Published:Updated:

`காங்கிரஸ் சொத்தை ராணா கபூருக்கு விற்றாரா?!' - பிரியங்காவை வட்டமடிக்கும் ரூ.2 கோடி ஓவிய சர்ச்சை

பிரியங்கா காந்தி
பிரியங்கா காந்தி

``நீங்கள் ராஜீவ் காந்தியின் ஓவியத்தை வாங்குவதற்கு விரும்புகிறீர்கள் எனத் தெரிகிறது. உங்கள் ஆர்வத்தைக் கோடிட்டுக் காட்டி பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு நேரடியாக எழுதுமாறு நான் பரிந்துரைக்கிறேன்."

வாராக்கடன் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாக, கடந்த சில மாதங்களாக மிகப்பெரிய சரிவைச் சந்தித்து வந்த எஸ் வங்கி, தற்போது ரிசர்வ் வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ்க் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரம் வங்கியில் நம்பிக்கையோடு டெபாசிட் செய்யும் எளிய மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ் பேங்க் நிதிச்சுமையில் சிக்கியது தேசிய அளவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வங்கியை மீட்டெடுக்கும் நோக்கில் ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் மும்பையில் உள்ள எஸ் பேங்கின் நிறுவனர் ராணா கபூர் மற்றும் அவரின் மகள்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் அமலாக்கத்துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

ராணா கபூர்
ராணா கபூர்

இதற்கிடையே, எஸ் வங்கி விவகாரம் வெளிவந்தபோது பேசிய மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ``எஸ் வங்கி வீழ்ச்சிக்கு ஐக்கிய முற்போக்கு அரசே காரணம்" எனக் கூறினார். இதில் ஒருபடி மேலே சென்று, பா.ஜ.க-வின் ஐடி விங் தலைவர் அமித் மால்வியாவோ, ``இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு நிதிக் குற்றமும் காங்கிரஸ் தலைவர்கள் குடும்பத்தோடு, ஆழமான தொடர்பைக் கொண்டுள்ளது. மல்லையா, சோனியா காந்திக்கு விமான டிக்கெட்டுகளை அனுப்புவார்.

மன்மோகன் சிங் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருடன் மல்லையா தொடர்பில் இருந்தார். நீரவ் மோடியின் திருமண நகைப் பிரிவை ராகுல் காந்தி திறந்து வைத்தார். இப்போது பிரியங்கா காந்தியிடம், ராணா கபூர் ஓவியம் வாங்கியுள்ளார்" எனக் கூறி அதிர்ச்சி கொடுத்தார். முதல் முறையாக இந்தக் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தவர் இவர்தான்.

தப்பிச் செல்ல முயன்ற மகள்.. நீதிமன்றத்தில் கண்ணீர்விட்ட தந்தை! -`எஸ் வங்கி' விவகாரத்தில் இறுகும்பிடி

இது உண்மையா என்பது தெரியாதபட்சத்தில் தற்போது, பிரியங்கா காந்தி ராணா கபூருக்கு ஓவியம் விற்பனை செய்தது உறுதியாகும் வகையில் கடிதமும், செக் ஒன்றையும் இந்தியா டுடே நாளிதழ் வெளியிட்டுள்ளது. மே 1, 2010-ல் காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா, ராணா கபூருக்கு ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``நீங்கள் ராஜீவ் காந்தியின் ஓவியத்தை வாங்குவதற்கு விரும்புகிறீர்கள் எனத் தெரிகிறது. உங்கள் ஆர்வத்தைக் காட்டி பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு நேரடியாகக் கடிதம் எழுதுமாறு நான் பரிந்துரைக்கிறேன்" என எழுதப்பட்டுள்ளது.

இதன்பின் ராணா கபூருக்கு ஜூன் 4, 2010 அன்று பிரியங்கா காந்தி வாத்ரா எழுதிய கடிதத்தில், ``எம்.எஃப். உசேன் வரைந்த என் தந்தை ராஜீவ் காந்தியின் உருவப்படம், 1985-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நூற்றாண்டு விழா விழாவில் அவருக்கு வழங்கப்பட்டது. இதன் உரிமை எனது வசம் உள்ளது.

ஓவியம்
ஓவியம்
indiatoday

ஜூன் 3, 2010 தேதியிட்ட ஒரு கடிதத்தின் ரசீதையும் ஜூன் 3, 2010 தேதியிட்ட காசோலை மூலம் உங்கள் கட்டணத்தையும், ஹெச்.எஸ்.பி.சி கணக்கில் இருந்து ரூ.2 கோடி வரவு வைக்கப்பட்டதையும் நான் ஒப்புக்கொள்கிறேன்" என எழுதப்பட்டுள்ளது. இந்தக் கடிதம் தற்போது காங்கிரஸுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது எனக் கூறப்பட்டாலும், காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அபிசேக் சிங்வி இதுதொடர்பாகக் கூலாகப் பேசியுள்ளார்.

அதில், ``ஆம், எம்.எஃப்.ஹுசைன் ஓவியம் ரூ.2 கோடிக்கு விற்கப்பட்டது. எம்.எஃப்.ஹுசைன் கைவண்ணத்தில் உருவாகிய ராஜீவ் காந்தியின் உருவப்படத்தைக் காந்தி குடும்பத்தினர் 2010-ல் ராணா கபூருக்கு விற்றனர். ரூ. 2 கோடியும் காசோலையாகப் பெறப்பட்டது. ஆனால், இந்தத் தகவல் பிரியங்கா காந்தியால் வருமான வரி தாக்கலின்போது, முழுமையாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. நீங்கள் இதைவிட வெளிப்படைத்தன்மையை எதிர்பார்க்கிறீர்களா?" என்று எதிர்க் கேள்வி எழுப்பியுள்ளார்.

`கடனில் முத்தெடுத்த எஸ் பேங்க் ராஜ தந்திரி!’ - ராணா கபூரின் மோசடிகளைப் பட்டியலிட்ட அமலாக்கத்துறை

ஆனால், அமலாக்கத்துறை வட்டாரமோ, ``இந்த ஓவியம் காங்கிரஸ் கட்சியின் சொத்து. பிரியங்கா காந்திக்கு இதன் உரிமை வராது. ராணா கபூர் பிரியங்கா காந்தி வாத்ராவுக்கு வழங்கிய பணம் குற்றத்தின் மூலம் அவர் ஈட்டிய பணம். ஓவியத்தின் உண்மையான செலவு யாருக்கும் தெரியாது. ஆனால், அதை ராணா கபூர் ரூ.2 கோடிக்கு வாங்கியுள்ளார். ராணா கபூர் சொத்துகளில் முதலீடு செய்த ஒவ்வொரு தொகையும் ஒரு குற்றத்தின் தொடர்ச்சியாகும். இந்த ஓவியத்தை வாங்க ரூ.2 கோடி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

ராணா கபூரிடம் இதுபோன்ற 40 நேர்த்தியான ஓவியங்கள் உள்ளன. ஒவ்வொரு உருவப்படங்களை வாங்கும்போதும், ​​மதிப்பீட்டுக்காக நிபுணர்களிடமிருந்து சான்றிதழ்களைப் பெற்றுள்ளார். ஆனால், அவர் பிரியங்கா காந்தி வாத்ராவிடம் வாங்கிய ஓவியத்துக்கு எந்த நிபுணரிடமிருந்தும் சான்றிதழ் எதுவும் பெறவில்லை" என்று இந்தியா டுடேவுக்குப் பேசியுள்ளனர். மேலும் ராணா கபூர் பிரியங்கா காந்தியிடமிருந்து வாங்கிய ஓவியம் தொடர்பாக அமலாக்க இயக்குநரகம் விசாரணையைத் தொடங்கியுள்ளது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

News and photo credit - indiatoday

நெருக்கடியில் `எஸ் பேங்க்’ - திருப்பதி தேவஸ்தானத்தின் ரூ.1,300 கோடி தப்பியது எப்படி?
அடுத்த கட்டுரைக்கு