Published:Updated:

`சூப்பர் ஹிட் க்ளப்... பவர் சென்டர் பிரசாந்த் கிஷோர்!' -ஆர்.எஸ்.பாரதி போட்ட ஒப்பந்தத்தில் என்ன இருக்கிறது?

பிரசாந்த் கிஷோர்
பிரசாந்த் கிஷோர்

கடந்த 20 நாள்களுக்கு முன்பு திடீரென சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அழைத்தார் ஸ்டாலின், ` ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தப் பணிகளை முழுமையாகப் பார்த்துக் கையொப்பமிடுங்கள்' எனக் கூறிவிட்டார்.

`தேர்தல் வித்தகர்' பிரசாந்த் கிஷோருடன் ஒப்பந்தம் போட்டுவிட்டது தி.மு.க. ` பொதுச் செயலாளர் அன்பழகன் உடல்நலிவுற்று இருப்பதால், சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை ஒப்பந்தத்தில் கையொப்பமிட வைத்தார் ஸ்டாலின். இனி தலைவரின் அரசியல் நிலைப்பாடுகளை ஐபேக் நிறுவனமே முடிவு செய்ய இருக்கிறது' என்கின்றனர் அறிவாலய வட்டாரத்தில்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

சட்டமன்றத் தேர்தல் 2016 காலகட்டத்தில் தி.மு.க-வுக்குத் தேர்தல் வேலை செய்யும் நோக்கத்தில் தமிழகத்தில் கால்பதித்தது பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனம். அந்தக் காலகட்டத்தில் தி.மு.க தலைவரைச் சந்திக்க முடியாமல் போனதால், ஐபேக்கின் நோக்கம் நிறைவேறவில்லை. இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சிக்காகத் தேர்தல் வேலை பார்த்தனர். ஒருகட்டத்தில், ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டார் கமல் ஹாசன்.

இதற்குக் காரணமாக ஒரு விஷயத்தையும் முன்வைத்தார்கள் ம.நீ.ம நிர்வாகிகள். ` அவர்கள் எங்களுக்கு உழைத்துக்கொண்டே வேறு சிலருடனும் பேசிக்கொண்டிருந்தார்கள்' எனக் குறிப்பிட்டனர். இதே காலகட்டத்தில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் சில அடிப்படை வேலைகளைச் செய்தது ஐபேக் நிறுவனம். ஒருகட்டத்தில், எந்த வேலைகளும் இல்லாமல் போனதால் தி.மு.க தரப்பை அணுகினார் பிரசாந்த் கிஷோர். இந்தச் சந்திப்பின் பலனாக, தி.மு.க-வுடன் ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கிறது.

`குற்றச்சாட்டு, மிரட்டல், இரண்டாவது பவர் சென்டர், ஸ்டாலினுக்குத் தெரியுமா?!’ 
- என்ன நடக்கிறது ஐபேக்கில்?

`` பொதுவாக, கழகத்தின் சார்பில் இதுபோன்ற ஒப்பந்தங்களை முன்னெடுக்கும்போது பொதுச் செயலாளர் முன்னிலையில் மேற்கொள்வது வழக்கம். பேராசிரியர் அன்பழகன் தற்போது உடல்நலக் குறைவால் ஓய்வில் இருக்கிறார். எனவே, யார் முன்னிலையில் ஒப்பந்தம் கையொப்பமாகப் போகிறது என சீனியர்கள் பலரும் எதிர்பார்த்தனர். கடந்த 20 நாள்களுக்கு முன்பு திடீரென சட்டத்துறைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியை அழைத்தார் ஸ்டாலின், ` ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தப் பணிகளை முழுமையாகப் பார்த்துக் கையொப்பமிடுங்கள்' எனக் கூறிவிட்டார். இதையடுத்து, ஐபேக் நிறுவனத்தின் பிரதிநிதிகளுடன் அமர்ந்து பேசி ஒப்பந்தத்தை இறுதி செய்தார் ஆர்.எஸ்.பாரதி'' என விவரித்த தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர்,

ஆர்.எஸ்.பாரதி
ஆர்.எஸ்.பாரதி

``ஐபேக் ஒப்பந்தம் குறித்துப் பேட்டியளித்த பழ.கருப்பையா பெரும் தொகைக்கு ஒப்பந்தம் கையொப்பமாகியிருக்கிறது எனக் குறிப்பிட்டார். உண்மை அதுவல்ல, ஒரு சினிமா படம் சூப்பர் ஹிட் ஆனால், `அந்த க்ளப்’பில் சேர்ந்துவிட்டது என ஒரு தொகையைக் குறிப்பிடுவார்கள். அந்த அளவுக்கான தொகைதான் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பணிகளை எல்லாம் மிக ரகசியமாக வைத்துள்ளனர்.

ஐபேக் ஒப்பந்தத்தில், ` தேர்தல் வேலைகளை முழுமையாக வழிநடத்த வேண்டும், தலைவரின் பிரசார முறைகள், கட்சியை வழிநடத்துவது, தலைவரின் அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொரு கட்டத்திலும் கட்சியின் நிலைப்பாடு' போன்ற அனைத்தையும் இனி ஐபேக் நிறுவனமே மேற்கொள்ள இருக்கிறது. இதைக் கவனித்த கழக நிர்வாகிகள், `இந்தியை எதிர்த்து அண்ணா கட்சியை வளர்த்தார். இப்போது ஓர் இந்திக்காரரின் பின்னால் கழகம் போகிறது' எனக் கமென்ட் அடித்தனர். இனி கழகத்தில் முக்கிய பவர் சென்டராக பிரசாந்த் கிஷோர் இருப்பார்" என்றனர் விரிவாக.

பிரசாந்த் கிஷோரின் 'ஐபேக்' என்ட்ரி... தி.மு.க-வுக்கு சாதகமா, சிக்கலா?

``இந்தச் சர்ச்சைகள் ஒருபுறம் இருந்தாலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளில் தங்களுக்குச் சாதகமாக எதுவும் அமையாததில் மிகுந்த கொந்தளிப்பில் இருக்கிறார் ஸ்டாலின்" என விவரித்த தி.மு.க சட்டத்துறை பிரமுகர் ஒருவர், `` டிசம்பர் 8-ம் தேதி மாவட்டச் செயலாளர்கள், எம்.பி-க்கள், எம்.எல்.ஏ-க்கள் பங்கேற்ற கூட்டத்தில், சட்டத்துறையின் முக்கியப் பிரமுகர் ஒருவரைப் பேச வைத்தார் ஸ்டாலின்.

அந்தக் கூட்டத்தில் பேசிய சட்டத்துறை நிர்வாகி, ` உள்ளாட்சித் தேர்தலை சட்டரீதியாக தடுப்போம். உச்ச நீதிமன்றத்துக்குச் செல்வதால் பல கோடிகள் செலவாகிறது. உங்கள் ஒத்துழைப்பு வேண்டும்' எனக் கூறினார். ஆனால், எதிர்பார்த்தபடி கழகத்துக்குச் சாதகமாக எதுவும் அமையவில்லை. மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அந்தப் பிரமுகரைப் பேசவைத்தது குறித்தும் சில சீனியர்கள் கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றத்தில் எதிர்பார்த்த தீர்ப்பு வராததால், அதிருப்தியில் இருக்கிறார் ஸ்டாலின்.

அண்ணா அறிவாலயம்
அண்ணா அறிவாலயம்

இப்போதும், அந்தச் சட்டத்துறை பிரமுகர் தானாகப் போய், ` உள்ளாட்சித் தேர்தலில் குழு போட்டு வேலை பார்க்கிறேன்' எனக் கூறி, தலைமையிடம் ஒப்புதல் வாங்கிவிட்டார். அவர் நியமித்த ஆட்களும் அவருக்கு மிகவும் வேண்டியவர்கள். இதை சட்டத்துறையின் முக்கிய நிர்வாகிகள் யாரும் ரசிக்கவில்லை. இதுதொடர்பாக, கழகத்தின் சட்டத்துறை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட்ட முக்கிய நிர்வாகி ஒருவர், ` உழைப்பவனைத் தேடிக் கண்டுபிடித்து இயக்கம் நடத்தினால் பலனுண்டு. கிடைத்தவனைக் கொண்டு நடத்தினால் பலனில்லை' என அண்ணாவின் மேற்கோளைப் பதிவிட்டார். இந்தக் கருத்தை இதர வழக்கறிஞர்களும் ஆமோதித்துள்ளனர்.

`இப்படியே போனால், உள்ளாட்சியிலும் எதுவும் தேறாது' எனக் கொதிப்போடு பேசியுள்ளனர். இந்தத் தகவல்களை எல்லாம் தலைமையிடம் கொண்டு சேர்க்கும் வேலைகளிலும் சிலர் இறங்கியுள்ளனர்" என்றார் ஆதங்கத்துடன்.

அடுத்த கட்டுரைக்கு