Published:Updated:

`படிக்கவைத்து பட்டதாரி ஆக்கிய எம்.ஜி.ஆரா துரோகி?’ - துரைமுருகனைக் கண்டித்த ஓ.பி.எஸ்

``எம்.ஜி.ஆர் என் இதயக்கனி’ என அண்ணா சொன்னார். அவர் நம்பிக்கை துரோகியா? துரைமுருகனைப் படிக்கவைத்து பட்டதாரி ஆக்கினார். திரைப்படங்கள் மூலம் திராவிடக் கொள்கைகளைப் பரப்பி திமுக ஆட்சிக்குவரக் காரணமாக இருந்த எம்.ஜி.ஆரா நம்பிக்கை துரோகி?’’

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், ‘``எந்த கொம்பாதி கொம்பனாலும் அதிமுக-வை அசைக்க முடியாது. உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அமோக வெற்றிபெறும். சட்டமன்றப் பொதுத் தேர்தலின்போது, தி.மு.க கொடுத்த வாக்குறுதிகள் காற்றில் பறந்துகொண்டிருக்கின்றன. காலையில் பேப்பரைத் திறந்தால் அனைத்துப் பக்கங்களிலும் கொலை, கொள்ளை செய்திகள்தான் இருக்கின்றன. பூரா ரௌடிகளும் தமிழகத்துக்கு வந்துவிட்டார்கள். ஈஸியாக வழிப்பறி செய்யலாம். பட்டப்பகலில் கொலை செய்யலாம் என்ற நிலை இருக்கிறது. நாம் அறிக்கைவிட்ட பிறகு மூன்றாயிரம் ரௌடிகளைப் பிடித்துவிட்டோம். நான்காயிரம் ரௌடிகளைப் பிடித்தோம் என்று சாதனையாகச் சொல்லிக்கொள்கிறார்கள்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

துரைமுருகன் எம்.ஜி.ஆரைப் பற்றி நாகூசாமல் அவதூறாகப் பேசியிருக்கிறார். அவருக்கு நாங்கள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். `எம்.ஜி.ஆர் என் இதயக்கனி’ என அண்ணா சொன்னார். அவர் நம்பிக்கை துரோகியா? ஏன், துரைமுருகனைப் படிக்கவைத்து பட்டதாரி ஆக்கினார். திரைப்படங்கள் மூலம் திராவிடக் கொள்கைகளைப் பரப்பி தி.மு.க ஆட்சிக்குவர காரணமாக இருந்த எம்.ஜி.ஆரா நம்பிக்கை துரோகி? மேடையில் எல்லோரும் சிரிக்க வேண்டும் என்பதற்காக நாகூசாமல் பேசக் கூடாது. மீண்டும் இந்தக் கூட்டத்தின் வாயிலாக துரைமுருகனுக்குக் கண்டனத்தை தெரிவிக்கிறோம்’’ என்றார் ஓ.பன்னீர்செல்வம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு