடோன்கள் இன்றளவும் செயல்படுகின்றன. ஜூலை 2016-ல் இப்படிப்பட்ட ஒரு குடோனில் வருமானவரித்துறை புகுந்து வந்ததில் ஒரு ‘ரெட் டைரி’ சிக்கியது. அதில் கிடைத்த தகவலில்தான், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முதற்கொண்டு பலரின் பெயர்கள் குட்கா வழக்கில் வெளிச்சத்துக்கு வந்தன.

குடோனுக்குக் கொண்டுவரப்பட்ட குட்கா பொட்டலங்களை 80 பீஸ் கொண்ட ஒரு பெரிய பாக்கெட்டாகப் பிரிப்பார்கள். டீலர்கள் மூலமாகப் பெட்டிக்கடைகளுக்கு இவை கொண்டு செல்லப்படும். ஊரடங்குக்கு முன்பு வரையில் ஒரு பீஸ் குட்கா பாக்கெட்டின் விலை 15 ரூபாயாக இருந்தது. இப்போது, சராசரியாக 50-60 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் விற்பனையாளர், டீலர்கள், கடைக்காரர்கள், போலீஸார், அரசியல்வாதிகள் என அனைவருக்கும் பங்கு பிரிக்கப்படுவதால் விற்பனைத் தொடர்பில் எந்தச் சிக்கலும் எழுவதில்லை. காவல்துறை ரெக்கார்டுபடியே, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏறத்தாழ 13 டன் குட்காவைப் பறிமுதல் செய்துள்ளனர். ஒரு பீஸ் குட்கா பாக்கெட்டில் 20 கிராம் குட்கா இருக்கும். பறிமுதல் செய்துள்ள 13 டன் குட்காவை பாக்கெட்டுகளாக மாற்றினால், 6.5 லட்சம் பாக்கெட்டுகள் கிடைக்கும். ஒரு பாக்கெட் குறைந்தது 50 ரூபாய் என வைத்துக்கொண்டால், இதன் சந்தை மதிப்பு மட்டும் 3.25 கோடி ரூபாய். பிடிபட்டதே இந்த அளவு என்றால், பிடிபடாமல் சந்தையில் சுற்றும் ‘சரக்கின்’ மதிப்பு எவ்வளவு இருக்கும்... மலைப்பாக இருக்கிறது!

புகையிலையோடு பாக்கு, சுண்ணாம்பு, கல்மெழுகு, காசிக்கட்டி போன்ற பொருள்களைக் கலந்து குட்கா தயாரிக்கப் படுகிறது. குட்காவை ஒருவர் தொடர்ந்து உட்கொள்வதால் வாய், நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்கள் தாக்குகின்றன. இதைக் கருத்தில்கொண்டுதான் அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மணிப்பூர், நாகலாந்து, யூனியன் பிரதேசமான சண்டிகரைத் தவிர, இந்தியாவிலுள்ள மற்ற அனைத்து மாநிலங்களிலும் குட்காவுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் நிக்கோட்டின் கலக்காத குட்காவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ந்தியாவில் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமானோர் புகையிலையைப் பயன்படுத்துவதால் உயிரிழக்கிறார்கள். இந்தியாவில் ஏற்படும் மொத்த மரணங்களில், 9.5 சதவிகித மரணங்கள் புகையிலைப் பயன்பாட்டால் ஏற்படுகின்றன.

கடந்த சில மாதங்களில் சிக்கிய குட்கா...

ட்டுக்கோட்டை மணிக்கூண்டுப் பகுதியில் பெட்டிக்கடை நடத்திவரும் வட மாநில வியாபாரியிடமிருந்து 100 கிலோ குட்கா பறிமுதல்.

 • நெல்லை பெருமாள்புரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பொதிகை நகர்ப் பகுதியில், சுமார் 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,400 கிலோ குட்கா பறிமுதல். நெல்லை டவுன், பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மொத்த வியாபாரிகள் சிலர் குட்கா பதுக்கிவைத்துள்ள தகவல் கிடைத்தும், காவல்துறை ஏனோ கண்டுகொள்ளாமல் இருக்கிறது.

 • கோவை, கவுண்டம்பாளையம் அருகே ஒரு வீட்டில் 400 கிலோ குட்கா பொருள்கள் பறிமுதல்.

 • புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோபாலப்பட்டினத்தில் சபுயுல்லா என்பவரிடமிருந்து 30,000 ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்.

 • சேலம் மாவட்டம், ஓமலூர் கோட்டைக்கவுண்டன்பட்டி சுங்கச் சாவடியில் பெங்களூருவிலிருந்து கடத்திவரப்பட்ட 17 மூட்டை குட்கா பறிமுதல்.

 • திருச்செங்கோடு, குமாரபாளையம் அருகே மேட்டுக்கடை பகுதியிலுள்ள ஒரு கிடங்கிலிருந்து 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 28 பண்டல் பான்பராக், குட்கா பறிமுதல்.

 • கிருஷ்ணகிரி-ஓசூர் நெடுஞ்சாலையில், 65 அட்டைப் பெட்டிகளில் குட்கா பறிமுதல்.

 • விழுப்புரம்-மாம்பழப்பட்டு சாலையில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள குட்கா பறிமுதல்.

 • திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகா, ரெங்கநாதபுரத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்.

 • அரியலூர் மாவட்டத்தில் குட்கா விற்பனை தொடர்பாக 86 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 10 கிலோ குட்கா பறிமுதல்.

 • வேலூரில், பெங்களூருவிலிருந்து கடத்திவரப்பட்ட ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான போதைப் பாக்குகள் பறிமுதல்.

  சாட்டையைச் சுழற்றுவாரா மகேஷ்குமார்?

‘சென்னை மாநகரில் குட்கா, கஞ்சா விற்பனைக்கு உதவி ஆணையர்கள் மற்றும் முன்னாள் போலீஸ் உயரதிகாரிகள் சிலர்தான் உடந்தையாக இருக்கிறார்கள்’ என்கிற தகவல் புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலுக்குச் சென்றது. இதையடுத்து, பரபரவென்று ரெய்டுகள் தொடங்கின. ஆகஸ்ட் 4-ம் தேதி நீலாங்கரையில் 106 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 5-ம் தேதி ஆர்.கே.நகர், அரும்பாக்கம் ஏரியாக்களில் இரண்டரை லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 6-ம் தேதி கிண்டியில் 50 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இப்படி சென்னையில் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 2,200 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ‘போலீஸ் மதிப்பில்’ இது 22 லட்சம் ரூபாய் என்கிறார்கள். ஆனாலும், முதல் ஒரு வாரம் கனஜோராக நடந்த இந்த ரெய்டுகள் இப்போது மந்தமாகிவிட்டன. ‘கஞ்சா ரெய்டு நடத்துகிறோம்’ எனக் காரணம் காட்டி, குட்கா விற்பனையை காவல் அதிகாரிகள் தடுப்பதில்லை. கமிஷனர் சாட்டை எடுக்க வேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism