திருப்பூரை தலைமையிடமாகக்கொண்டு இயங்கிவருகிறது ‘பவர் பில்டர்ஸ்’ நிறுவனம். இந்த நிறுவனம், தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறையில் பதிவு பெற்ற முதல் வகுப்பு குத்தகைதாரராக இருந்து பல கான்ட்ராக்டுகளை எடுத்துச் செய்துவருகிறது. ஒவ்வொரு வருடமும் ஒப்பந்ததாரருக்கான பதிவைப் புதுப்பித்துக்கொண்டால் மட்டுமே, தொடர்ந்து டெண்டர்களில் கலந்துகொண்டு பணிகளை எடுத்துச் செய்ய முடியும். அந்தவகையில், 2019-2020-ம் ஆண்டுக்காக ஒப்பந்ததாரர் பதிவைப் புதுப்பிக்க பவர் பில்டர்ஸ் நிறுவனம் விண்ணப்பிக்க, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக இழுத்தடித்த பிறகே பதிவு புதுப்பிப்பு செய்து கொடுக்கப்பட்டிருக்கிறது. முன்னாள் அமைச்சர் தரப்புக்கு ஆதரவாகப் போகாததாலும், அதிகாரியின் பழிவாங்கும் நோக்கமும்தான் இதற்கெல்லாம் முழுக்காரணம் என பகிரங்கங்கமான குற்றச்சாட்டை பவர் பில்டர்ஸ் நிறுவனம் தரப்பிலிருந்து வைத்துள்ளனர்.

இது குறித்து பவர் பில்டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான நல்லா கவுண்டரிடம் பேசினோம். ``எங்களது நிறுவனமானது கிளாஸ்-1 குத்தகைதாராராக இருந்து தமிழ்நாடு, கர்நாடகாவில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைகளின் பல டெண்டர்களை எடுத்துச் செய்துவருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒப்பந்தராதர் பதிவைப் புதுப்பித்துக்கொள்ள வேண்டுமென்கிற அடிப்படையில் 2019-20-ம் ஆண்டுக்கான பதிவைப் புதுப்பித்துக்கொள்ள, பதிவுக்குத் தேவையான அனைத்து ஆவணங்களையும் 7.08.2019 அன்று சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்துக்கு அனுப்பிவைத்திருந்தோம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதிகாரிகள் நாங்கள் அனுப்பிய ஆவணங்களை நன்றாக ஆய்வு செய்யாமல், பொய்க் காரணங்களைக் கூறி எங்களது விண்ணப்பத்தை நிராகரித்தனர். ஏற்கெனவே இருந்த எங்களுடைய பதிவைத் தற்காலிகமாக ரத்துசெய்ததோடு, ரத்துசெய்த தகவலை நெடுஞ்சாலைத்துறையின் எல்லா அலுவலகங்களுக்கும் அனுப்பிவைத்தனர். பதிவு நடப்பில் இல்லையென்றாலே, எந்தவோர் ஏலத்திலும் கலந்துகொள்ள முடியாதே! அப்படியிருக்க, திட்டமிட்டே எங்களை அசிங்கப்படுத்தி, அவமானப்படுத்தியுள்ளனர்.

நாங்கள் இரண்டு வருடங்களாக எந்த வேலையும் செய்யவில்லை, எந்த டெண்டரிலும் கலந்து கொள்ளவில்லை என்று காரணம் கூறி எங்களுடைய பதிவை நீக்கம் செய்துள்ளனர். ஆனால், 26.07.2017 அன்று கோவையில், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற மூன்று ஏலத்தில் கலந்துகொண்டதற்கான வைப்புத் தொகை செலுத்திய வங்கி வரைவோலை நகலை இணைத்து அனுப்பியிருந்தோம். அதை நினைவுபடுத்தி, மீண்டும் ஒருமுறை 30.10.2019-ல் கடிதம் எழுதி அந்த வங்கி வரைவு ஓலை ஒளி நகலையும் சேர்த்து அனுப்பியிருந்தோம். இருந்தும் சுவற்றில் அடித்த பந்தைப்போல 15.11.2019 அன்று விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக பதில் அனுப்பினர். தொடர்ந்து எங்களது தரப்பு விளக்கத்தைத் தெரியப்படுத்தி 13.12.2019 அன்று மறுபடியும் கடிதம் எழுதினோம்.
அதன் பிறகு ஏலத்தில் கலந்துகொண்டதற்கான சான்றுகளோடு, ரூ.500-ஐ கட்டணமாக வங்கி வரைவு ஓலை அனுப்பச் சொன்னார்கள். அனுப்பினோம். ஆனால், பதில் கடிதத்தில் அபராதத் தொகை உரிய வடிவில் இல்லை என ஏதேதோ காரணங்களைச் சொல்லி பதிவு புதுப்பித்தல் நிராகரிக்கப்படுகிறது என பதில் கொடுத்தார்கள். பலகட்ட போராட்டத்துக்குப் பிறகு, முறையீட்டுக்குப் பிறகு 6.10.2020 அன்று புதுப்பித்தல் மனுவை சமர்ப்பியுங்கள் என்று ஒரு கடிதம் அனுப்பினார்கள். பலமுறை ஆவணங்களைச் சமர்ப்பித்திருப்பதால் மீண்டும் ஒருமுறை சமர்ப்பிக்கவேண்டிய சூழல் எழவில்லை என பதில் அனுப்பினோம். பல கடிதங்கள், பல பதில்கள் என இரண்டு வருட போராட்டத்துக்குப் பிறகே பதிவு புதுப்பிக்கப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
திருப்பூர் பூலவாடி சாலையில் மேம்பாலம் கட்டும் பணிக்கு 18.5.2018 அன்று நடைபெற்ற ஏலத்தில் கலந்துகொண்டோம். சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் (நெ) அலுவலகத்தில்தான் இந்த ஏலம் நடைபெற்றது. அப்போது அங்கு கண்காணிப்பு பொறியாளராக இருந்தவர் வளர்மதி என்பவர். அதுமட்டுமல்லாமல், 19.12.2018 அன்று மேற்படி அலுவலகத்தில் நான்கு வேலைகளுக்கு ஏலம் நடைபெற்றது. எங்களை 2:30 மணி வரை காக்கவைத்துவிட்டு, அதன் பிறகு ஏலப்பெட்டியை வளர்மதி அவர்கள் தனது அறையிலேயே வைத்து, உள் தாளிட்டு பூட்டிக்கொண்டார். 3 மணிக்கு ஏல நேரம் முடியும் வரை திட்டமிட்டு எங்களை ஏலத்தில் கலந்துகொள்ள முடியாதபடி தந்திரமாக விரட்டியடித்துவிட்டார். இந்த ஏலத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும், ஏலம் ரத்து செய்யப்பட்டு மறு ஏலம் வைக்கப்பட வேண்டுமெனவும் கலெக்டர், தலைமைச் செயலாளருக்கு அப்போதே கடிதம் அனுப்பினோம்.

இப்படி நாங்கள் பலமுறை சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் கண்காணிப்பு பொறியாளர் (நெ) அலுவலகத்தில் நடைபெற்ற பல ஏலங்களில் கலந்துகொண்டிருக்கிறோம். அதேபோல, ஒரு குறிப்பிட்ட வேலைக்கான ஏலத்தில் நாங்கள் கலந்துகொண்ட போது, முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு வேண்டப்பட்ட குத்தகைதாரருக்கு அதை விட்டுக் கொடுக்கச் சொல்லியும், அமைச்சர் தரப்பை சந்திக்கச் சொல்லியும் வளர்மதி எங்களிடம் கேட்டார். அதை நாங்கள் பொருட்படுத்தவேயில்லை. இதையெல்லாம் மனதில்வைத்தே திட்டமிட்டு, காழ்ப்புணர்ச்சியால் வன்மத்துடன் எங்கள் நிறுவனத்துக்கு இரண்டு ஆண்டுகளாக பதிவைப் புதிப்பித்துக் கொடுக்காமல், எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதிக்கச் செய்து, கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியதோடு, பெரும் பொருளாதார நஷ்டத்தை எங்களுக்கு ஏற்படுத்தியுள்ளனர். எனவே கண்காணிப்புப் பொறியாளர் வளர்மதிமீது துறைரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும், எனக்கு ஏற்பட்ட நஷ்டத்துக்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாயை வளர்மதியின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் நெடுஞ்சாலைத்துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். தமிழக அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், நீதி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்போம். அதற்கும் தயாராகிவருகிறோம்!” என்றார்.
சேலம் நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் (நெ) கண்காணிப்பு பொறியாளராக இருந்த வளர்மதி தற்சமயம், திருப்பூர் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்புப் பொறியாளராக இருந்துவருகிறார். இந்த விவகாரம் சம்பந்தமாக விளக்கம் கேட்டு அவரிடம் பேசினோம். ``சம்பந்தப்பட்ட நிறுவனத்தைச் சேர்ந்தவங்க ரெஜிஸ்ட்ரேஷன் ரெனிவலுக்கான சரியான ஆவணங்களை இணைக்காம, வெறும் ரெனிவல் அப்ளிகேஷனை மட்டுமே கடிதம் மூலமாக எங்களுக்கு அனுப்புனாங்க. அதனால உரிய வடிவில் அப்ளிகேஷனை அனுப்பச்சொல்லி சொல்லியிருந்தோம். ஒரு கான்ட்ராக்டருக்கு ரெஜிஸ்ட்ரேஷன் ரெனிவல் ரொம்ப முக்கியம்.
அப்படியிருக்க நேர்ல வந்து என்னென்ன ஆவணங்களை சப்மிட் செய்யணும்னு கேட்டு இருக்கலாமே! வீட்ல இருந்தே கடிதம் மூலமாக அனுப்பிக் கேட்டா, அதுக்கு என்ன பதிலோ அதைத்தானே கடிதத்துல கொடுக்க முடியும்? உரிய வடிவில் இல்லைன்னு கொடுத்திருந்தோம். கோயம்புத்தூர்லயும், எங்க ஆபீஸ்லயும் டெண்டர்ல கலந்துருக்கேன்னு அவங்க சொன்னா, நாங்க அதற்கான ஆவணங்களைத் தேடி ரெனிவல் செய்யணுமா! அப்ளிகேஷனோட அவங்கதானே அட்டாச் செஞ்சிருக்கணும்... முறையான ஆவணங்களை அவங்க கொடுத்த பின்னாடி நாங்க ரெனிவல் செஞ்சு கொடுத்துட்டோம். மற்றபடி வேற எந்த உள்நோக்கத்தோடயும் நான் செயல்படலை” என்றார்.