Published:Updated:

குடிக்கத் தண்ணீர் கேட்ட பத்திரிகையாளர்; சர்ச்சையான சட்டப்பேரவை சார்புச் செயலாளரின் பதில்!

சட்டப்பேரவை நூற்றாண்டு விழா
சட்டப்பேரவை நூற்றாண்டு விழா

சட்டப்பேரவை நூற்றாண்டு விழாவில் செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் குடிக்கத் தண்ணீர் கேட்டதற்குச் `செத்தால் சாவுங்கள்’ என்று கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் நூற்றாண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டார். இவர்கள் மட்டுமல்லாமல், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவில் அதிமுக சார்பில் யாரும் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா
தமிழ்நாடு சட்டப்பேரவை நூற்றாண்டு விழா
நன்றி: பொதிகை
தமிழ்நாடு சட்டப்பேரவை  நூற்றாண்டு விழா: 1921 முதல் 2021 வரை..! - ஒரு நூற்றாண்டு வரலாறு

ஜனாதிபதி கலந்துகொள்ளும் விழா என்பதால் சட்டமன்றத்தைச் சுற்றி பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த விழாவில் கலந்துகொள்ள சில செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்துக்கு முன்பாக பத்திரிகையாளர்களை கலைவாணர் அரங்கிலிருந்து செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் வாகனங்களில் சட்டமன்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அங்கு அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் அமரவைக்கப்பட்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பத்திரிகையாளர் ஒருவர் பேரவையின் சார்புச் செயலாளர் பால சீனிவாசனிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டிருக்கிறார். அதற்கு அவர் கூறிய பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பத்திரிகையாளரிடம் பேசினோம். ``நாங்கள் அனைவருமே மூன்று மணி நேரத்துக்கு முன்பாகவே நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்குச் சென்றுவிட்டோம். எனக்கு தண்ணீர் தாகம் எடுத்தது. அந்தப் பகுதியில் எந்த இடத்திலும் தண்ணீர் இல்லை. அங்குள்ள பலரிடமும் தண்ணீர் கேட்டும் 'இல்லை' என்ற பதிலே வந்தது. அந்த இடத்துக்கு வந்த பேரவையின் சார்புச் செயலாளர் பால சீனிவாசனிடம், `குடிநீர் வசதி செய்யவில்லையா?’ என்று கேட்டேன். `பாதுகாப்பு நடவடிக்கையாகத் தண்ணீர் எதுவும் ஏற்பாடு செய்யவில்லை’ என்று கூறினார். `தண்ணீர் தாகம் எடுத்தால் என்ன செய்வது?’ என்று மீண்டும் அவரிடம் கேட்டேன். `நாங்கள் என்ன செய்வது?’ என்று கூறினார். `அப்படியானால், தாகமெடுத்துச் செத்தால் கவலை இல்லையா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், `செத்தால் சாவுங்கள்... கவலை இல்லை’ என்று பதிலளித்தார். அவரின் பதில் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கிருந்த காவலர்கள் அவரை அனுப்பிவிட்டு எங்களுக்குத் தண்ணீர் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்" என்று சொன்னார்.

பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்
பத்திரிகையாளர் சங்கம் கண்டனம்

இந்த விவகாரம் தொடர்பாக, செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம். ``பத்திரிகையாளர்களை கலைவாணர் அரங்கத்திலிருந்து தலைமைச் செயலகத்திலுள்ள பத்திரிகையாளர் அரங்குக்கு அழைத்து வந்தோம். அங்கு வந்ததுமே சட்டப்பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்நாக்ஸ் மற்றும் குடிநீரைப் பத்திரிகையாளர்களுக்கு வழங்கினோம். பின்னர் அனைவரையும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்களில் அமரவைத்துவிட்டுக் கிளம்பிவிட்டோம். அதிக பாதுகாப்புள்ள இடம் என்பதால் வளாகத்திலிருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட யாருக்குமே தண்ணீர் பாட்டில்கள் கொடுக்கப்படவில்லை. உள்ளே எதையும் எடுத்துச் செல்ல அனுமதியும் கிடையாது. நிகழ்ச்சி முடிந்ததுமே மீண்டும் பத்திரிகையாளர்களுக்குத் தேவையான அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டன. அந்த இடத்தில் அப்படி ஒரு நிகழ்வு நடந்ததே மிகத் தாமதமாகத்தான் தெரியவந்தது" என்று கூறினார்.

இது குறித்து விளக்கம் கேட்க சட்டப்பேரவை செயலாளரையும், சார்பு செயலாளரையும் பலமுறை தொடர்புகொள்ல முயன்றும், அவர்களைத் தொடர்புகொள்ள முடியவில்லை. அவர்கள் விளக்கம் தரும்பட்சத்தில் அவர்கள் தரப்பு விளக்கத்தையும் பதிவுசெய்யத் தயாராக இருக்கிறோம்.

அடுத்த கட்டுரைக்கு