உலகப் பொதுமறை இயற்றிய திருவள்ளுவருக்கு ஒரு குறிப்பிட்ட அடையாளம் பூசப்படுவதாக சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. வெண்ணிற ஆடையில், தலையில் கொண்டை, தாடியுடன் ஒரு கையில் எழுத்தாணி மற்றொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருக்கும் படமே தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவரின் படம். ஓவியர் வேணுகோபால் சர்மாவால் இந்த ஓவியம் வரையப்பட்டது.
கடந்த 2019-ம் ஆண்டு பா.ஜ.க-வின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் காவி உடையணிந்த திருவள்ளுவரின் புகைப்படம் பகிரப்பட்டது. இதற்குப் பல்வேறு தளங்களிலிருந்தும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. அடுத்ததாக, 2020-ம் ஆண்டு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் காவி உடையில் திருவள்ளுவர் இருப்பது போன்ற படத்தைப் பகிர்ந்தார். இந்தச் செயலுக்கும் கடும் எதிர்ப்பு கிளம்பவே அந்தப் படத்தை நீக்கி, மீண்டும் வெள்ளை நிற உடையில் இருந்த படத்தைப் பதிவேற்றியிருந்தார். இப்படி திருவள்ளுவரின் உடை குறித்த சர்ச்சை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்த வகையில், எட்டாம் வகுப்பு சி.பி.எஸ்.இ பாடப்புத்தகத்தில், சர்ச்சைக்குரிய வகையில் திருவள்ளுவரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கிறது. இதில், திருவள்ளுவர் காவி உடை அணிந்து, தலையில் முடியில்லாமல் ஒரு சிறிய குடுமியுடன், நெற்றியில் திருநீறு பூசி, ருத்ராட்ச மாலை அணிந்திருப்பதுபோல படம் இடம்பெற்றிருக்கிறது. இந்தச் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துவருகின்றனர்.
இது குறித்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக ட்விட்டரில், ``சி.பி.எஸ்.இ 8-ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகம் ஒன்றில் அய்யன் திருவள்ளுவருக்கு ஆரிய அரிதாரம்! பா.ஜ.க அரசு அனுமதிக்கிறது; அடிமை அ.தி.மு.க அரசு வேடிக்கை பார்க்கிறது. ஆரிய வித்தைகளை எம் தமிழர் பண்பாட்டில் காட்ட எத்தனித்தால் தமிழகம் ஏற்காது; மானமுள்ள தி.மு.க பொறுக்காது. எச்சரிக்கை!" என்று தெரிவித்திருக்கிறார். மேலும், பல தரப்பிலிருந்ம் தொடர் எதிர்ப்புகள் எழுந்துவருகின்றன.